தனிஈழமா? போராட்டமா? கிளிநொச்சி சென்று பேசிப்பாருங்கள். மக்கள் அடித்து விரட்டுவார்கள். மனோ கணேசன் ஆவேசம்.

mano ganesanதேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் முதலாவது அமர்வு கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்:

கிளிநொச்சியில் இன்று சென்று தனிஈழம், ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசிப்பாருங்கள், அங்குள்ள மக்கள் உங்களை விரட்டியடிப்பார்கள். இதுவே இன்றைய வடக்கின் நிலை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு பேசிய அவர், இந்த நாட்டை எவராலும் பிளவுபடுத்த முடியாது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. நாட்டை பிரிக்கச் செய்வதற்கு வடக்கு மக்களும் தற்போது விரும்பவில்லை. இந்த நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளார்கள்.

வடக்கில் இன்று சென்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போம் அல்லது நாட்டைப் பிரிப்போம் என்று எவராவது கூறினால் பொலிஸார் அங்கு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அங்குள்ள மக்கள் அவர்களை அடித்து விரட்டிவிடுவார்கள்.

எனவே வடமாகாண மக்கள் நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறார்கள், மீண்டும் ஆயுதம் ஏந்தி போராட உள்ளனர் என்ற பீதியைக் கிளப்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்றும் மீட்கப்படுகின்றன. தென்னிலங்கையிலும் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன. அண்மையில்கூட லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டதோடு மஹியங்கனைப் பகுதியில் துப்பாக்கித் தொழிற்சாலை ஒன்றும் முற்றுகையிடப்பட்டது.

கடந்த காலங்களில் 1971ஆம் மற்றும் 89ஆம் ஆண்டுகளில் தென்னிலங்கையிலும் கலவரங்கள் இடம்பெற்றிருந்தன. அங்கு ஆயுதங்கள் தற்போது மீட்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் கலவரங்கள் இடம்பெறும் என்று கூற முடியும் அல்லவா. ஆனால் அவ்வாறு மக்கள் கூறுவதில்லை. ஆனால் வடக்கில் பழைய தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டால் தென்னிலங்கையில் பீதியை ஏற்படுத்தி இனவாதத்தை தூண்டுகிறார்கள்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரிடம் இனவாதம், மதவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் என்பவற்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன் – என்றார்.

பிரபாகரன்- ரணில் ஒப்பந்தத்தில் எனக்கு பாரிய சந்தகம் உள்ளது.

விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாகவும், உளப்பூர்வமாகவும் கைச்சாத்திட்டார்களா? என்ற சந்தேகம் எழுவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தலைமைகள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் ‘பண்டாரநாயக்க – செல்வநாயகம் இருவரும் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க – பிரபாகரன் ஆகியோர் சமாதன ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டனர்.

அந்த இரண்டு ஒப்பந்தங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுமாத்திரம் இல்லாமல் ஒப்பந்தம் குறித்து பேசிய, அதில் கைச்சாத்திட்டவர்கள் தொடர்பிலும் சந்தேகங்கள் எழுந்தன.

பண்டாரநாயக்க மற்றம் செல்வநாயகம் குறித்து தமிழ் சிங்கள மக்களிடையே பெரும் சந்தேகங்கள் இருந்தன. இவர்கள் இருவரும் உண்மையாக இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்களா? என்ற சந்தேகம் இருந்தது.

அதேபோல் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரபாகரன் தொடர்பிலும் பாரிய சந்தேகங்கள் இருக்கின்றன.

இவர்கள் இருவரும் உண்மையில், உள்ளார்த்தமாக சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்களா? என்ற சந்தேகம் நிலவுகின்றது.

அதேபோல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்களா? என்ற சந்தேகமும் இருக்கின்றது.

ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டவர்கள், சமாதானம் பேசியவர்கள் அதனை உயர்மட்டத்தில் மாத்திரம் வைத்துக் கொண்டனர். கீழ் மட்டத்திற்கு கொண்டுவரவில்லை. மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்கவில்லை. ‘பண்டா – செல்வா ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்டபோது நான் பிறந்திருக்கவில்லை.

ஆனால் ரணில் – பிரபா ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது நான் இருந்தேன். இதனால் இது குறித்து எனக்கு நன்கு தெரியும். சமாதன ஒப்பந்தம் குறித்து புலித்தரப்பினர் இது ஒரு ‘சமாதானப் பொறி’ என்று வெளிப்படையாக கூறினர். சமாதானத்தை யாரும் நம்பவில்லை. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் இருந்தனர்.

அதேபோல் தெற்கில் எதனைக் கூறினார்கள். இந்த சமாதான ஒப்பந்தத்தினால் ரணில் விக்ரமசிங்க முழு நாட்டையும் விற்று விட்டதாகவும், காட்டிக் கொடுத்து விட்டதாகவும் குற்றம் சுமத்தினர். இங்குள்ள இனவாதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

அதேபோல் அங்குள்ள இனவாதிகள் அவ்வாறு கூறினர். இவ்வறான இனவாத செயற்பாடுகளினால் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.’ என்றும் கூறினார்

Copyright © 8529 Mukadu · All rights reserved · designed by Speed IT net