துயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல்-சிதம்பரநாதன் ரமேஷ்

kunaaaகுணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு முதலான நாவல்களைக் கடந்து வெளிவந்த நாவலே அப்பால் ஒரு நிலம். ஈழத்தின் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சியின் வன்னிக்களமுனை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இந்நாவல் வேவுகாரர்களின் வாழ்வை உணர்வின் தளத்தில் சித்திரிக்கிறது. செங்கையாழியானின் ‘சாம்பவி’ வேவு புலிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் ஈழத்து நாவல் என்றாலும் அதில் யதார்த்தம் இருக்கவில்லை. உணர்வின் கூர்மையை விட கதை சொல்லியின் கற்பனையே அதில் விஞ்சி நின்றது. குணா கவியழகனின் இந்நாவல் சம்பவங்களின் வாயிலாக மக்களின், போராளிகளின் அனுபவங்களை உணர்வுத் தளத்தில் சித்திரிக்கிறது. வேவுப் போராளி ஏனைய போராளிகளில் வித்தியாசமானவன். அவனின் சிந்தனை மற்றவர்களின் சிந்தனைகளைப் போலிருக்காது. அவன் தனித்துவமானவன். தனக்கென எல்லைகளை வகுத்துக் கொண்டவன். போருக்கு பழக்கப்பட்டவன். துன்பங்களைச் சுமந்தவன். காதலை, காமத்தை கடந்து எதிர்காலத்தைச் சிந்திப்பவன். குடும்ப உறவுகளை கடந்து சிந்திப்பவன். தன்னலமற்றவன். தாயக வேட்கைமிக்கவன். இவ்வுணர்வுகளின் வடிவமே நாவலில் வரும் மணி, வீரா என்ற போராளிகள்.
கிளிநொச்சி களமுனைக்கு சென்று வேவு நடவடிக்கையின் போது போராளிகள் படும் அல்லல்களை குணா கவியழகன் உணர்வு பூர்வமாகவும் இதய சுத்தியோடும் விபிரிக்கிறார். களமுனைகளும் போராளிகளின் தலைவர்கள் வகுக்கும் வியூகங்களும் குணா கவியழகன் மூளையின் செயற்றிரன் கொண்டு படைக்கப்பட்டாலும் வீரனின் தாயார் வதனா, மணியின் காதலி அருளினி முதலான பாத்திரங்கள் குணா கவியழகன் உணர்வின் மையத்தில் எழும் பாத்திரங்கள்.
வேவுக்கு போகும் முன் தாயைச் சந்திக்க வரும் வீரா அத்தாயின் அன்புக்குள் கட்டுண்டு தன்னை இழக்கிறான். அவன் தங்கியிருக்கும் மூன்று நாளில் தாய் கஸ்டப்படக்கூடாது என நினைத்து அவளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் சராசரி மகனாக செயற்படுகின்றான். இது வீராவின் வாழ்க்கையன்று. களத்தில் தம்மைக் காவு கொடுக்க முன் தாய் வீடு சென்று தம் இன்னுயிரை நீத்த போராளிகளின் வாழ்க்கை. நேசத்தின் ஆழ் சுளிப்பிலில் இருந்து விடுபட்டு களத்துக்கு செல்ல முற்படும் தம்மகவுக்கு எழைத்தாய் கொடுக்கும் சிற்றூண்டிகள் தம்மகனுக்கு மட்டுமானதல்ல. அவன் முகாமில் தங்கியிருக்கும் ஏனைய போராளிகளுக்குமானவை. என்பதை இந்நவீனம் மக்களின் நுண்ணுணர்வுத் தடத்தில் விபரிக்கிறது.
ஒரு போராளியின் தாய் ஒரு மகனுக்கு சொந்தமானவல்ல. எல்லா போராளிகளுக்கும் சொந்தமானவள். குணா வெளிப்படுத்தும் வதனா பாத்திரம் வன்னி மண்ணுக்குள் இன்றளவும் நம் கண்முன் உலாவும் உணர்வுபூர்வமான தாய்ப் பாத்திரம். கணவனையிழந்து தம்முறவுகளைப் பலி கொடுத்து காமத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் அல்லாடும் எத்தனையோ தாய்மார்கள் வதனாவைப் போல் உறவிழந்து அநாதையாய் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.
தவறுகள், குற்றங்கள் நிகழும் போது போராளிகள் தலைமை குழுக்களால் தண்டிக்கப்படுவார். தம் நிலை, அந்தஸ்து இழந்து சக போராளிகளால் கூட மதிக்கப்படாது நடாத்தப்படுவார். ஆனால் அவர் இயகத்தின் மீது விசுவாநமிக்கவராகவும் தம் தலைமைத்துவத்தின் மீது பாசமுள்ளவராகவும் இருப்பார். இயக்கம் அவரைக் கண்டு கொள்ளாவிட்டாலும் அவரின் மனோநிலை இயக்கம் பற்றியதாகவே இருக்கும். இயக்கத்தில் பால்ராஜ் அண்ணரின் மனோநிலையை ஒத்த ஒரு பாத்திரமாகவே ரோமியோ பாத்திரத்தை குணா கவியழகன் படைத்துள்ளார். போராட்ட வாழ்வுக்கு தம்மை அர்பணித்து நம் கண்முன்னே மடிந்த படைத்தளபதிகளின் நிழல் விம்பமே சேரா, கில்மன் முதலான பாத்திரங்கள். போராட்டம் மீதும் தம் தலைவன் மீதும் தம் போராளிகளின் மீதம் அவர் கொண்டிருந்த ஈடுபாடு என்பது மிகச் சாதரணமானதன்று. அவர்களின் இலட்சியங்கள் உன்னதமானவை. தம்தாய் நிலத்தை உரம் கொள்ளச் செய்பவை.
போராளி ஒருவனின் இழப்பால் குடும்பம் மாத்திரம் துயரை அனுப்பவிப் பதில்லை. அவனோ: ஒத்தியங்கிய போராளிகளும் அவ்விழப்பால் அல்லற்படுகின்றனர். ஒரு போராளியின் இழப்பு குடும்பத்தை மாத்திரமன்றி இயக்கத்தையும் பாதிக்கின்றது என்பதை இதயனின் இழப்புக்கூடாக குணா கவியழகன் வெளிப்படுத்துகிறார்.
இயக்கவாழ்வு என்பது இனிப்பானதல்ல. அது இனிப்பும் கசப்பும் நிறைந்த கூட்டுக்குடும்ப வாழ்வு. இவ்வாழ்வு றாகுலன், கவி, கோபி, மணி, வீரா முதலானவர்களின் முகாம் வாழ்வுக்கூடாக வெளிப்படுத்தப்படுகிறது. குணாகவியழகனின் மூளையால் எழுதப்பட்ட இப்புனைவு ஈழத்தின் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது. செய்நேர்த்திமிக்க மொழி உள்ளத்தின் உணர்வுகளுக்கும் போர்கிளர்த்தும் எண்ணங்களுக்கும் உருக்கொடுக்கிறது. ஈழத்தில் பேசப்படாததும் பேச அஞ்சும் விடயங்களைப் பேசும் இப்புனைவு கடந்தகால வாழ்வின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கின்றது
apaal

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net