உறங்காத இரவு

13055371_993821440654625_6845284920967547756_n

இங்கு என்னதான் நடக்கிறது.
எங்கு பார்த்தாலும் காவற்துறையின் வாகனங்கள் தரித்துநிற்கின்றன.
புரட்சி ???
ஓ…. ஓ….. அவசரம் வேண்டாம்.

மார்ச் 30 ம் திகதியிலிருந்து ஏனிந்த இளைஞர்களும், குடிமக்களும் பரிஸ் குடியரசுச் சதுக்கத்தை கைப்பற்றி உறக்கமின்றிக் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். வழமைபோல் இவர்களும் பலிக்கடாக்களாக ஆகப்போகிறார்களா ?

சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.

1789 ல் இந்தத் தேசத்தில் அடிமட்டத் தொழிலாளர்களும், குட்டிப் பூர்சுவா புத்திஜீவிகளும் ஒன்றிணைந்து புரட்சிசெய்தார்கள். முடியாட்சியை வீழ்த்தி பலவீனமானதெனினும், தற்காலிகமானதெனினும் ஒரு மக்களாட்சியை நிறுவினார்கள். இறுதியில் புரட்சியின் வெற்றி பெருநிதியங்களின் கைகளில் சென்று வீழ்ந்ததே உண்மை.

ஜனவரி 1793; ல் 16வது லூயி மன்னனின் தலை கொய்யப்பட்டபோது, புராதன பிரபுக்களின் அனைத்து அதிகாரங்களுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டது. ஆனால், அடிமட்ட மக்களினதும், தொழிலாளர்களினதும் உயிர் குடித்து வாழந்த புரட்சியின் இறுதி விளைவை பெருநிதியங்கள் செரித்துக்கொழுத்தன.

1871 ல் பரிஸ் கொம்யூன் கிளர்ச்சி நீதியான கிளர்சிக்காரர்களின் படுகொலைகளுகளுடன் நிறைவடைந்தது. வெற்றியைக் கொண்டாடும் முகமாக பிரஞ்சுப் பூர்சுவா அரசாங்கம் “மோன்மார்த்ர்” குன்றில் தேவாலம் ஒன்றை அமைத்தது.

1968 மே மாதம் மக்கள் கிளர்ச்சி பிரான்சில் நடைபெற்றபோது அதை வழிநடத்தியவர்கள், தம்மை இடதுசாரிகளாகக் காட்டிக்கொண்டவர்கள் அரசியல், பொருளாதார அதிகாரங்களைக் கைப்பற்றிக்கொண்டு ஒதுங்கிப் பெருநிதியங்களின் செல்லப் பிள்ளைகளாகிவிட்டார்கள்.

அப்படியானால் இன்று இந்த நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயம் தான் என்ன ?
எதற்காக இளைஞர்களும், தொழிலாளர்களும், மற்றும் பல்வேறுபட்ட அமைப்புகளும் இரவிரவாக விழித்திருந்து பொதுவிடங்களில் கோசங்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள் ?

2012 ம் ஆண்டு பிரஞ்சுச் “சோசலிசக் கட்சி” ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட போது, மக்கள் ஓரளவு நிம்மதியடைந்து தமது பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பியிருந்தார்கள். வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனக் கனவு கண்டார்கள்.

ஆனால் நடந்ததோ வேறு விடயம்.

புதிய சோசலிச அரசாங்கம் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான மாற்றங்கள் எதனையும் கொண்டுவரவில்லை. பெருநிதியங்களின் கட்டற்ற போக்கிற்குத் தடையேதும் போடவில்லை. மாறாக தொழில்நிலையங்கள் மூடப்பட்டன. மேலும் பல சம்பளம் குறைந்த நாடுகளுக்கு நகர்த்தப்பட்டன. குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட தொழிலின்மைப் பிரச்சனைவேறு பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது. பல ஐரோப்பிய நாடுகளைப் போன்று பிரான்சும் பொருளாதாரத் தேக்க நிலைக்குள் தடுமாறுகிறது. தேசியக் கடன் என்றுமே திருப்பிக் கொடுக்க முடியாத அளவிற்கு மேலேங்கி நிற்கிறது. அறவிடும் வரிப்பணத்தின் கணிசமான பகுதி தேசியக் கடனின் வட்டியாகச் செலவிடப்படுகிறது.

அரசாங்கமோ பல்வேறு வழிகளில் மக்களைப் பிழிந்துகொண்டிருக்கிறது. வரிகட்டாத பங்குச் சந்தையின் நிறுவனங்களும், வங்கிகளும் பாரிய ஆதாயங்களைப் பெற்று குறிப்பிட்ட சில பெருநிதியக் கும்பல்களுக்கு மேலும் நிதி குவித்துக்கொண்டிருக்கின்றன. மக்கள் மேலும் மேலும் நவீன அடிமைகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தனது நான்கு வருடபதவிக் காலத்தில் இப்பிரச்சனைகளுக்கு எது விதத் தீர்வையும் கொண்டு வராத சோசலிச அரசாங்கம், பரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைப் பயன்படுத்தி அவசரகாலச் சட்டத்தைக் பிரகடனப்படுத்தியது மாத்திரமல்லாது, தற்போது தேவையற்ற விடயத்தில் அதை நீடித்தும் வருகின்றது.

பொருளாதார நெருக்கடியையும், இஸ்லாமியத்தீவிர வாதத்தையும் தனது வாக்குச் சந்தை வாய்ப்பாகப் பயன்படுத்தும் தீவிர வலது சாரிக்கட்சியான “தேசிய முன்ணணி” மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுக்கொண்டே செல்கிறது. முன்னொருகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தவர்களில் 80 வீதமானோர் தற்போது “தேசிய முன்ணணி” க்கு வாக்களிகத் தயாராக இருக்கின்றனர் என ஒரு கணிப்பபீடு கூறுகிறது. (ஐரேப்பா முழுவதிலுமே தீவிர வலதுசாரிக் கட்சிகளின் பலம் அச்சமூட்டும் அளவிற்குப் வளர்ந்து கொண்டு செல்கிறது)

இந்நிலையில்தான், அண்மையில் தொழில் தொடர்பான சட்டத் திருந்தமொன்றை பிரஞ்சுத் தொழிற்துறை அமைச்சர் பிரேரணை செய்தார். இச்சட்டத்திருந்தங்கள் முதலாளிகளுக்குச் சார்பானதாகவும், ஏற்கெனவே நொந்து போயுள்ள தொழிலாளர்களின் நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவும் அமைந்தது.

எரிநெருப்பில் தொழிற்துறை அமைச்சர் எண்ணையை வார்த்தார்.

அனைத்துத் தொழிற்சங்களும் திரண்டெழுந்தன. வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. ஆனால், அது அடையாள நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டது. வருங்காலத் தொழிலாளர்களாகப் போகும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள்.

“அனைத்துப் போராட்ங்களினதுமான ஒருமைப்பாடு” எனும் கோசம் முன்வைக்கப்பட்டது.
தீவிர இடதசாரிகள், குட்டிப்பூர்சுவா புத்திஜீவிகள், சூழல் பாதுகாப்புக் குழுமங்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், அனார்கிஸ்டுகள், வீடற்றவர்கள், வேலையற்றவர்கள்….. எனப் பல்வேறு பட்ட குழுமங்கள் ஒருமித்து தற்போது தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேலாக பரிஸ் குடியரசுத் திடலில் உறங்காத இரவுகளை அனுட்டித்து வருகின்றார்கள்.

இங்கு முக்கியமான விடயமொன்றைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். இங்கு வழிநடத்தல்காரர்கள் அல்லது தலைவர்கள் என்று யாருமில்லை. கிளர்ச்சியாளர்கள் பழையனவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது புரிகிறது. அரசியல் கட்சிகளின் ஊடுருவல்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். தினமும் பொது அரங்கில் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் அதிகாரம் பெறப்படுகின்றன.

மூன்று நாட்களுக்கு முன்னர், விசாவில்லாது தெருக்களில் குடியிருக்கும் ஏழு வெளிநாட்டவர்களைத் தற்காலிகமாகத் தங்கள் வீட்டில் குடியிருத்துவதற்கு முன்வந்தார்கள் கிளர்ச்சியாளர்களில் சிலர். மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது அந்த நிகழ்வு. மானிடம் இன்னமும் வாழ்கிறது என்ற உணர்வை ஒரு கணம் தந்தது.

பரிஸில் மட்டுமல்லாது புற நகரங்களிலும் இவ்வாறான “உறங்காத இரவு” கடைப்பிடிக்கப்படுகிறது. அரசாங்கம் ஏது செய்வது எனத் தெரியாது தவிக்கிறது. கள்ளப்பொறுமையைக் கடைப்பிடிக்கிறது. என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலை.

தன்னிலேயே தணிந்து விடுமா இந்த அசைவியக்கம் அல்லது மேலும் மேலும் வளர்ந்து பாரிய சமூக-பொருளாதார மாற்றமொன்றிற்கு இது வழிகோலுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
25.04.2016
( பலரறியப் பகிருங்கள். பிரான்சில் வசிப்பவர் என்றால் ஒரு தடவையேனும் “உறங்காத இரவிற்கு” வந்து பாருங்கள்.)
நன்றி வாசுதேவன்

13043535_991306420906127_7398046392782960254_n

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net