அதிமுகவின் தேர்தல் பிரச்சார பேச்சாளராக எப்போதும் வலம் வருபவர் நடிகர் செந்தில். வருகின்ற சட்டசபை தேர்தலிலும், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இறந்து விட்டதாக நேற்று வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஏராளமனோர் இந்த செய்தியை பலருடன் பகிர்ந்து கொண்டனர்.
ஆனால், அந்த செய்தி வெறும் வதந்தி என்று செந்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது “நேற்று நான் திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்து விட்டு, ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனது செல்போனில் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினர். அப்போதுதான் இப்படி ஒரு செய்தி வெளியானதே எனக்கு தெரிய வந்தது.
இதைக்கேட்டு நான் சிரித்துக் கொண்டேன். அன்று இரவு முழுவதும் வெளிநாடுகளிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் எனக்கு ஏராளமான செல்போன் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.
இதற்காக நான் கோபப்படவில்லை. எனக்கு ஏற்பட்ட திருஷ்டி கழிந்து விட்டதாகவே கருதுகிறேன். எனது பிரச்சாரத்தை முடக்குவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். யாரும் அதை நம்ப வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.