ஆழ்துயர் என்றொரு நிலை. அதிர்ந்து முடிவுகள் எடுக்க முடியாது. எதிர்த்தும் முரண்பட்டு விலகமுடியாது. அமைதியான நதியின் நிரோட்டம் போன்ற வலி தாங்கும் தியான நிலை அது. ஆண் பெண் உறவுகளைக் கையாள்வதில் இத்தகைய புரிதலுடன் திரைப்படக் காட்சிகளை உருவாக்கம் செய்வது என்பது சில கலைஞர்களுக்கு மட்டுமே சாத்தியம். ‘த செப்பரேஷன்’ எனும் ஈரானியப் படத்தில், ‘த இடியட்ஸ்’ எனும் லார்ஸ் வான் டிரையரின் படத்தில் இடம்பெறும் பெண் பாத்திரப் படைப்புகளில் இந்த நுண்ணுர்வுச் சித்தரிப்பை நாம் காணலாம்.
இந்த ஆழ்துயருக்குப் பின் ஒரு கடக்க முடியாத அனுபவமும் வரலாறும் இருக்கும். சுஜித்ஜியின் பலம் ஆண் பெண் உறவில் பெண்ணுணர்வு சார்ந்த இந்தப் புரிதலை அவர் மிகுந்த மேதைமையுடன் கையாள்வதுதான். அவரது குறும்படமான மாசிலனின் கடைசிக் காட்சியில் அழுதுவிடும் முகத்துடன் நிற்கும் ஆண், விலகி நடக்கும் பெண் அத்தகையதொரு உணர்வை எழுப்பும் பிம்பம். அவரது இறுதித் தரிப்பிடம்-த லாஸ்ட் ஹால்ட்- சுஜித்ஜியின் இயல்பான இந்தத் திரைத் தொடுதலின் நீட்சி. ஓளிப்பதிவாளராக சிவா சாந்தகுமாரும் இயக்குனராக சுஜித்ஜியும் வறுமையின் பொருட்டும் தனது எதிர்காலத்தின் பொருட்டும் தனது பெற்றோரைத் விட்டு பிரித்தானியாவுக்குத் தனித்து வரும் ஒரு ஈழப் பெண் எதிர்கொள்ளும் ஆழ்துயரின் மேல்படியும் அன்றாடத் துயர்களை, மௌனக் கதறலை புகைமூட்டத்தின் ஊடே தெளியும் தூரதரிசனம் போலச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் ஈழசினிமா அரசியல் கடந்த இன்னொரு வெளியில் பிரவேசிக்கிறது
yamuna rajendran