தி.மு.க. விளம்பரம்னு தெரியாம நடிச்சுட்டேன் கண்ணு!’ – கஸ்தூரி பாட்டி

kathu-kutt“பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்” என்ற அதிமுக விளம்பரம் ஒரு பக்கம் ஒளிபரப்பாக, “ வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க?” என்று திமுக விளம்பரம் மறுபக்கம் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த இரண்டு விளம்பரங்களிலும் கஸ்தூரி என்ற பாட்டி தான் நடித்திருக்கிறார். இன்றைய தேதியில் இந்தப் பாட்டி பற்றித் தான் ஊரெல்லாம் ஒரே பேச்சு, அந்தப் பாட்டிக்கு என்ன தான் ஆச்சு? பாட்டியிடமே பேசினேன்.

https://www.facebook.com/sharer/sharer.php?u=https%3A%2F%2Fwww.facebook.com%2F161812404015458%2Fvideos%2F483146065215422%2F&display=popup&ref=plugin&src=video

(திமுக, அதிமுக விளம்பரத்தில் கஸ்தூரி பாட்டி! வீடியோ மேலே)

“நானே முழிச்சிட்டு இருக்கேன், இன்னைக்கு வேலைக்குக் கூட போகலை. திமுக விளம்பரத்துல நடிச்சது எனக்கே தெரியாம நடந்துடுச்சி. ஏஜென்ட் விளம்பரம்னு சொல்லி தான் கூட்டிட்டுப் போனாரு, அது திமுக விளம்பரம்னு எனக்கு தெரியாது. அம்மா விளம்பரத்துல மட்டும் தான் தெரிஞ்சி நடிச்சேன்” என்று பயத்துடன் பேசினார் கஸ்தூரி பாட்டி.

முதல்ல எதுக்கு ஷூட்டிங் போனீங்க?

முதல்ல அம்மாவோட விளம்பரம் தான் நடிச்சேன். ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் திமுகவோட விளம்பரம்னு தெரியாமலேயே நடிச்சி கொடுத்துட்டேன், ஆனா அம்மாவுக்கு நடிச்சது வெளியாகிரதுக்கு முன்னாடியே கலைஞருக்காக நடிச்சது டிவில போட்டுட்டாங்க. வீட்டுல வேலை பார்த்துட்டு இருக்கும்போது தான், திமுக விளம்பரத்தை டிவில பார்த்தேன், பார்த்ததுமே அதிர்ச்சியாகிடுச்சி, எனக்கு ரொம்ப பயமாகிடுச்சி. இந்த விளம்பரத்தை நிமிஷத்துக்கு ஒருதடவை டிவில போடுறத பாக்கும் போதெல்லாம் பதட்டமா இருக்கு.

உங்க தெரு மக்கள் இந்த விளம்பரத்துக்கு என்ன சொல்லுறாங்க?

பார்க்குறவங்க எல்லோருமே ஒருமாதிரி பேசுறாங்க, திமுக விளம்பரத்துல கடைசியா “போதும்மா போதும்மா”னு சொல்லுவேன், அதை சின்னப் பசங்க சொல்லி கிண்டல் பண்ணுறாங்க, மனசு ரொம்ப கஷ்டமாகிடுச்சி. அதுனாலயே வெளிய போகமுடியலை. ஆனா மக்களுக்கு இந்த விளம்பரத்துக்கு பின்னாடி என்ன நடந்துதுன்னு தெரியாதுல்ல.

அதெப்படி தெரியாம நடிக்கமுடியும்?

இதுவரை ரெண்டு அதிமுக விளம்பரம் நடிச்சிருக்கேன். ஆனா, திமுக விளம்பரத்துக்குனு ஏஜெண்ட் கூட்டிட்டுப் போனதே தெரியாது. கடைசி வரைக்கும் வேற ஏதோ விளம்பரம்தான்னு நெனச்சேன். கடைசில இப்படியாகிடுச்சி, சொல்லிருந்தா நடிச்சிருக்கவே மாட்டேன், சொல்லாம செஞ்சிட்டாங்க. இப்போ, மீட்டிங்ல பேசுற மாதிரி விளம்பரம் நடிக்கக் கூப்பிடுறாங்க, நான் வரலைன்னு சொல்லிட்டேன்.

ad-111

ரெண்டு விளம்பரத்துலயும் சம்பளம் எவ்வளவு வந்துச்சி?

அம்மா விளம்பரத்துல நடிச்சதுக்கு 1500 ரூபாய் கொடுத்தார். திமுக வெளம்பரத்துக்கு, அந்த ஏஜெண்ட் 1000 ரூபாய் கொடுத்தார். ஆனா எவ்வளவு ரூவா சம்பளம் பேசுனாருன்னு தெரியாது.

சரி, இந்த ரெண்டு பேருல உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

எல்லோருமே எனக்குப் பொதுதான். நான் வேலை செஞ்சாதான் எனக்குக் கஞ்சி. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லுறதுக்கு இல்லை. எம்மதமும் சம்மதம்னு தான் இருக்கேன், எல்லாக் கோயிலுக்கும் போவேன்.

ஊழல்னா என்னனு தெரியுமா?

அதுலாம் தெரியாதுப்பா, அதுக்குள்ள எல்லாம் போகுறதுல்லை, என் வீட்டு வேலை, என் பேரன்பேத்திகளை பார்ப்பேன், வீட்டு வாடகை, செலவுனு வீட்ட கவனிச்சிக்குவேன், அதுக்கு நடுவுல படத்துல நடிக்கிறது தான், இதான் எனக்குத் தெரியும், அரசியலுக்குள்ள எல்லாம் போகமாட்டேன்.
கடைசியா என்ன படத்துல நடிச்சிருக்கீங்க?

இறைவி படத்துல அஞ்சலிக்கு பாட்டியா வாரேன். விஜய்சேதுபதிக்கு மாமியார் மாதிரி என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

உங்களைப் பற்றி சொல்லுங்க?

ஆல் இந்தியா ரேடியோவில் தான் முதல்ல பேசுனேன், அப்படியே நாடகத்துல நடிக்க ஆரம்பிச்சி சினிமாவுக்கு வந்துட்டேன், இப்போ வரைக்கும் சின்னச் சின்ன ரோல்ல நடிச்சிகிட்டு இருக்கேன், எனக்கு ஒரு பொண்ணு இருக்குது, அதுக்கு ரெண்டு பொண்ணு, அவங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சி என்று முடித்தார் கஸ்தூரி பாட்டி.

உங்கள் சம்பாத்தியம் போதுமானதா இருக்கா?

போதாது தான், ஆனா இந்த சம்பளம் கூட இல்லாம எவ்வளவு பேரு கஷ்டப்படுறாங்க, அதுக்கு இது பரவாயில்லையே, கடவுள் கொடுத்த வரைக்கும் லாபம்னு போயிடணும்.
விகடன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net