ஆவணப்படுத்தலும் தமிழர்களும்

e0ae86எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன.  ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை.  அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.  அதுபோலவே அனேகமானவர்கள் வெவ்வேறு பாடல்களின் ஊடாக அவரை நினைவுபடுத்திக் கொள்ளுவார்கள். 

மெட்டுகளை உருவாக்குவதில் அவர் பெற்றிருந்த அசாத்தியத் திறமை பற்றி அவரது மறைவுக்குப் பின்னர் வெளியான பல பதிவுகளில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.  அவர் இறந்துவிட்டாலும் அவர் இசையமைத்த பாடல்களினூடாக அவர் வாழ்ந்துகொண்டிருப்பார் என்று கிட்டத்தட்ட எல்லாருமே குறிப்பிடுகின்றனர்.  முன்னர் வாலி, கே. பாலசந்தர், சௌந்தர்ராஜன் ஆகியோரின் மரணங்களின் போதும் கூட இவ்வாறாகவே ஆறுதலடைந்து கொண்டிருந்தோம்.  ஆயினும், இவர்களின் மரணங்களோடு எத்தனையோ நினைவுகளும், அவர்கள் ஈடுபட்டிருந்த துறைகளில் அவர்களது நீண்ட கால அனுபவங்கள் பற்றியும் சொல்வதற்கு இருந்த ஏராளமான அறிவுகளையும் சேர்த்தே இழந்துவிட்டோம்.  ஒரு விதத்தில் ஆவணப்படுத்தல் பற்றிய அக்கறை இல்லாத ஒரு சமூகமாக நாம் இருக்கின்றோம் என்பதன் வெளிப்பாடே இது எனலாம்.  வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ளவர்கள், பொறுப்புணர்வுடன் அந்த அந்தத் துறைகளில் இருக்கின்ற மூத்தவர்களுடன் உரையாடி அதனைப் பதிவாக்கி வாய்மொழி ஆவணங்களாக்கலாம்.  அந்த ஆவணங்கள் பண்பாட்டு வரலாற்று எழுதியலுக்கான மிகப் பெரும் ஆதாரங்களாக அமையும்.

போர்க் காலத்தின்போது எழுந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும்விதமாக கலைத்துறை வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்கவேண்டும் என்று கூறப்பட்டபோது வின்ஸ்ரன் சர்ச்சில் கூறினாராம், நாம் போராடுவதே அவற்றின் வளர்ச்சிக்காகத் தானே, அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு எதற்காகப் போராடுவது என்று.  ஈழத்தமிழர்களின் ஆயுதப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் போராட்டத்திற்கான தேவைகள் அப்படியே தொடருகின்ற இன்றைய காலப்பகுதியில் ஈழத்தமிழர்கள் அவதானிக்கவேண்டிய விடயம் இது.  கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஒன்றிற்கான எதிர் நடவடிக்கையாகவும், தேச உருவாக்கம், தேசக் கட்டுமானம் ஆகியவற்றின் அங்கமாகவும் நாம் ஆவணப்படுத்தற் செயற்பாடுகளைப் பார்க்கலாம்.

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சியாக பத்தாண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் நூலக நிறுவனத்தினர் 2013ம் ஆண்டு “ஈழத்துத் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்” எனும் தொனிப்பொருளில் ஆவண மாநாடு ஒன்றினை நடத்தி இருந்தனர்.  ஆய்வரங்குகளுக்கான கட்டுரை சமர்ப்பிக்கவும், அவற்றுக்கான முன்வரைபை சமர்ப்பிக்கவும் கோரி அறிவித்தல் விடுக்கப்பட்டு அவற்றில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டு இந்த மாநாடு நடைபெற்றது.  எதிர்பார்த்த்தைவிட அதிகமான ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன் தன்னார்வலர்களின் கடுமையான உழைப்பும் சேர்ந்து மாநாட்டினை சிறப்பாக நிறைவேற்ற உதவியது.

இலங்கையில் நடைபெற்ற முதல் ஆவண மாநாடு ஆகவும், முதல் தமிழ் ஆவண மாநாடாகவும் இம்மாநாடே அமைகின்றது.  இம்மாநாடில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “தமிழ் ஆவண மாநாடு 2013: ஆய்வுக் கட்டுரைக் கோவை” என்கிற பெயரில் 644 பக்கங்களில் மலராக வெளியிடப்பட்டதுடன் அம்மாநாடு நூலக நிறுவனத்தின் தளத்தில் 15000 ஆவது மின்னூலாக பதிவேற்றப்பட்டு இலவசமாக வாசிக்கவும் கிடைக்கின்றது.  இந்தத் தொகுப்பில்

  1. “ஆவணப்படுத்தலும் தொழினுட்பமும்”, “
  2. வரலாறு, தொல்லியல், மரபுரிமை”,
  3. “நாட்டாரியல்”,
  4. “கலை”,
  5. “சமூகம்”,
  6. “தமிழ்மொழியும் இலக்கியமும்”,
  7. “நூலகவியல்”,
  8. “பண்பாடு”

ஆகிய எட்டு அரங்கங்களில் வாசிக்கப்பட்ட 48 கட்டுரைகள் இருக்கின்றன.  ஆவணப்படுத்தல் சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இம்மலர் அமைகின்றது.  நூலக நிறுவனத்தின் இது போன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டியது எமது சமூகக் கடமையாகும்.

இம்மலருக்கான இணைப்பு

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2013:_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88

நூலக நிறுவனத்தின் இணையத்தள முகவரி

http://noolahamfoundation.org/wiki/index.php?title=Main_Page

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

 

அருண்மொழிவர்மன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net