என் வயதுக்கு கூட மரியாதை தராமல் இணையத்தில் என்னை விமர்சிக்கிறார்கள் என்று கலைஞர் பேசியுள்ளார். அவரது ஆதங்கம் நியாயமே. நானும் கூட இணையத்தில் கலைஞர்,ஜெயாவை விமர்சிப்பேன், ஆனால் கலைஞரை கொஞ்சம் அதிகம் விமர்சிப்பவன் என்பது கண்கூடு. அந்தவகையில் நானும் என்னுடைய ஆதங்கத்தை கலைஞரிடம் சொல்லியாக வேண்டும்.
ஐயா என்னோட அம்மா ஒரு மக்கள் நல பணியாளர். ஒவ்வொருமுறை நீங்க ஆட்சிக்குவரும்போதும் மக்கள் நல பணியாளர்களை பணியில் அமர்த்துவதால் பெரிய வருமானம் இல்லைனாலும் ஒரு நடுத்தர குடும்பத்துக்கு சில தேவைகளை பூர்த்தி செய்யுமளவு ஒரு வருமானம் எங்களுக்கு வந்தது. அதற்கு முதலில் நன்றி.
உங்களுடைய பழைய ஆட்சியெல்லாம் எனக்கு தெரியாது. படிச்சுருக்கேன், கேட்ருக்கேன். பார்த்ததில்லை. அதனால அதெல்லாம் விட்றலாம். ஆனா 2006-2011 ஒரு ஆட்சி பண்ணிங்க பாருங்க அது உங்களுக்கு மட்டுமில்ல ஒட்டுமொத்த திமுகவின் அரசியலுக்கே ஒரு டர்னிங் பாய்ண்ட்டு. அப்படி ஒரு ஆட்சி.
அதில் திமுகவுக்கு எதிரா 2ஜி ஊழல், நிலஅபகரிப்பு, சட்டம் ஒழுங்கு என பல குற்றசாட்டுக்கள் வந்தாலும் அதெல்லாம் என்னை அதிகம் பாதிக்கல. கடைசியா ஈழத்தில் ஒரு படுகொலை நடந்துச்சு. அது முடியும்வரை அமைதியா இருந்திங்க பாருங்க அதெல்லாம் வேற லெவல். ஒருவேளை காங்கிரஸ் உங்களை மிரட்டி பணிய வச்சுருந்தலும் திரும்பவும் இன்னைக்கு அவர்களோடவே கூட்டணி வைக்கிறிங்க பாருங்க. தெய்வ லெவல்.
இதுக்கு இணையத்தில் உங்க கட்சிக்காரங்க தரும் விளக்கங்கள், முதலில் டெசோ அது இதுன்னு உங்களை ஈழ மக்களின் காவலர் போல காட்டினர். பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்கு வந்தபோது நீங்கள் நடத்தியவிதம் அதை பொய்யாக்கியது. அடுத்து இந்தியா ஆயுதம் கொடுக்கலைனாங்க. ராஜபக்சே இந்தியா உதவியுடன் தான் ஜெயிச்சோம் என்றதும் அதுவும் பொய்யாகியது.
அடுத்து தலைவர் பிரபாகரனை வன்முறையாளராகவும், விடுதலைபுலிகளை தீவிரவாதிகளாகவும் காட்டி அவர்களை கொல்வது தவறில்லைனாங்க. இசைப்பிரியா கற்பழிப்பும், பாலச்சந்திரன் கொலையும் போரில் அவர்களை மட்டும் கொல்லவில்லை என்று அதையும் பொய்யாக்கியது. இப்போ கடைசியா ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் திட்ட ஆரமிச்சுருக்காங்க.
ஏன் 2ஜி’ய விட ஈழ விசயத்தில் இவ்வளவு அக்கறை? வைகோ கட்சியா? சீமான் கட்சியா? ஈழ வியாபாரமா? அது இதுன்னு ஒரு க்ரூப் கிளம்பலாம். சரி தலைவர் பிரபாகரன், தொப்புள்கொடி உறவு போன்ற வார்த்தைகளை கொஞ்சம் தள்ளி வைத்து பேசலாம். ஈழத்தில் நடந்தது இரண்டு ஆயுத குழுக்களுக்கு இடையேயான போர் அல்ல. அது ஒரு இனப்படுகொலை. அதை தமிழனா இல்ல மனிதனாகவே எதிர்க்கலாம்.
இன்றைய இணைய உலகில், ஐநா சபை, மனித உரிமைகள் அமைப்பு என நாகரீகமாக மாறிவிட்ட தலைமுறையில், மக்கள் தொகையில் 10 கோடிக்கு மேல் உள்ள ஒரு இனத்தின் மீது அவர்கள் வாழும் பகுதியை தொலை தொடர்பிலிருந்து துண்டித்துவிட்டு குழந்தைகளை சுட்டும், பெண்களை கற்பழித்தும் கொல்ல முடிகிறது எனில் அதை எதிர்க்காமல் நான் மனிதனாய் வாழ்ந்து என்ன பயன்?
இப்போது இதெல்லாம் மறந்து மன்னித்துவிட்டால். நாளை தமிழகத்தில் மீதேன் பிரச்சனை மீண்டும் வரலாம். அதை எதிர்க்கும் இளைஞர்கள் தீவிரவாதிகளாக்கப்படலாம். எங்கள் குழந்தைகள் சுடப்படலாம், எங்கள் பெண்கள் கற்பழிக்கபடலாம். எனவே இன்று உங்களை இணையத்தில் விமர்சிப்பது உங்களுக்கான பதில் அல்ல. இதுபோன்ற படுகொலையை இனி செய்ய நினைப்பவர்களுக்கான பதில்.
ஏன் அதிமுக,பிஜேபி மட்டும் ஈழ விஷயத்தில் என்ன கிழித்தது? என்று கேட்கலாம். அவர்கள் ஒன்றும் செய்யவில்லை தான். ஆனால் நீங்கள் செய்ததையும் செய்யவில்லை. ஒருவேளை இதே போல மத்திய பிஜேபி அரசு ஆயுதங்கள் கொடுத்து படுகொலையை நடத்தி, அதை மாநில அதிமுக அரசு பார்த்துகொண்டிருந்தால் அவர்களுக்கும் இதே நிலை தான்.
இன்னும் மங்கூஸ் மண்டையன் போல அறிவாளிகள் “ஏன் நீயும் தமிழன் தான ஈழப்படுகொலையின்போது என்ன பண்ண?” என்று கேட்கலாம். உலககோப்பை தொடரில் தவான் ஏன் சரியா விளையாடல என கேட்டா, “ஏன் நீயும் இந்தியன் தான போய் விளையாடு”ன்னு சொல்ற மாதிரி லூசுத்தனமா இருக்கு. அதுக்கு தான உங்கள தேர்ந்தெடுத்தோம். நாங்க போராட எதுக்கு உங்கள தேர்ந்தெடுக்கணும்?
ஐயா இப்போதும் கூட நீங்கள் நடந்ததற்கு வெளிபடையா வேணாம், மனதார வருத்தப்பட்டு இப்போ வாஜ்பாய்லாம் ஒதுங்கிட்டாரு பாருங்க அதுபோல ஓய்வெடுத்துகொண்டால் நாங்க ஏன் உங்கள விமர்சிக்க போறோம். 5 வருசமாச்சு எல்லாத்தையும் மறந்துருப்பனுங்க லூசுப்பயலுக என்று மீண்டும் அரசியல் களத்திற்கு வருவதால் தானே விமர்சிக்கிறோம். விமர்சிப்போம். நன்றி.
– பூபதி முருகேஷ்.