புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை; சந்தேகநபர்களுக்கு பலத்த பாதுகாப்பு.

viththija_26102015_2
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜுலை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

மன்றில் ஆஜரான குற்றப்புலனாய்வு அதிகாரி நீதவானிடம் “குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் வழங்கியுள்ள வாக்குமூலங்களை விசாரணை செய்வதற்கு சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து தருமாறு” கேட்டார்.

இதன் போது நீதவான் “சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் இதுதொடர்பில் ஆராய முடியும், அதுவரை மன்றில் உள்ள சந்தேகநபர்களின் வாக்கு மூலங்களை வழங்க முடியாது” என மறுத்தார்.

இதன்போது தனது கருத்தை தொடர்ந்த அவ்வதிகாரி “குறித்த வாக்குமூலங்களை வழங்கினால், விசாரணைகளை துரிதகதியில் முன்னெடுக்க முடியும்” என நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் “கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பெரும்பாலான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும், ஒரு சில அறிக்கைகள் மிகவிரைவில் சமர்ப்பிக்க முடியும்” என மன்றில் கூறினார்.

சந்தேக நபர்களின் ஆதங்கம்…

கூட்டில் நின்ற சந்தேகநபர்களின் ஒருவரான மகாலிங்கம் சசிதரன் என்பவர் “தனது தாயாரின் வழக்கு தொடர்பான, போக்கு கவலை அளிப்பதாக” நீதவானிடம் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதவான் எம்.எல் றியாழ் “இவ்வழக்குடன் மேற்கூறிய உமது தாயாரின் வழக்கினை இணைக்க கூடாது, அது தொடர்பான விசாரணை உரிய முறையில் நடைபெறுகின்றது. எனவே அந்த வழக்கு தொடர்பாக இங்கே கதைக்க முடியாது” என கூறினார்.

தொடர்ந்து நீதவானை நோக்கி மற்றுமொரு சந்தேக நபரான சந்திரகாசன் எனப்படுபவர் “இவ்வழக்கு எதுவித முன்னேற்றமும் இன்றி செல்கின்றது, எனவே டி.என்.ஏ அறிக்கையை ஆராய்ந்தால் உண்மையான குற்றவாளி யார் என்பது தெரிந்து விடும் தானே?” என கேட்டார்.

இதற்கு பதிலளித்த நீதவான் “டி.என்.ஏ அறிக்கை சமர்ப்பிப்பது, அது தொடர்பாக நடவடிக்கை உரிய முறையில் இடம்பெறும் எனவே அதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்” என கூறினார்.

சட்டத்தரணி இருவர் ஆஜர்…

குறித்த வழக்கு இன்றையதினம் சற்று நீடித்தது. இதன் போது மனுதாரர் சார்பாக சட்டத்தரணிகளான ரஞ்சித் குமார், சாளினி ஆகியோர் ஆஜராகி வழக்கினை கொண்டு சென்றனர்.

மேற்படி வழக்கு இவ்வாறாக நடைபெற்று இறுதியாக நீதிவான் எதிர்வரும் ஜுலை மாதம் 26 ஆம் திகதி வரை 12 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைத்தார்.

வழமைக்கு மாறாக சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு அதிகமாக வழங்கப்பட்டிருந்ததுடன் மோட்டார் சைக்கிள் படையணியும் பாதுகாப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அதிரடி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net