வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம்

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளதாகவும் அவரிடம் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம் றியால் முன்னிலையில் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது வித்தியா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த விசாரணையில் குறித்த சாட்சியத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் வழக்கு விசாரணைகளை துரிதமாக நடத்தி முடிப்பதற்கு கிராம மக்களின் உதவி தமக்கு தேவைப்படுவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் புங்குடுதீவு கிராமத்தில் வசித்த குடும்பங்களின் விபரம், சம்பவத்தின் பின்னர் குறித்த கிராமத்திலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் புதிதாக குடியேறியுள்ளவர்களின் விபரங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு நீதிபதி எம்.எம் றியால் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உதயன்

Copyright © 8973 Mukadu · All rights reserved · designed by Speed IT net