“போர்க்கால சிங்கள இலக்கியங்கள்” எனும் இந்நூலை எழுதியுள்ளார் எம்.சி.றஸ்மின்

முல்லைத்தீபன் வே பார்வையில் …

தனது பட்டப்படிப்பின் ஆய்விற்காக 1983 தொடக்கம் 2007 வரையான “போர்க்கால சிங்கள இலக்கியங்கள்” எனும் இந்நூலை எழுதியுள்ளார் எம்.சி.றஸ்மின்.
13062416_1727794427476889_4672423777178964666_n
போர்க்கால படைப்புக்களில்.. தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள போரின் வடுக்கள் சிங்கள இலக்கியங்களில் ஒப்பீட்டளவில் குறைவே. அவர் தம் வாழ்வியல், தனிமனித முரண்கள், சமூக பிறழ்வுநிலைகள் போன்றவற்றையே அதிகமாக உள்வாங்கியுள்ளனர். இதற்கு.. நேரடியான தாக்கத்திற்குட்படாதவையாக அவை பெருமளவு இருந்திருக்கலாம் எனும் வாதமும் உண்டு.

ஆனாலும்.. எவ்வளவுதான் இன முரண்பாடுகள் அதிகரித்திருந்த போதும்.. இலக்கிய செயற்பாட்டாளர்களிடையே ஒருவித ஐக்கிய மன நிலை இருந்துதானிருக்கிறது. பல புரிதலினூடாக சக இனத்தவரது உணர்வுகள் உள்வாங்கப்பட்டுமிருக்கிறது எனலாம்.

பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் தனதுரையில்..

கடந்த 30 ஆண்டுகால யுத்தமும் இனமோதல்களும் தமிழ் இலக்கியங்களில் தாக்கம் செலுத்திய அளவுக்கு சிங்கள இலக்கியங்களில் தாக்கம் செலுத்தி இருக்கிறதா..? அப்படி இல்லை என்றால் ஏன்..? எந்த அளவுக்கு சிங்கள இலக்கியங்களில் அவற்றின் தாக்கம் காணப்படுகின்றது..? இந்த அனுபவங்களை சிங்கள படைப்பாளிகள் எவ்வாறு தங்கள் படைப்புக்களில் வெளிப்படுத்தி உள்ளனர்..? அவர்களை வழிநடத்திய கருத்து நிலை யாது..? இன நல்லுறவுக்காக குரல் கொடுத்தார்களா அல்லது இன மேலான்மைக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்களா..? சிங்கள இலக்கியம் பற்றி நம் மனதில் எழும் இத்தகைய வினாக்களுக்கு இந்நூல் விடை தர முயல்கிறது. என மேற்கண்டவாறு பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் றஸ்மின் தனதுரையில்..

யுத்தகாலத்து சிங்கள இலக்கியங்களில் தமிழ் பேசும் சிறுபான்மையினரின் இருத்தலுக்கான போராட்டம், பல்வகைமைக்கான ஏற்புடமை, அதன் மீதான ஈடுபாடு, பொது நலனை தரிசிப்பதற்கான சிந்தனைகளை வளப்படுத்தல் என்பவற்றை சிங்கள இலக்கியங்கள் உள்வாங்கியுள்ள விதம் பற்றிய முன்னோடி ஆய்வாக இந்நூல் அமைகிறது.

இனப்பிரச்சனை பற்றிய சிங்கள இலக்கியங்கள் பெரும்பான்மையாகத் தமிழ் மக்களை சார்ந்தே இயங்கியுள்ளது. இதனால் இந்த ஆய்வில் முஸ்லிம் சமூகம் குறித்து பேசப்பட்ட விடையங்களும் குறைவாகவே உள்ளன. இது ஆய்வாளரின் கவனக்குறைவால் அல்லது வேற காரணங்களால் ஏற்பட்டதல்ல என்கிறார்.

ஆக..

போர்க்கால சிங்கள கவிதை, சிறுகதை, நாவல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் இயல்புகளையும் அவை சக சிறுபான்மையினரை எவ்வாறு உணர்ந்து வெளிப்படுத்துகின்றன என்பதையும் தனது ஆய்வினூடாக பல தகவல்களை தந்துள்ளார் றஸ்மின்.

நூல் – போர்க்கால சிங்கள இலக்கியங்கள்
பதிப்பு – 2013
ஆசிரியர் – எம்.சி றஸ்மின்
பக்கங்கள் – 220
தொடர்பு – rasmin@ldjf.org

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net