26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நாடேஸ்வரா கல்லூரி மீள்ஆரம்பம்

article_1464856510-KKS-(7)
-சொர்ணகுமார் சொரூபன்

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் கனிஷ்ட வித்தியாலயம், 26 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சொந்த இடத்தில், இன்று வியாழக்கிழமை (02) முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

கடந்த கால யுத்தத்தின் போது, யாழ். மாவட்டத்தினை இராணுவத்தினர் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் மேற்கொள்ளபட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி இடம்பெயர்ந்தனர்.

இதன் பின்னர், கடந்த 26 வருடங்களாக குறித்த பாடசலையின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தெல்லிப்பழை ஸ்ரீ சாயிதுர்க்கை அம்மன் ஆலயத்தின் முன்பாக உள்ள தனியார் வீடொன்றில் இடம்பெற்று வந்தது.

இதனையடுத்து, இவ்வாண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், குறித்த இரு பாடசாலைகளும் அவற்றின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிலையில், போர்ச்சூழலில் அழிவுற்று எஞ்சிய கட்டிடங்களைத் திருத்தி, கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பாடசாலையில் தற்போது சுமார் 150 மாணவர்கள், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் செ.சந்திரராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில், இப்பாடசாலையின் பழைய மாணவனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net