வீரகேசரி சுடர்ஒளி பத்திரிகைகளில் முன்னாள் உதவி ஆசிரியரும் கவிஞருமான சி எஸ் காந்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார்.
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த அன்ரன் பாலசிங்கம் வீரகேசரியில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் அவருடன் பணியாற்றிய காந்தி ஐயா, நீண்டகால பத்திரிகைத்துறை அனுபவத்தைக் கொண்டவர். கவிதை எழுதுவதில் திறமையானவர். மரபுக்கவிதைகளை மிக நேர்த்தியாக எழுதுவார். மலையகத் தமிழர்கள் மத்தியில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் மிகத்தேர்ச்சி பெற்றிருந்த இவரைப் போலானவர்களைக் காண்பது அரிது. இந்தவகையில் இவர் மலையக மக்கள் மத்தியில் கல்வித்துறையில் முன்னேற்றம் கண்டவர் எனச் சொல்லலாம்.
இவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் சுடர்ஒளி பத்திரிகையில் பணியாற்றும் போது எனக்கு கிடைத்தது. சுடர்ஒளி பத்திரிகையில் வெளிநாட்டு செய்திப் பிரிவுக்குப் பொறுப்பாகவும் அதேநேரம் சுடர்ஒளி வாரமலரில் கவிதைப் பகுதியைத் தொகுக்கும் பணியையும் திறம்படச் செய்தவர். இளம்தலைமுறையினருடன் மிக அன்பாகப் பேசிப்பழகும் அவர் தனது வறுமையை மறைத்து எப்போதும் இளைஞனைப் போலவே சுறுசுறுப்பாக இயங்குவார். வறுமையால் இவரின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட முடியாது போனது என்பதைக் கேட்கும் போது கவலை மேலிடுகின்றது. இவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.
நன்றி ஐஸ்வின் சுதர்சன்