காயமடைந்த ஸ்மித் ஆஸி. திரும்புகிறார்: புனே அணிக்கு மேலும் பின்னடைவு

8 போட்டிகளில் 6-ல் தோல்வி கண்டு துவண்டு போயுள்ள தோனி தலைமை ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக உடனடியாக ஆஸ்திரேலியா திரும்புகிறார்.

அதாவது ஐபிஎல் தொடரிலிருந்து அவர் மணிக்கட்டு காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த வாரம் முதலே ஸ்டீவ் ஸ்மித் வலது மணிக்கட்டு காயத்தினால் அவதியுற்று வந்தார்.

காயம் தீவிரமானதாகத் தெரியாவிட்டாலும் இம்மாத இறுதியில் மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடருக்குள் அவர் முழுதும் குணமடைய வேண்டியிருப்பதால் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே மிட்செல் மார்ஷும் காயமடைந்து விலகியுள்ளார். இதற்கு முன்னதாக அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன், டுபிளெசிஸ் காயம் காரணமாக விலகியதும் குறிப்பிடத்தக்கது.

உஸ்மான் கவாஜா புனே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், ஆனால் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இன்னும் புதிய வீரர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அடுத்ததாக மே.5-ம் தேதி டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக டெல்லியில் ஆடுகிறது புனே அணி.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net