மாணவி வித்தியா வழக்கில் சுவிஸ்குமார் தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி.

punkuduthivu_1
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் என்று அறியப்படும் மகாலிங்கம் சதீஸ்குமார் என்ற சந்தேகநபர், எவ்வாறு பொலிஸாரிடம் பிடிபட்டார். பின்னர், எவ்வாறு அவர் கொழும்புக்குச் சென்றார். தொடர்ந்து, கொழும்பில் வைத்து எவ்வாறு கைது செய்யப்பட்டார். ஆகிய விவரங்களை தனித்தனி கேள்விகளுக்கான பதில்களாக வழங்குமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் 10 சந்தேகநபர்கள் மீதான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ‘பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சுவிஸ்குமார் தப்பித்துச் சென்றமை மூடுமந்திரமாக இருக்கின்றது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என மாணவி சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி சுகாஸ், கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

‘சுவிஸ் குமார் எவ்வாறு கைது செய்யப்பட்டார்?, சரணடைந்தாரா? அல்லது வேறு நபர்களால் பொலிஸில் பாரப்படுத்தப்பட்டாரா?, அவர்களின் பெயர் விவரங்கள், அவர்களுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு, வேறு நபர்களுக்கு இந்த வழக்கின் சம்பந்தம் என்ன?, இந்த வழக்குடன் கடமைப்பட்டவர்களா?, சுவிஸ்குமார் கொழும்பில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்?, கொழும்பு செல்வதற்கு உதவியவர்களின் பெயர் விவரங்கள், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தாரா? அப்படியாயின் சட்டரீதியான ஆவணங்கள் பேணப்பட்டனவா?, அவர் விடுவிக்கப்பட்டு கொழும்பு சென்றிருந்தால் ஆஜர்ப்படுத்திய நீதிமன்றம்?, கொழும்பு சென்றது பொலிஸாரின் பாதுகாப்பிலா? அல்லது சாதாரண பொதுமகனாகவா?, சாதாரண பொதுமகனாக இருந்திருந்தால் பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டாரா?, யாரால் எந்தச் சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்? போன்ற கேள்விகள் எடுப்பப்பட்டன.

அத்துடன், சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் சுவிஸ்குமார் எத்தனை அலைபேசிகளை பாவித்தார்?, யாருடன் தொடர்புகளைப் பேணினார்? கொழும்பு செல்வதற்கு உதவியர்களுடன் தொடர்புகளைப் பேணினாரா?, இது தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வார்கள் விசாரணைகள் மேற்கொண்டுள்ளரான?, அது தொடர்பான நடவடிக்கை என்ன?’ உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களையும் தனித் தனியான அல்லது அறிக்கையாக சமர்;ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எம்.றொசாந்த்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net