விஷாலின் நெகிழ்ச்சி கடிதம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்காக நடிகர்சங்கம் சார்பாக நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
vishal11

கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தென்னிந்திய நடிகர் சங்கம், சேப்பாக்கம் மைதானத்தில் நடத்திய ‘லெபரா நட்சத்திரகிரிக்கெட்’ போட்டி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் மொழி, அரசியல், புகழ், வெற்றி இவைகள் அனைத்தையும் மறந்து நாங்கள் திரைக் கலைஞர்கள் என்ற உணர்வோடு அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களான ரஜினி, கமல், உள்ளிட்டஅனைத்து நடிகர் நடிகைகள், நாடகக் கலைஞர்கள் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களைச் சார்ந்த ஜாம்பவான்களான பாலகிருஷ்ணா, வெங்கடேஷ்,நாகார்ஜூனா, ராஜேந்திர பிரசாந்த், மம்மூட்டி, சிவராஜ் குமார், அம்பரீஷ், ரவீச்சந்திரன், சுதீப் மற்றும் பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தது மிக மிக முக்கியமான வரலாற்றுப் பதிவாகும்.

நடிகர் சங்கத்தை எங்கள் முன்னோர்கள் எந்த நோக்கத்துடன் ஆரம்பித்தார்களோ அதை நிரூபித்து, ஒற்றுமையின் உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்ததை உலகமெங்குமுள்ள பலகோடி தமிழ் மக்கள் தொலைக்காட்சி மூலமாகக் கண்டு மகிழ்ந்து எங்களுக்கு இன்றுவரை பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர்களின் ஆத்மார்த்தமான இந்த பாராட்டுக்கள் எங்களை மேலும் செயல்பட ஊக்கப்படுத்துகிறது. இவை எங்களை எதிர்காலத்தில் வழிநடத்துவதாக நம்புகிறோம். எங்களது இந்த நல்ல நோக்கத்தை மக்களிடம் நேரடியாக ஒளிபரப்பிய “சன்” குழுமத்திற்கும், தினகரன் குழுமத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் அனைத்து மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்த்த பத்திரிகை, ஊடகங்கள் எங்களது விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்பிய சத்யம் சினிமாஸ், ஏ.ஜி.எஸ், பி.வி.ஆர், கமலா சினிமாஸ், கியூப் மற்றும் அனைத்து இணையதளங்களுக்கும் நன்றிகளையும் மற்றும் பாராட்டுதலையும்,தெரிவித்துக் கொள்கிறோம். கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி அளித்த தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் போலீஸ் ஆணையர் மேலும் எங்களுக்குஉறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள், மாநகராட்சி காவல் துறையினர், ரயில்வே துறையினர், விளம்பரதாரர்கள், உணவு மற்றும் போக்குவரத்துக்கு ஒத்துழைத்த நண்பர்கள், திரையுலக தயாரிப்பு நிர்வாகிகள், மக்கள் தொடர்பாளர்கள், நடிகர், நடிகைகள் மேலாளர்கள் அனைவருக்கும் எங்களதுஆத்மார்த்தமான நன்றிகள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எங்களை ஊக்குவித்த தயாரிப்பாளர்கள், பெப்சி அமைப்பினர், இயக்குநர் சங்கத்தினர் மற்றும் அனைத்து சங்கத்தின் நண்பர்களுக்கும் நன்றிகள். ரசிகர்களை குதூகலப்படுத்திய டிரம்ஸ் சிவமணி மற்றும் நடனக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. தங்களது கடின வேலைப்பளுவிற்கு இடையிலும் நேரத்தை ஒதுக்கி மூன்று வார காலம் முறையான பயிற்சிகள் மேற்கொண்டு விளையாடி ரசிகர்களை ரசிக்க வைத்த அனைத்து நடிகர் சகோதரர்களுக்கும் நன்றி. இவர்களுக்குப் பயிற்சி அளித்த கோச்சர் மற்றும் கோச் உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த பொறுப்பிற்கு நாங்கள் புதியவர்கள். நல்லது செய்ய வேண்டும் என்ற அதீதமான ஆர்வம் மட்டுமே எங்களிடம் முழுமையாக இருக்கிறது. இந்தநிகழ்வில் ஏதாவது குறைகள் நடந்திருந்தால் அது எங்களது கவனத்தை மீறி நடந்தவைகள். அவற்றைப் பொறுத்தருள வேண்டுகிறோம். எதிர்காலத்தில் சீர்செய்து கொள்வோம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளைக்காக தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள்,அறக்கட்டளை நிர்வாகிகள் கட்டிட குழு கண்காணிப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் எங்களது இதய பூர்வமான நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். எல்லாவற்றிக்கும் மேலாக நேரில் வந்து எங்களை ஊக்குவித்த அனைத்து ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் விஷால்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net