தேர்தலுக்குப் பிறகு கட்சி என்னைத் தேடி வரும்…அழகிரி.

karunanidhi-alagirilong
சட்டமன்றத் தேர்தலில் எந்த வேலையும் பார்க்காமல் முடங்கிக் கிடக்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். ‘தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியே என்னைத் தேடி வரும்’ என அதிர வைக்கிறார் அழகிரி.

தி.மு.கவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக ஒருகாலத்தில் கோலோச்சிய அழகிரி, தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராகக் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கட்சியில் அதிரடியாக நீக்கப்பட்டார். இதன்பின்னரும் தலைமைக்கு எதிரான சீண்டல்களில் ஈடுபட்டு வந்தார். ‘சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்கும்’, ‘ஸ்டாலின் பயணம் ஒரு காமெடி’ என மைக்கை நீட்டும் மீடியாக்களிடம் ஏதோ ஒன்றைப் பேசுவதை வழக்கமாக்கி கொண்டார். ‘
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்பாடுகளால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும்’ எனக் கருதிய தி.மு.கவின் சீனியர்கள், அழகிரியிடம் சமாதானப் படலத்தைத் தொடங்கினர். கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் சமரசத்தால் அழகிரியும் இறங்கி வந்தார். கருணாநிதி-அழகிரி சந்திப்பும் நடந்தது. சந்திப்பு நடந்து ஒரு மாதம் ஆகியும், தேர்தல் பணிகள் தொடர்பாக அழகிரியின் ஆதரவாளர்களுக்கு எந்த உத்தரவும் வராததால் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய மதுரை தி.மு.க நிர்வாகி ஒருவர், ” கலைஞரை அண்ணன் சந்தித்தபோது, ‘வேட்பாளர் தேர்வில் தலையிட வேண்டாம். வேட்பாளர் தேர்வு முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். அதன்பிறகு, தேர்தல் வேலை பார்த்தால் போதும்’ என்று கலைஞர் சொன்னார். அண்ணனும் மகிழ்ச்சியோடு மதுரை திரும்பினார். ‘உங்களுக்கெல்லாம் நல்லது நடக்கப் போகுது’ எனவும் சொன்னார். இப்போது ஒரேஅடியாக, ‘தேர்தல் முடிவுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறோம்’ என தலைமை கூறிவிட்டது. கலைஞரின் இந்த அதிரடியை அண்ணன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன்னை சமாதானப்படுத்துவது போல் மீடியாக்களிடம் காட்டிக் கொண்டு, எங்கும் பேச முடியாத அளவுக்கு கலைஞர் செய்துவிட்டார் என்றே ஆவேசப்பட்டார். ஒருகட்டத்தில், ‘என் ஆதரவாளர்கள் பிரசாரத்திற்குப் போக மாட்டார்கள்’ என உறுதியாகச் சொல்லிவிட்டார். போன வாரம் அண்ணனை சந்தித்த ஆதரவாளர்கள், ‘ திருவாரூரில் பிரசாரம் பண்ணலாம்னு இருக்கோம். ஆனால், ஸ்டாலின் ஆட்கள் சங்கடப்படுத்துவாங்கன்னு நினைக்கிறோம். மதுரைல கிழக்கு, மேற்கு, மத்தியிலன்னு எங்கயும் பூத் கமிட்டிக்குக்கூட காசு கொடுக்கலை. சில வேட்பாளர்கள் பசையோட இருக்கறதால, பார்த்துக்கறாங்க. மத்த இடங்கள்ல ரொம்ப கஷ்டப்படறாங்க. நாம களமிறங்கினா சரிப்பட்டு வரும்’னு சொல்ல, எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார் அண்ணன்.

ஒருகாலத்தில், அண்ணனோட நட்பு பாராட்டிய தங்கம் தென்னரசு உள்பட கட்சியின் சீனியர் வேட்பாளர்கள் யாரும் அண்ணனோட ஆதரவைக் கேட்கலை. எல்லோரும் ஒதுங்கியே இருக்காங்க. தி.மு.க ஒதுக்கி வைக்கறதால, வேற எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கனும்னு அண்ணன் சொல்லலை. எங்களைக் கட்சியில் இருந்து நீக்கினாலும், இன்னமும் தி.மு.க கரைவேட்டியோடதான் சுத்திகிட்டு இருக்கோம். தென்மண்டலத்துல பல நிர்வாகிகள் அண்ணனைத் தொடர்பு கொண்டு, ‘உங்க ஆதரவு வேணும். உங்க ஆட்களை வேலை பார்க்கச் சொல்லுங்க’ன்னு கேட்கறாங்க. ‘உங்களுக்கு சீக்கிரமே பதில் சொல்றேன்’னு போனை வச்சிட்டார். அவர் எதாவது உறுதியான முடிவை எடுப்பார்னு தோணுது” என்றார் மதுரை நிலவரத்தை பிரதிபலித்தபடி.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசிய அழகிரி, ‘தேர்தல் வேலை பார்க்கவிடாம என்னை ஒதுக்கி வைக்கறதுக்கான பலனை தி.மு.க கொடுக்கத்தான் போகுது. தேர்தல் முடிவுக்குப் பிறகு அவங்க என்னைத் தேடி வரத்தான் போறாங்க. உங்ககிட்ட இருந்து பிடுங்கின பதவிகளையும் கொடுக்கத்தான் போறாங்க’ என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.

அப்போதைக்கு நம்பிக்கையோடு கலைந்திருக்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியைக் கிளப்புகிறேன் என புஸ்வானமாகிப் போனார் அழகிரி. மதுரையில் அவர், ‘பியூஸ் பிடுங்கப்பட்ட பல்பு’ என்பதுதான் தி.மு.க தலைமையின் எண்ணமா?

Copyright © 6674 Mukadu · All rights reserved · designed by Speed IT net