“கடலில் எரிந்த தியாகங்கள்” கரும்புலிகள் நாள் சிறப்பு பதிவு.

13567514_1302311183132048_3588697191253611159_n

சேரா 2 …, சேரா 2 … நவம்பர்… அலறிய வோக்கியை தூக்குகிறான் செழியன். நவம்பர் சொல்லுங்கோ. சேரா2 நாங்க வீடு கட்டிற இடம் தெரியுமல்ல? “ஒமோம் சொல்லுங்கோ … ” அங்க சரியான மழையா கிடக்கு வீட்ட கட்ட முடியல்ல கீழால வெள்ளம் பாயுது எங்கட அடித்தளத்த கரைக்குது என்ன பண்ண? மண்மூட்டை எதாவது கொண்டு வர லொறி அனுப்ப முடியுமா? சங்கேத பாசையில் சென்ற தகவல் மறுமுனையில் விளங்கி கொள்ளப்படுகிறது. மீன் பிடிப்பதற்காகவும் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும் கடற்புலிகளின் அணி ஒன்று தமிழீழ கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிற்கிறது.

வேராங்கண்டல் முழங்காவிலில் இருந்து புறப்பட்ட அந்த மீன்பிடி படகு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு மீன்பிடிப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்க, காலநிலை தாண்டவம் ஆடத்தொடங்கியது. அந்த றோளர் படகு கடற்புலிகளின் படகு கட்டுமானப்பகுதியால் பயிற்சிக்கும், மீன்பிடிக்கும் என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் எந்த ஆயுதங்களும் இன்றி தனி தொலைத்தொடர்பு சாதனத்தோடு மட்டும் அந்த போராளிகளின் அணி கடலில் நின்றிருந்தது. மீன் பிடித்து கொண்டிருந்த படகை காலநிலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததால், கடல் அடித்து செல்ல தொடங்கியது. படகுக்குள் இருந்தவர்கள் பலத்த முயற்சி எடுக்கிறார்கள்.

கரிய வேங்கைகள் தங்கள் படகை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர படாத பாடு படுகிறார்கள். ஆனால் எதுவுமே கைக்குள் இல்லை. இயந்திரத்தின் இயக்கம் நின்று விட்டது. அதை திருத்தி மறுபடியும் இயங்க வைக்க கடும் முயற்சி எடுத்த அந்த அணிப் போராளிகள் தோற்றுப் போகிறார்கள். அலையின் போக்குக்கு செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. தங்கள் கட்டளை செயலகத்துடனான தொடர்பை துண்டிக்காமல் தமது நிலைப்பாட்டை தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். படகிற்கு பொறுப்பாளன் ஆற்றலோன் நடக்கும் நிலைப்பாட்டை கட்டளை செயலகத்துக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறான். கட்டளைச் செயலகம் உடனடியாக அணியில் இருக்கும் படகுப் பொறுப்பாளர் ஆற்றலோன் மற்றும் படகு இயந்திரவியலாளர் அன்பனுடன் தொலைத்தொடர்பாளர் பொதிகைத்தேவனை படகில் நிறுத்தி ஏனைய போராளிகளை உடனடியாக ரோளருடன் இணைக்கப்பட்டிருந்த சிறு படகு மூலமாக தளம் திரும்புமாறு கட்டளை வழங்குகிறது.
அவர்கள் தங்கள் தோழர்களை விட்டு தளத்துக்கு சென்று விட சிறு படகில் ஏறுகிறார்கள் ஏனைய அறுவர் கொண்ட அணி. அந்த சிறு படகில் இணைக்கப்பட்டிருந்த இயந்திரத்தால் ரோளரை கட்டி இழுக்க முடியாது. அதனால் அந்த அணி மூன்று கரும்புலி வீரர்களை விட்டு பிரிந்து விடுகிறது.

ரோளர் படகு கடல்நீரால் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் கடல் கட்டுப்படுத்த தொடங்கியது. அந்த மன்னார் கடற்பரப்பு தன் மடி தவழ்ந்த தன் குழந்தைகளை யாழ்ப்பாண கடலில் தொலைக்கப் போவது தெரியாமல் இழுத்து செல்கிறது. “அண்ண எதாவது ஒழுங்கு இருக்கா…? ” அவர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். கட்டளை செயலகத்தில் இருந்து அவர்களுக்கான உதவிப்படகு அனுப்பப்படுகிறது. நாச்சிக்குடாவில் இருந்து சென்ற உதவிப்படகு வானலை மாற்றத்தில் சிக்கி அருகில் செல்லமுடியாமல் தளம் திரும்புகிறது. மீண்டும் மீண்டும் எடுத்த முயற்சிகள் காலநிலையால் முடக்கப்பட்டு விட பொதிகைத்தேவனுடன் ஆற்றலோனையும், அன்பனையும் சுமந்த படகு அலையின் போக்கிற்கு சென்று கொண்டிருக்கிறது. பலமான காற்று, அடித்தெழும்பும் பலத்த அலை இவற்றுக்குடையே இயந்திரம் இயங்காது நின்றுவிட அந்த கரிய புலிகளை சுமந்த படகு நீரோட்டத்தில் இழுத்து செல்லப்படுகிறது.

ஆற்றலோன் அன்பனை இயந்திரத்தின் நிலையை கேட்கிறான் ஆனால் அன்பனின் இயந்திரவியல் அறிவு கூட அன்று கை கொடுக்கவில்லை. அவன் முயன்று கொண்டே இருக்கிறான். ஆற்றலோன் கட்டளைச் செயலகத்துடனான தொடர்பில் நிலைமைகளை விளக்குகிறான். “அண்ண எங்களுக்கு இயந்திரத்துக்கான பொருட்கள் வேணும் இல்லை என்றால் இயந்திரம் வேலைசெய்யுறது கடினம்”. “ஓம் விளங்குது உங்களுக்கான சாமான ஏத்தி கொண்டு வருகினம் வேகமா கிடைப்பினம். ” அதுவரை சமாளியுங்கோ. கட்டளைச் செயலகம் அறிவிக்கிறது.

நெடுந்தீவு கடற்பகுதி சில மணி நேரங்களில் அந்த படகை தன் அலைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, நெடுந்தீவின் சிங்கள கடற்படை அவர்களை வழி மறிக்கிறது. நிலைமை புரிந்து கட்டளையகத்துக்கு தகவல் அனுப்புகிறார்கள் புலிகள். நிலைமை சிக்கலாகி விட்டதை உணர்கிறது கட்டளைசெயலகம். தமிழீழத் தேசிய தலைவருக்கு செய்தி அனுப்பப்படுகிறது. அவரிடமிருந்து அரசியல்துறை ஊடாக போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் கவனத்துக்கு அந்த செய்தி செல்கிறது. உடனடியாக சிங்களத்தின் முற்றுகைக்குள் தனித்து ஆயுதங்கள் அற்ற நிலையில் இருக்கும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டப்படுகிறது.
ஆனால் அதற்கிடையில் இவர்களை சூழ்ந்த இரு டோறா படகில் ஒன்று தளம் திரும்ப மற்றையது இவர்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

கட்டளைப்பீடத்தில் இருந்த பொறுப்பாளர் கொதித்து போகிறார். “இவனுக்கு இதுவே வேலையா போச்சு. ” கோவத்தில் எழுகிறார் அவர். காரணம்
கடந்திருந்த முதல் வாரமும் மீன் பிடித்துக் கொண்டிருந்த இதே போராளிகளை சூழ்ந்த கடற்படை அவர்களை கைது செய்ய முனைந்ததும், போராளிகள் அவர்கள் நின்ற இடத்தில் இருந்து மேலாக படகை செலுத்தி இரணைதீவு பகுதிக்கால் தளம் திரும்பியதும் நடந்து முடிந்த நிகழ்வு. இன்று மீண்டும் கடற்புலிகளின் படகை கடற்படை மறித்து அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்ல முனைகிறது. “அவனின் நோக்கம் எங்கள கைது செய்யுறது தான்” ஆற்றலோன் செய்தி அனுப்புகிறான்.

சென்றிருந்த மறு டோரா திரும்பி வர அதில் இருந்து போர்நிறுத்த கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் தமது அடையாளத்தை காட்டி படகை நெருங்குகிறார்கள். போராளிகளுக்கு கட்டளைப்பணியகத்தில் இருந்து கட்டளை வருகிறது “அவர்களை சோதனையிட அனுமதியுங்கள்”. வந்த கண்காணிப்புக்குழு படகினுள் சென்று தேடி “எந்த வெடி பொருட்களோ ஆயுத தளபாடங்களோ இல்லாத நிராயுதபாணிகள் ” என்று சிங்களத்துக்கு தெரிவிக்கிறார்கள். ஆனால் அதை சிங்களம் ஏற்க மறுத்து படகை காங்கேசன்துறைக்கு கொண்டு செல்ல திட்டமிடுகிறது. அதற்கு புலிகள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

அந்த காலம் போர்நிறுத்தம் என்ற பெயரில் புலிகளின் ஆயுதங்கள் இடைக்கால மௌனிப்பை செய்திருந்தை இந்த உலகமே அறியும். எதிரியையும் எங்களையும் கண்காணிக்க வேண்டும் என்ற போர்வையில் நோர்வே தலமையிலான கண்காணிப்பு குழு எங்கள் தேசத்தின் பாகங்கள் எங்கும் பரவி இருந்தது. அவர்கள் எங்கள் போர்நிறுத்த மீறல்களை கண்காணித்தார்களோ இல்லையோ எங்கள் நடவடிக்கைகளை, எம் வியூகங்களை கவனிக்க தவறவில்லை. எங்களின் இருப்பிடங்கள், நாளாந்த பயிற்சி மற்றும் அரசியல் நகர்வுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறவில்லை. எங்கள் போராளிகளின் ஒவ்வொரு அசைவையும் தமது தலைமைக்கு தெரியப்படுத்தாமல் இருக்கவில்லை. இது நியம் என்பதை நாம் பிந்திய காலங்களில் உணர்ந்து கொண்டோம். யுத்த நிறுத்தம் என்ற பெயரில் எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த சர்வதேச பார்வை வீச்சானது எம்மை அடக்கவும், அழிக்கவும் வழி ஏற்படுத்தி இருந்தது என்பது நியமே. இதை எல்லாம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போலவே நாம் உணர்ந்து கொண்டோம். சண்டையின் உச்சத்தை நாம் எட்டிப்பிடித்து இருந்த போது. எங்கே புலிகள் வெற்றி பெற்று தமிழீழத்தை அமைத்து விடுவார்களோ என்று அஞ்சிய சர்வதேசத்தின் கோழைத்தனமான கோரிக்கையும் திட்டமிட்ட ஏற்பாடும் தான் இந்த போர்நிறுத்த காலம்.

எங்கள் இராணுவ நிலைகளை, அரசியல் நிலைகளை எல்லாம் தங்கள் புலனாய்வுக் கண்களுக்குள் கொண்டு வந்திருந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களுக்கு இந்த காலம் சரியான தருணமாக அமைந்தது என்றால் மிகையாகாது. அவர்கள் எம்மை அழிப்பதற்கான தகவல்களை பெற, எங்கள் பலம், பலவீனம் என்பவற்றை இனங்காண, திட்டமிட, செயற்படுத்த என அத்தனைத்தைக்கும் குறிப்பிட்ட இந்த காலத்தை பயன்படுத்த தவறவில்லை.

ஆயிரக்கணக்கான போராளிகள் நிராயுதபாணிகளாக அரசியல் வேலைக்காக இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நின்றிருந்தார்கள். இங்கே ஆழ் கடலில் மூன்று உயிராயுதங்கள் நிராயுதபாணியாக நின்றிருந்தார்கள். இந்த நிலையில் எமக்கு பல சிக்கல்கள் உருவாகி கொண்டிருந்தது.
மூன்று கரும்புலிகளை ஆழ்கடலில் எதிரிப்படை முற்றுகைக்குள் நிராயுதபாணிகளாக வைத்திருக்கிறார்கள். அவர்களை சூழ்ந்து கைது செய்ய சிங்கள கடற்படை முயன்று கொண்டிருக்கிறார்கள். சுற்றி சுற்றி வந்து உடனடியாக படகில் இருந்து வெளியேறி தமது படகிற்கு வருமாறு பணிக்கிறார்கள். முடியாது என்று புலிகள் மறுக்கின்றார்கள். நாம் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடலால் அடித்து வரப்படுவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த தகவல் காற்றோடு செல்கிறது. சிங்களப்படை கட்டாயப்படுத்துகிறது. நாங்கள் உங்களை சோதனையிட வேண்டும் அதனால் மறுக்காமல் வந்து எங்கள் படகில் ஏறுங்கள் என்கிறது சிங்களப்படை. ஆனால் கிட்ட போக பயத்தோடு சுற்றி சுற்றி வருகிறது. போராளிகளின் படகிற்குள் வெடி பொருட்கள் இருக்கலாம் அதை வெடிக்கவைத்து தம்மையும் அழிக்கலாம் என்ற நினைப்பு அவர்களை பயம் கொள்ள வைத்திருந்தது. ஆனால் அவர்களை சோதனையிட்ட கண்காணிப்புக்குழு எதுவும் இல்லை என்கிறது.

கரும்புலிகளால் அவர்களுக்கு நிலமை விளக்கப்பட்டு அது சிங்களத்துக்கு எடுத்துரைக்கப்படாலும் சிங்களம் ஏற்றுக்கொள்ளாது போராளிகளின் படகையும் அவர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறது. “நாங்கள் படகை சோதனை செய்துவிட்டோம் எதுவும் இல்லை என்று கூறிய கண்காணிப்புக்குழுவை, படகை தங்களின் முகாமுக்கு இழுத்து வந்து அங்கு வைத்து சோதனையிடுமாறு சிங்களம் கூற கண்காணிப்புக்குழு மௌனித்து நிக்கிறது. போராளிகளின் நிலை புரிந்து அவர்களை காப்பாற்ற வேண்டிய போர்நிறுத்த கண்காணிப்புகுழு கையை விரிக்கும் நிலை. எங்கள் சமாதான செயலகம் தொடர்ந்து முயற்சி எடுத்து கொண்டிருந்தாலும் போர்நிறுத்த கண்காணிப்பு குழு மௌனத்தோடுதான் இருக்கிறது. சமாதான செயலகம் ஜனாதிபதி செயலகத்துடனான தொடர்பை ஏற்படுத்தி நிலைமைகளை விளக்க முற்பட்ட போதும், உரிய அதிகாரி இப்போது இல்லை என்று தொடர்பு துண்டிக்கப்பட்டு திட்டமிட்ட ஒரு யுத்தநிறுத்த மீறல் அரங்கேற்றப்படுகிறது.

போராளிகளை முற்றுகைக்குள் இறுக்கிக் கொண்டிருந்த சிங்களம் அவர்களை நகர விடாது துப்பாக்கிகளை குறிவைக்க, கரும்புலிப்படகில் இருந்து ஒரு செய்தி கட்டளை நிலையத்திற்கு வருகிறது. “அண்ண நீங்க அனுப்பின வெள்ளையண்ணையாக்கள் கூட மௌனமா இருக்கினம் எங்கள அவன் தன்ட வீட்ட கூட்டி போக பாக்கிறான்.

புலிகளின் படகிற்குள் இருந்த கண்காணிப்புக்குழுவை தன் படகிற்குள் ஏற்றி விட்டு போடப்பட்டிருந்த நங்கூரத்தை வெட்டி, படகைக் கட்டி இழுத்து செல்ல கடற்படை முனைப்பு காட்டி கண்காணிப்பு குழுவை ஏற்றுவதற்காக டோராவை ரோளரோடு அணைக்க முயலும் அதே நேரம் தங்கள் கள்ளத்தனத்தை அரங்கேற்ற முயல்கிறது கடற்படை. ஆனால் போராளிகளோ உறுதியாக இருக்கிறார்கள். கண்காணிப்பு குழுவை அனுப்பாது தடுத்து வைக்கிறார்கள்.

நாங்கள் மூன்று கரும்புலிகளை இழக்கப் போகிறோம் என்ற உண்மை உணரப்பட்டது. “அண்ண முடிவை சொல்லுங்கோ நாங்கள் படகையும் எரிச்சு குப்பி அடிக்கிறம். ” மறுமுனையில் கட்டளை நிலையத்தில் இருந்த விழிகள் கலங்கத் தொடங்கின நிலைமைகள் தலைமைக்கு தெரியப்படுத்தப்படுகிறது. கடற்புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் யாவும் இந்த சம்பவத்தை மட்டுமே கூறுகிறது. ஒருவன் விம்மலுடன் நடப்பதை கேட்டுக் கொண்டிருக்கிறான். தன் கண்முன்னே தனது தம்பியின் படகு இராணுவ முற்றுகைக்குள் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான் ” அண்ண பொதிகைக்கு ஒன்றும் நடக்காது கவலைப்படாதீங்க.” அருகிலிருந்தவன் தேற்றுகிறான். அவனுக்கு தன் தம்பியின் முடிவு தெரிந்து விட்டது. அவனின் துணிவும் அடிபணியாத வீரமும் அவனை கொடையாளனாக்க தயங்காது என்பதை கண்பார்வை தூரத்தில் நின்ற படகில் இருந்த கடற்புலி போராளி அறிவான். அவன் பொதிகைத்தேவனின் மூத்த சகோதரனாக இருந்தாலும் ஒரே படையணியில் இருந்த போராளியாவான். பொதிகைத்தேவன் நஞ்சுக்குப்பிக்கும் சர்வதேசத்தின் வஞ்சகத்துக்கும் சிங்களத்தின் கொடுங்கோலுக்கும் சாவடைவதை அவன் விரும்பவில்லை

தம்பி கரும்புலி என்பதை அறிந்தே இருந்தான். அடுத்த கட்ட ஈழப்போர் ஆரம்பித்தால் இலக்கு ஒன்றை தகர்த்து சாதிக்க வேண்டியவன் நிராயுதபாணியாக சாவதை அந்த அண்ணனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெடுந்தீவு கடல் தன்னுள் மூன்று வீரர்களை சாம்பலாக கரைத்துக் கொள்ளப் போவது தெரியாமலே மூசிக் கொண்டு கிடந்தது. கண்காணிப்புக்குழு அமைதி காத்தது. நிலவரம் கட்டளை நிலையத்துக்கு தெரியப்படுத்தப்படுகிறது. “சரணடைய மாட்டோம்” மூன்று கரிய புலிகளும் தங்கள் தெளிவான முடிவை அறிவிக்கிறார்கள். பல முனை முயற்சிகள் தோற்றுப் போகின்றன. “சண்டையை தொடங்கி மூவரையும் எடுத்திடலாமா? ” தலைமையிடம் சண்டைக்கான அனுமதி கோருகிறார் சிறப்புத்தளபதி. சண்டைப் படகுகள் , கரும்புலிப்படகுகள் தயாராகி கட்டளைக்காக காத்து கிடக்கிறது மூன்று கரும்புலிகளுக்கு எதாவது நடந்தால் அங்கே சுற்றி நின்ற அத்தனை டோராக்களும் மூழ்கடிக்கும் வேகத்தோடும் துணிவோடும் சபதத்தோடும் கடற்புலிகளின் அணிகள் தளத்தில் அனுமதிக்காக காத்துக் கிடக்கின்றன. அனுமதி மறுக்கப்படுகிறது. “அவன் யுத்தநிறுத்தத்தை மீறுவதற்காக நாமும் மீறல் ஆகாது என்று தலமைச்செயலகத்தில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

– [ ] 1500 க்கு மேற்பட்ட அரசியல் போராளிகள் நிராயுதப்பாணிகளாக சிங்களத்தின் பிடிக்குள் இருக்கிறார்கள். அவர்களை எந்த முன்னறிவித்தலும் இன்றி சிங்களம் கைது செய்யலாம் அல்லது ஆயுதமின்றி நிராயுதமாக நிற்பவர்கள் மீது சிங்களத்தின் ஆயுதங்கள் தாக்குதல் நடத்தலாம்.

– [ ] அதேநேரம் சர்வதேசத்தின் நிலைப்பாட்டில் குற்றம் செய்த சிங்களம் தப்பித்து கொள்ளும் புலிகள் தான் சண்டையை தொடக்கினார்கள். என்ற நிலை உருவாகும்.

– [ ] பயங்கரவாதிகள் சண்டையை தொடங்கி சமாதானத்தை குழப்பி விட்டார்கள்” மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பி விட்டார்கள் என்று சிங்களம் பரப்புரை செய்து எந்த மக்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய துணிந்து நடுக்கடலில் நிற்கிறார்களோ அவர்களின் தியாகம் வீணடிக்கப்படும். இவ்வாறான காரணங்களோடு பல காரணங்கள் இருக்க தலைமையால் சண்டைக்கான அனுமதி மறுக்கப்படுகிறது.
– [ ]
“நவம்பர். நீங்கள் யார் என்று எல்லாருக்கும் காட்டுங்கோ”
கட்டளைப்பணியகம் ஆற்றலோனுக்கு கட்டளை குடுக்க. அதற்காக தயாராகினார்கள். அந்த கரிய புலிகள்.ஆற்றலோனின் குரல் மாறி பொதிகைத்தேவனின் குரல் காற்றில் வருகிறது. அங்கு நடப்பவற்றை பொதிகைத்தேவன் கூறுகிறான் நாங்கள் வலையை உடலில சுற்றிவிட்டு பெற்றோல் ஊற்றி கொழுத்தப்போறம்.
படகில் தண்ணி ஏறினால் வெளியேற்ற என்று பயன்படுத்தப்படும் நீர் இறைக்கும் இயந்திரத்துக்கான பெற்றோல் 5 லீட்டர் வழமையாக படகில் இருக்கும். அதையே ஆயுதமாக்கினர் புலிகள்.

“அண்ண… அன்பன் இப்ப வலைய உடம்பில சுற்றி பெற்றோல ஊற்றி கொழுத்துறான்…” பொதிகைத்தேவன் கட்டளை செயலகத்துக்கு நிலைமைகளை கூறுகிறான். தீ மூண்ட சத்தம் மட்டுமே வருகிறது. இப்ப ஆற்றலோன் அன்பனோட சேர்ந்து அந்த வலைய உடம்பில சுத்தி எரியுறான். சிறிய இடைவெளியில் இப்ப நானும் வலைய சுற்றிவிட்டேன் பெற்றோல ஊற்றி கொழுத்துறன். நாங்கள் யார் என்று காட்டி செல்லுறம் “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”
தொலைத்தொடர்புக்கருவி இயங்கிக் கொண்டே இருக்கிறது. எந்த சலனமும் அற்று கரிய புலிகள் தீயோடு எரியத் தொடங்குகிறார்கள். படகு தீப்பிடிக்கிறது. சுவாலை அந்த கடலையே சூடாக்கும் வெப்பத்தோடு எரிகிறது.
கடற்கரும்புலிகளான லெப்டினன் கேணல் ஆற்றலோன்/ சுதன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் ஆகிய வேங்கைகளை தீ உண்டு கொண்டிருந்தது. எந்த சலனமும் இன்றி அந்த கரிய வேங்கைகள் சர்வதேசத்துக்கு புலிகளின் வீரத்தை சொல்லி தீயோடு சங்கமிக்கத் தொடங்கினார்கள். வெடி பொருள் இன்றியும் புலிகள் சாதிப்பார்கள் என்று மூன்று கரும்புலிகளும் கூறி சென்று விட்டார்கள்.

எந்த மக்களை நேசித்தார்களோ, எந்த மண்ணை காதலித்தார்களோ அதற்காக தங்கள் உயிரை அடிபணியாத வீரத்தை காட்டி தீயோடு எரிந்து போனார்கள்.

– [ ] துப்பாக்கி முனையை கரியபுலிகளுக்கு எதிராக நிமிர்த்திப்பிடித்த எதிரியின் நெஞ்சம் வெடித்திருக்கும். வான் எழுந்த வெப்பக்காற்றின் சூட்டை தாங்க முடியாது திகைத்து நின்றது கண்காணிப்புக்குழு. அவர்கள் மேலெழுந்த கரிய புகையை வெறித்து கொண்டிருந்தார்கள். பொதிகையும் ஆற்றலோனும் அன்பனும் விடுதலைப்புலிகளின் உறுதியை தற்கொடையை சர்வதேசத்துக்கு மீண்டும் நிலைப்படுத்தினார்கள். பணிந்திடாத வீர தலைவனின் தம்பிகள் அல்லவா? மூத்த தளபதி கேணல் கிட்டுவின் வாரிசுகளல்லவா? குப்பி கடித்து வீரம் நிலைநாட்டிய விக்டரின் சேனையல்லவா? அஞ்சாத துணிவோடு தாயக கடலில் தணலுக்கிடையில் கருகி போனார்கள்.

சர்வதேசம் புரிந்திருக்கும் புலி வீரத்தை. சிங்களம் திகைத்திருக்கும் கரும்புலிகளின் தீரத்தினால். ஆனால் எங்கள் விழிகள் மட்டும் அவர்களின் தியாகத்தை எண்ணி சுடுநீரை சொரிந்து கொண்டது. அவர்கள் சென்று விட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்தவனின் இறுதிக் குரலை வோக்கியில் கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் அவன் எரிவதை கண்ணால் பார்த்துக்கொண்டு நின்ற கொடுமையான வலி எங்கள் வரலாற்றில் பதிவாகியது ஆனால் அவன் தளரவில்லை. போராளியின் விழிகள் கலங்கவில்லை , கரங்கள் உறுதி கொள்கிறது. துப்பாக்கியை இறுக பற்றிக் கொள்கிறது.
********************************
கரும்புலிகள் நாள் சிறப்பு பதிவு…
கவிமகன்.இ
05.07.2016

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net