அடம்பன் இயக்குனருடன் வண்ணாவின் சில நிமிடங்கள்.

13549099_1216864914992620_1618658689_o

உங்களை பற்றி ஒரு அறிமுகம் தரமுடியுமா?

என் பெயர் சிறிஸ்கந்தராஜா 1991 இலிருந்து சுவிஸில் வாழ்ந்து வருகிறேன். ஊரில் வடமராட்சி வல்வெட்டியை பிறப்பிடமாகக் கொண்டவன். உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றேன். கலையார்வம் உண்டு பள்ளிக் காலங்களில் இருந்து நாடகங்கள் செய்து கொண்டு இருந்தேன். அதன் பின் புலம்பெயர்ந்து வந்தும் இங்கு அரங்க நாடகங்கள் செய்து கொண்டிருந்தேன் வேறு என்னைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை.

ஆரம்பத்தில் நாடகம் என்று செயற்பட்டு இப்பொது ஒரு முழுநீள சினிமாவுக்குள் உங்களை இறக்கிக் கொண்டதற்கான காரணம் என்ன?

புலம்பெயர்ந்து வந்த பின் எனது நாடகங்கள் விடுதலை சார்ந்து மக்களின் அவலங்களையும் எழுற்சியையும் சித்தரிக்கும் நாடகங்களாகவே செய்து கொண்டிருந்தேன். 2009 இற்குப் பிறகு எங்கள் பிரச்சனைகளை வெளியே கொண்டு செல்லும் தேவை ஒன்று இருப்பதால், சினிமா என்பது ஒரு பெரிய ஊடகம் அதன் மூலம் எங்கள் எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்லலாம் என்ற நோக்கோடு தான் அடம்பன் என்ற முழு நீளத் திரைப்படத்தை எடுக்க முற்பட்டேன்

சினிமாத்துறையில் இறங்கியிருக்கிறீர்கள் சினிமா பற்றிய அனுபவங்கள் பயிற்சிகள் என்று ஏற்கனவே உண்டா?

அனுபவம் எதுவும் இல்லை. இருபது வருடங்களுக்கு முதல் பதினைந்து நிமிட குறும் படம் ஒன்று செய்தேன் அது ஒன்று தான் அனுபவம்.ஸ்ரூடியோவுக்குள் இருந்த தமிழசினிமா பாரதிராஜா வந்த பிற்பாடு பரட்டைக் காடுகளுக்குள்ளும் எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது . அந்த நிலை எல்லோரும் சினிமா எடுக்கக் கூடிய வசதியை தந்திருக்கிறது. பலர் திரைப்படத் துறை பற்றிக் கற்காமல் அந்தத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சரி எங்கள் விஷயத்தை நாங்கள் சொல்லப் போகிறோம் ,எங்களாலும் முடியுமென்ற நம்பிக்கையோடு, துணிச்சலோடு முயற்சித்தோம் அது நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

உங்கள் படத்தின் நோக்கம் பொருளாதாரம், அல்லது விளம்பரம் அல்லது ஆவணப்படுத்தல் இவைகளில் எதை நோக்காகக் கொண்டது?

நிச்சயமாக இல்லை, வியாபார நோக்கோடு இந்தப் படம் செய்யப்படவில்லை. வியாபார நோக்கோடு ஒரு படைப்பை கொண்டு வந்தால் தான் நாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்பதும் எனக்குத் தெரியும் . வியாபார நோக்கத்தைத் தாண்டி மக்களுக்குத் தெரியாத எங்களுடைய பிரச்சனைகள் சிலவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கோடு தான் இந்தப் படம் உருவாக்கப் பட்டது.

இந்தப் படத்தில் நீங்கள் இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறீர்கள். இந்தக் கதைக்கான கரு என்ன மாதிரியானது ? எப்படிப் பெற்றீர்கள்? இந்தக் கதை உங்களின் சொந்தக் கருவா?

எழுத்து இயக்கம் என்னுடையது,. நாம் நீண்டகா லமாக விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இனம் அதன் வலிகள்,இழப்புகள் என்பது எங்களுக்கு தெரிந்த விடயம் பழக்கப்பட்டும் விட்டது. அதை மக்கள் மத்தியில் எப்படிக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கும் பொது தோன்றிய கதை தான் அடம்பன். அதன் பெயர் என்ன நோக்கோடு சூட்டப்பட்டது என்பதும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்..இதில் முன்னுக்குத் தெரிவது நான் என்றாலும் இது ஒரு கூட்டு முயற்சி இப்படி ஒன்று செய்ய வேண்டும் என்று எனக்குள் எழுந்த சிந்தனைக்குப் பிறகு ஒளிப்பதிவு செய்ய ஒருவரை தேடி, இசைக்கு ஒருவரைத் தேடி, நாங்கள் மூவரும் கதைத்து அகரம் படைப்பகம் என்ற ஒன்றை உருவாக்கி அகரம் படைப்பகத்தின் தயாரிப்பில் தான் இத்திரைப்படத்தைச் செய்தோம்.

இந்தக் கதையின் களம் எங்கு? நீங்கள் இருக்கும் நாடா,அல்லது?

சுவிஸ் தான்

கதைக் களமே அங்கு தானா?

கதைக் களமே அங்கு தான். கதைக்களம் புலம்பெயர்ந்து வாழும் எந்த நாடாகவும் இருக்கலாம். ஆனால் கதை தொடுவதற்கு ஒரு இடம் வேண்டும் எங்கள் தாயகத்தில் இருந்து தான் அந்தக் கதை வந்து தொடுகிறது.

அடம்பன் என்ற தலைப்புப் பற்றிச் சொல்லுங்கள் ?

இந்தச் சொல் எங்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒன்று. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று ஒரு பழமொழி இருக்கிறது. அது தனித்தனியாக வளரும் ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டதாயின் வலிமையானதாக இருக்கும். மற்றது எங்கள் போராட்டத்தில் திருப்புமுனை உருவாக்கிய பிரதேசம் அடம்பன்.

உங்கள் சொந்தகரு உருவாக்கத்தில் இல்லாமல், அதே நேரத்தில் தரமான வேறொரு கதை கரு தந்தால் செய்வீர்களா?

நிச்சயமாக அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும போது செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.அடுத்த படைப்பை நாம் செய்யும் பொது இன்னும் சிறப்பாக செய்ய முடியும்.

இந்தப் படத்துக்கான நடிகர்களை எப்படி தெரிவுசெய்தீகள்?இந்தப் படத்திற்குக் கதை எழுதிய பின் நடிப்பதற்கு ஆட்களைத் தெரிவு செய்து அவர்களிடம் கதையை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்ரீ அண்ணை நன்றாக இருக்கிறது செய்வம் என்று சொல்வார்கள். பிறகு ஐந்து நாட்களோ ஒரு கிழமைக்குள்ளோ வந்து தொலை பேசியில் ஸ்ரீ அண்ணை அது கஸ்ரம் ஊருக்குப் போக வேண்டியுள்ளது நேரமில்லை என்று சொல்லும் நிலைப்பாடுகள் தான் இருந்தது அதில் நான் விரக்தியடைந்து போகவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டு இருந்தேன் .தமிழ் ஆசிரியர் ஒருவரை அணுகி அவருக்கு கதையைச் சொல்லியபோது இதில் நடிப்பதற்கான பிள்ளைகளைத் தந்தார். பிள்ளைகளுடன் நான் பேசிய போது இது எங்களுடைய பிரச்சனை நாங்கள் தான் இதைச் சொல்ல வேண்டும் என்றுகூறி கதையை அவர்களுக்கு விளக்கினேன். அவர்களும் நாங்கள் இதைச் செய்வோம் என்றார்கள். அதன் பின் இப்படத்தை எடுக்கத் தொடங்கி 58 நாட்கள் இதன் ஒளிப்பதிவு நடந்தது.

குறும்படம் என்பதை விட ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுக்கும் போது நிறைய சிரமங்கள்கள் ,செலவுகள், கால இழுபறிகள் இப்படியான பிரச்சனைகள் இருக்கும் .நீங்கள் விரும்பியது போல இந்தப் படத்தை எடுக்கும் சந்தர்ப்பம் அமைந்ததா?

நான் நாடகம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எது செய்தாலும் சரி ஸ்கிரிப்ட் கையில் வைத்திருப்பேன் அதற்குள் தான் நின்று கொள்வேன் வெளியில் போக மாட்டேன். எனக்கு அது உதவியாக இருந்தது. வேலைப்பளுக்கள் பிள்ளைகளின் படிப்பு என்ற ரீதியில் நேரம் ஒத்து வராத பிரச்சனைகள் கொஞ்சம் இருந்தன அதனால் நான் நினைத்த அளவு முற்று முழுதாக கொண்டு வரமுடியா விட்டாலும் 90 வீதம் சரியாக வந்திருக்கிறது.

இன்னொரு முக்கிய கேள்வி … ஈழத்துத் தமிழை, யாழ்ப்பாணத் தமிழை நாடகத் தமிழ் என்று சொல்வார்கள். இவ்வாறிருக்கையில் எங்கள் ஆட்கள் எடுக்கும் நாடகங்களோ,குறும் படங்களோ அல்லது முழுநீளத்திரைப்படங்களாகினும் சரி தென்னிந்தியப் பேச்சு நடை தான் இப்போது ஒரு போக்கு மாதிரிப் போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் படத்தில் என்ன மாதிரி, இயல்பான பேச்சு நடையா அல்லது..?

நான் வந்து இதில் கவனமாக இருக்கிறேன். இதில் இங்குள்ள பிள்ளைகள் எப்படிப் பேசுவார்களோ அப்படியேயான இயல்பான பேச்சு நடை . அதை யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்ல வரவில்லை. இந்தியச் சினிமாக்கள் எங்கள் தமிழை கொச்சை படுத்தி நாங்கள் பார்த்திருக்கிறோம், மனோரமாவில் இருந்து கலமஹாசன் வரை இது தான் யாழ்ப்பாணத் தமிழ் என அவர்கள் பேசும் போது ஒரு விதக் கஸ்ரத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில் இப்படித்தான் இது தான் எங்கள் தமிழ் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதில் ஒரு விஷயம் நான் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். நான் படத்துக்கு சவுண்ட் எடிட் செய்ய கொண்டு போன போதுபார்த்து விட்டு இதன் ரீ ரக்கொடிங் செய்த விஜயன் இந்த மொழியைக் கேட்டீர்களா என்று கேட்டார். அவர் ஏன் என்று கேட்ட போது இது தான் தமிழ் என்றார்.

ஈழத்துச் சினிமா, ஈழத்துப் புலம்பெயர் சினிமா இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?

ஈழத்துச் சினிமா என்று சொல்லும் போது 80 களுக்கு முதல் 70 இற்குப் பிறகு வந்த பன்னிரண்டு படங்கள். அவைகளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் வாடைக் காற்று, கரையோர மக்களின் வாழ்வை சித்தரித்த கதை அருமையான எங்களுடைய தமிழில் பேசி நடிச்ச படம். அதே மாதிரி புதியகாற்று மலையக மக்களின் வாழ்க்கையைப் பேசிய ஒரு படம். இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம். இந்தப் படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்றுப் பெறவில்லை. காரணம் காலங்காலமாக தமிழகத்துச் சினிமாவையே பார்த்துக் கொண்டு வந்த எங்கள் மக்களுக்கு இதை ஏற்றுக் கொள்ளும் மன நிலை இருக்கவில்லை.எண்பதிற்குப் பிறகு புலபெயர்ந்து வந்த பின் இங்கு வசதிகள் இருக்கிறன. நாங்கள் கதைகள் தேடி எங்கும் போகத் தேவையில்லை எங்கள்ஒவ்வொருவரிடமும் கதைகள் இருக்கிறது. அதை செம்மையாகச் செய்தோம் என்றால் வெற்றி பெறலாம்

புலம்பெயர் தமிழ் சினிமாவின் வளர்ச்சி போக்கு எப்படி இருக்கிறது?
அது முழுவதுமான சர்வதேசத் தரம் கொண்ட சினிமாவாக வருவதற்கு ஒரு இயக்குனராக உங்கள் பார்வையில் இன்னும் என்னென்ன முன்னேற்ற கள் செய்ய வேண்டி இருக்கிறது?

அண்மையில் நோர்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு கனடா, மலேசியா அவுஸ்திரேலியா மற்றும் சுவிஸில் இருந்து எங்கள் அடம்பன் படமும் பங்குபற்றியது செய்து கொண்டிருக்கும் படங்கள் நன்றாக இருக்கின்றன எங்கள் பிரச்சனைகளை நாங்கள் இன்னும் நன்றாகச் சொல்ல முடியும். இங்கு படித்த இளைஞர்கள் புத்திசாலிகள். இங்குள்ள பலதரப்பட்ட வசதிகளை பார்க்கும் கேட்கும் பயன்படுத்தி இப்போது பாடல்கள் குறும்படங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் சிறப்பான சினிமாக்களை உருவாக்கலாம் ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்க முடியும் என்று நாங்கள் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கிறோம். எம்மிடம் தொழில்நுட்பவியலாளர்கள் குறைவு. இன்றைய இளைஞர்களின் வளர்ச்சியில் வருங்காலத்தில் அவர்கள் அந்த நிலைக்கு மாறும் போது உலகத்தரமான படைப்பைக் கொடுக்க முடியும்நினைக்கிறேன்.


இலங்கையில் குறும்படம் முழுநீளத் திரைப்படம் என்று எடுத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், கையில் ஒரு நல்ல டிஜிட்டல் கமெராகிடைத்ததும் நாங்களும் ஒரு படத்தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி உருவாகி வருபவைகளைப் பார்த்தால் அதில் சினிமா என்று சொல்வதற்கான எந்த அம்சமும் இல்லை. அவர்கள் எதைச் சொல்ல வருகிறார்கள் என்பது பற்றி தெரியாமல் கூட இருக்கிறது ஒரு இயக்குனராக நீங்கள் இது பற்றி என்ன நினைகிறீர்கள்?

அவர்களின் ஆர்வம் போற்றத் தக்கது வரவேற்கத் தக்கது. அதை சரியாகச் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். யாழிலிருந்து வரும் பாடல்கள் குறும்படங்கள் வருகிறது அவைகளைப் பார்க்கும் போது இந்திய சினிமாவின் தாக்கங்கள் இருக்கிறது. அவை தவிர்க்கப்பட்டு எமக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

பிரான்ஸ் தான் சினிமாவின் தாயகமே அப்படி இருக்கும் போது இங்கு ஐரோப்பாவில் இருக்கும் நம்மவர்கள் ஒரு பாட்டு இயக்கம் அப்படி எதை எடுத்தாலும் தமிழ்நாட்டில் போய்அந்தச் சாயலில் தான் செய்து கொண்டு வருகிறார்கள். இப்படிப் போகும் போது இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?

அதைத்தான் எங்களுக்கான இத்துவமான படைப்பாக மாற்ற எண்டும் என்று சொன்ன காரணம் இது தான்.

அப்படி நீங்க சொல்வது போலான மாற்றங்கள் வந்தது போல்…முயற்சித்தமாதிரி?
செய்கிறார்கள் செய்ய வேண்டும்

சினிமா என்று சொல்லப்படும் கலைப்படைப்பில் ஒரு சமூகம் தன்வாழ்வியலை வெளிப்படுத்தக் கூடிய ஊடகம். விடுதலைக்காகப் போராடும் ஒரு இனமான நாங்கள் இன்னுமொரு இனத்துக்கு எங்கள் போராட்டத்தை வலிகளை, துன்பங்கள் எங்கள் போராட்டத்தின் நியாயங்களைச் சொல்ல நாங்கள் சினிமாவைப் பயன்படுத்தலாம் அப்படிப் பயன்படுத்தும் போதுநாம் வேறு மொழிக் கலைஞர்களுடன் இணைந்து ஏன் இதைச் செய்ய முடியாது?

செய்யலாம். வேற்று மொழிக் கலைஞர்கள் என்றல்ல. எம்மிடமே இப்போது பன்மொழி ஆளுமை உள்ள இளையவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமே எம்மால் செய்ய முடியும். நீங்கள் கூறியது போல வேற்றுமொழிக் கலைஞர்களை தேடிப் போய் இணைந்து செயற்படும் போது பலவிதமான அனுபவகளைத் தரும்.

இலங்கையில் முற்போக்கான சிங்கள திரைப்படக் கலைஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து இயங்க வாய்ப்புக் கிடைத்தால் இயங்குவீர்களா?

அப்படிச் சந்தர்ப்பம் இலகுவில் கிடைக்காது கிடைத்தால் சேர்ந்து இயங்கும் வாய்ப்பு இருக்கிறது.

புலம்பெயர் தேசத்தில் படம் எடுக்கும் நீங்கள் ஈழத்துக் கலைஞர்களுடனும் சேர்ந்து இயங்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா ?

நிச்சயமாக இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் அடுத்த அல்லது அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைக்கும் என்று தான் நான் எதிர்பார்க்கிறேன்.

அடம்பன் படத்தின் தயாரிப்பு பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

இது ஒன்றரை மணிநேரப் படம். பொதுவாகவே படம் என்னும் போது செலவுகள் இருக்கும் இதிலும் இருந்த போதும் கூட்டு முயற்சி என்பதால் கையில் இருந்தது எல்லாம் போட்டு இந்தப் படத்தை முடித்திருக்கிறோம் 30,000 பிராங் வரை முடிந்திருக்கிறது. இதுவரை ஆயிரம் பேர் வரை தான் பார்த்திருக்கிறார்கள் 3500 பேர் வரை பார்த்தால் தான செலவுத் தொகையை எட்டும். சந்தோசமான விடயம் என்னவென்றால் இப்படத்தைப் பார்த்தவர்கள் இது பற்றி எல்லா விதத்திலும் பாராட்டியிருக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கான சந்தைப்படுத்தல் பற்றி  அறியத்தாருங்கள்?

படம் எடுப்பது கஸ்ரம் என்று சொன்னார்கள். ஆனால் எடுத்த படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது தான் கஸ்ரம். இந்திய சினிமாக்கள் மாதிரி பிரபலங்கள் இல்லாததால் எடுத்துத் திரையிட்டால் நஷ்ரம் வருமோ என்ற ரீதியில் தான் இதன் மீதான பார்வை இருக்கிறது. இதனால் சுவிசில் நாமே அரங்குகளை வாடகைக்கு எடுத்து விளம்பரம் செய்து திரையிடுகிறோம்.பிரான்சில் இங்குள்ள திரைப்படம் சார்ந்த கலைஞர்களையும் கலைஞர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுக்கும் அமைப்பான தடம் என்ற அமைப்பையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் , மற்றும் உங்களைப் போல ஊடகங்களையும் சந்தித்து எல்லோருடைய அனுசரணையோடும் நாங்கள் இந்தப் படத்தை பிரான்ஸில் வெளியிடுகிறோம்.

புலம்பெயர் தேசத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருந்து தனிப்பட்ட முறையில் தான் படைப்புக்கள் வெளிவருகின்றன. ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து ஒரு படைப்பைக் கொண்டுவரும் சாத்தியம் ஏன் இதுவரை உருவாகவில்லை
அப்படியான முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாங்கள் இருக்கும் நாட்டில் ஒன்று பட்டு ஒரு அமைப்பாக செயற்படுவோமாகில் ஒவ்வொரு நாட்டிலுமிருந்து தொடர்பு கொள்ளலும் இணைந்து செயற்படுவதும் இலகுவாக இருக்கும் . அடம்பனுக்கு அடுத்த முயற்சியாக சுவிசில் அப்படி ஒரு முயற்சியை தான் முன்னெடுக்க இருக்கிறோம்

ஒரு இயக்குனராக வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?

எங்கள் படைப்புக்கள் அதிகமாக வரவேண்டும். காரல்மார்க்ஸ் சொன்னது போல உனக்குள் தேடு… அந்த தேடல் முக்கியம் . எங்களுக்குள் இருக்கும் கதைகளுக்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்பது தான் என் விருப்பு.

அடம்பன் திரைப்படத்திற்கடுத்து வேறு முயற்சியில் ஈடுபட எண்ணியிருக்கிறீ ர்களா? ஆரம்பித்து விட்டீர்களா?

இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்தத் திரைப்படத்துக்குப் பின் பலரும் எங்களுடன் சேர்ந்து இயங்க விரும்பிக் கேட்டிருக்கிறார்கள். விரைவில் ஆரம்பிப்போம்

அடம்பன் படத்தை ஐரோப்பா முழுவதும் வெளியிடும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

நிச்சயமாக. சுவிசைத் தாண்டி ஒவ்வொரு நாட்டிலும் திரையிடும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

உங்கள் திரைப்பயணங்கள், முயற்சிகள் எதிர்கொண்ட சவால்கள் பற்றிய அனுபவங்களை மனமுவந்து எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் உங்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சந்தோசம். இதுவரை படம் சார்ந்து கேட்ட கேள்விகளில் இருந்து பல விடயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. உங்கள் நேரத்தை செலவு செய்து இந்த நேர்காணலை மேற்கொண்டமைக்கு உங்களுக்கும் உங்கள் சஞ்சிகைக் குழுவினருக்கும் அடம்பன் திரைப்படக் குழுவின் சார்பில் என் நன்றிகள்.

Copyright © 7233 Mukadu · All rights reserved · designed by Speed IT net