நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 28ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள்.

13012848_10156920900850637_8302552232857450992_n
நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் 28ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி.
திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும் தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.ஆனால் அன்னை பூபதி என்பவர் வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும்இ தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர். அவ்வாறு நோக்குவோரே அவரின் போராட்டத்தில் இருந்து தெறித்த அக்கினிப் பொறிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.
ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல ! அன்னைப் பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கெதிராக போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர். ஆகவேதான் அவரை போர்க்கோலம் பூண்ட அன்னை என்று நோக்குவதே சாலப் பொருத்தமானதாகத் தெரிகிறது.
நமக்கு போரில் வெற்றி வேண்டுமானால் வெற்றிக்கு வாய்ப்பான இடத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்க வேண்டும் என்பார் வள்ளுவர். யானையை முதலை வெல்ல வேண்டுமானால் அது நீருக்கு வரும்வரை முதலை காத்திருக்க வேண்டும். அதுபோல முதலையை யானை வெல்ல வேண்டுமானால் முதலை தரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது குறள் தரும் விளக்கம்.
இப்படி தன் பலத்தையும்இ மாற்றான் பலத்தையும் சீர் துக்கி இறுதியாக இந்திய இராணுவத்திற்கு எதிராக சத்தியப் போரொன்றைப் புரிவதே சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார் அன்னை பூபதி.
சத்தியம் நெருப்புப் போன்றது. அது உள்ளத்தில் மட்டும் இருப்பது ! நிராயுதபாணியாக நின்று நடாத்தப்படும் ஒரு போர். சத்தியத்தை ஓர் ஒப்பனைக்கான போர்வையாகப் போர்த்தியிருப்போர் நிஜமான சத்தியத்துடன் மோதினால் போலியான சத்தியப் போர்வை எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும்.
இந்த உண்மையை நன்கு கண்டு கொண்டு 1988ம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை என்ற இந்த வீரத்தாய் ! அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஒன்று யுத்தத்தை நிறுத்த வேண்டும் இரண்டு இந்திய சிறிலங்கா அரசுகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் ! இதற்காகவே அவர் உயிர் கொடுத்துப் போராட முன்வந்தார்.
இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை!அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது ! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.
அவரது மரணம் பொறி தட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதி யாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது !
அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது ! ஆன்மாதியான போராட்டத்தின் அதிர்வலைகள் கண்ணுக்குத் தெரியாமல் பரவிச் செல்பவை ! அவற்றின் சக்தி எந்தப் பலமுள்ள அரசையும் வேரோடு பிடுங்கி வீசிவிடும் சக்தி வாய்ந்தது. ரஸ்யர்களின் பட்டினி நெருப்பு உலகத்தை வெல்லத் துடித்த ஜேர்மனிய நாசிகளையே து}க்கி வீசியது ! காந்தியத்தின் பட்டினி நெருப்பு பிரித்தானிய அரசை இந்திய மண்ணிலிருந்து அகற்றியது ! இவைகள் ரஸ்யாவிலும்இ இந்தியாவிலும் மட்டுமே நடக்கும் அது தமிழீழத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
பஞ்ச பூதங்களில் அழுக்கில்லாதது நெருப்பென்று கூறுவார்கள். ஆனால் அந்த நெருப்பிடமும் ஒரு குறை இருக்கிறது. மற்றவைகளை எரிப்பதன் மூலம் தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டது நெருப்பு. எரிந்து போகும் அப்பாவிகள் இல்லாத இடத்தில் நெருப்புக்கும் இடமில்லை.
இந்த நெருப்புப் போலத்தான் இன்று உலகில் உள்ள அரசுகளின் இயல்பும். தம்மிடம் அழுக்கில்லை என்று புனிதம் பேசுவதில் அவற்றிற்கு இணையான புனித நெருப்புக்கள் இந்த உலகிலேயே கிடையாது. ஆனால் மற்றவர்களை எரித்து தாம் மட்டும் வாழ்வதில் அவை கொண்டுள்ள சுயநலம் இருக்கிறதே அதுவும் இந்த நெருப்பைப் போன்றதுதான்.ஈழத் தமிழினத்தை ஏமாற்றி அவர்களை எரிந்து போகும் விறகுகளாக்கி அதில் தான் நிலைபெற ஆசை கொண்ட சிறிலங்காவின் சுயநலம் நெருப்பு போன்றதுதான். அந்த நெருப்பு அணைந்து போகாமலிருக்க அடிக்கடி காற்றாக வீசி உதவிக் கொண்டிருக்கிறது இந்திய இராஜதந்திரமும் அதே வகையான நெருப்புத்தான்.
இந்த இரு நெருப்புக்களுடனும் தனியாக நின்று போராடியதுதான் அன்னை பூபதி என்னும் சத்திய நெருப்பு ! இந்த நெருப்பு மற்றவர்களை எரித்து தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டதல்ல ! அது தன்னைத்தானே அழித்து மற்றவர்களுக்கு ஆத்ம ஒளி கொடுப்பது. மற்றவர்களை அழிக்க வந்திருக்கும் ஆதிக்க நெருப்பை அடையாளம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்டது. அந்த வல்லமைதான் இந்திய இராணுவமே கட்டம் கட்டமாக தழிழீழ மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.
எப்போதுமே தேசங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியும் தேசம்! மற்றது கண்ணுக்குத் தெரியாத தேசம்! கண்ணுக்குத் தெரியும் தேசத்தை பகைவர்கள் ஆக்கிரமிக்கலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத தேசத்தை எந்தப் பகைவரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத தேசம் மக்களின் இதயங்களில் உருவாவது ! உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே முதலில் உருவானது மக்கள் இதயங்களில்தான். அதன்பின்புதான் அவை கண்ணுக்குத் தெரியும் தேசங்களாக உருவெடுத்தன.
அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும் அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் துக்கிப் போட்டது.
அன்னை பூபதி கண்களை மூட தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.
சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !
அந்த இலட்சியத் தாயின் நினைவாக சித்திரை மாதம் 19ம் திகதியை தமிழீழ தேசியத்தலைவர் தேசிய நாட்டுப்பற்றாளார் தினமாக பிரகடம் செய்தார்.
தாயக விடியலில் காற்றில் கலந்து தங்கள் உயிரை அர்பணித்து தாயகத்தைத் நெஞ்சில் தாங்கி பயணித்த அனைத்து நாட்டுப்பற்றாளர்களுக்கும், மாமனிதர்களுக்கும், வெளித் தெரியாது தேசவிடுதலைக்கு உழைத்த மக்களுக்கும் எமது வீரவணக்கங்கள்…!
நன்றி ஈழம்ரஞ்சன்
தியாக தீபம் அன்னை பூபதி நினைவான விபரணம்

தியாகதீபம் அன்னை பூபதி நினைவு நிகழ்வு தமிழீழம்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net