இறுதி கிரியையில் கலந்து கொள்ள சுவிஸ் குமாருக்கு அனுமதி.

veteja-1
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் மற்றும் மகாலிங்கம் சசீந்திரன் ஆகிய இருவருக்கும் அவர்களின் தாயாரின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ. சபேசன் அனுமதி வழங்கினார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயாரை மிரட்டினார்கள் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் தயாரான மகாலிங்கம் தவநிதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்று இரவு மரணமடைந்தார்.

இந்நிலையில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் மாணவியின் தாயாரை மிரட்டியது தொடர்பிலான வழக்கு விசாரணை பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இரு சந்தேக நபர்களில் ஒருவர் சிறைச்சாலையில் மரணமடைந்த நிலையில் மற்றைய சந்தேக நபர் மன்றில் முற்படுத்தப்பட்டார்.

அதன் போது அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரகுபதி சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

அதன் போது சட்டத்தரணி குறிப்பிடுகையில் ,

கடந்த ஐந்தாம் மாதம் 16ம் திகதி மாணவி கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முடிவடைந்த பின்னர் நீதிமன்ற வளாகத்தின் வெளியில் மாணவியின் தாயாருக்கும் சந்தேகநபர்களின் உறவினர்களுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள இவர்கள் அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்ய முயன்றனர். அவர்களின் முறைப்பாட்டினை பொலிசார் ஏற்கவில்லை.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்று இரண்டு வழக்கு தவணைகளின் பின்னர் மாணவியின் தாயார் தமது தரப்பு சட்டத்தரணி ஊடாக இந்த விடயத்தை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதனை அடுத்து நீதிமன்றம் மாணவியின் தாயாரை அது தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்ய அறிவுறுத்தியது. அதன் பிரகாரம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு சந்தேக நபர்களின் உறவினர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற வேளை பொலிசார் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள வில்லை. அதனை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு அவர்களுக்கு சட்டத்தரணிகள் இல்லை.

மாணவி கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன , அதனை வித்தியாவின் அண்ணன் தான் முன்னின்று செய்தார் என சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அதன் போது குறுக்கிட்ட மாணவியின் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்து அந்த குற்றசாட்டை மறுத்தார். வித்தியாவின் படுகொலைக்கு பிறகு அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் அனைவரும் வவுனியாவிலேயே தங்கி இருந்தனர் என கூறினார்.

அதனை தொடர்ந்து தனது வாதத்தை முன் வைத்த சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ,

மாணவியின் கொலையின் பின்னர் சந்தேக நபர்களின் வீடுகள் எரிக்கப்பட்ட போதிலும் , வீதிகளில் ரயர் கொளுத்திய போதிலும் , கடைகளை மூடுமாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும் இவற்றினை தடுக்க வேண்டிய பொலிசார் என்ன செய்தார்கள் ? நீதிமன்றம் சென்ன செய்தது ? யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதி மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னரே நீதிமன்றம் விழித்துக் கொண்டது.

மாணவியின் தாயாரை மிரட்டியவர்கள் என குற்றம் சாட்டி தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசாரினால் இதுவரை நான்கு அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.அந்த நான்கு அறிக்கையும் ஒரே அறிக்கை தான்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவேளை மரணமடைந்த மகாலிங்கம் தவநிதி என்பவரது உடல் நிலை குறித்து நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை நீதிமன்று கவனத்தில் எடுக்காததால் தான் அவருக்கு மரணம் ஏற்பட்டது. அவருக்கு பிணை வழங்கப்பட்டு இருந்தால் , மரணத்தை தடுத்து இருக்கலாம்.

அவருடன் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மற்றைய சந்தேக நபருக்கும் இது போன்ற ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் , தடுத்து வைக்கப்பட்டு உள்ளவரின் மருமகள் , பேரப்பிள்ளைகளை பராமரிக்க வேண்டிய தேவையுள்ளதாலும் , பிணை வழங்கும் சட்டத்தின் பிரகாரம் இன்றைய தினம் அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரினார்.

பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்து படுகொலை செய்யப்பட்ட மாணவி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவிக்கையில் ,

இந்த வழக்கினை திசை திருப்பும் நோக்குடன் சட்டத்தரணி தனது வாதத்தை முன்வைத்து உள்ளார். ஏனைய கொலை வழக்கினை விட மாணவியின் படுகொலை யானது மிருக தனமான , காட்டு மிராண்டி தனமான கொலை ஆகும். இது முழு இலங்கையையும் கொத்தித்தெழ செய்த பாரதூரமான வழக்காகும்.

அவ்வாறான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துதல் என்பது பாதிக்கப்பட்ட வர்களை மேலும் பாதிப்படைய செய்வதாகும். அதனாலயே இந்த வழக்கு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட்சியங்களை பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த சந்தேகநபரான மகாலிங்கம் தவநிதியின் மரணம் இயற்கை மரணம். சிறைச்சலையில் அவர் மீது சித்திரவதை புரியப்பட்டது என்றோ , அல்லது துன்புறுத்தப்பட்டார் என்றோ , நீதிமன்றத்திலையோ அமைப்புக்களிடமோ எந்த முறைப்பாடும் செய்யப்படவில்லை.

விளக்கமறியலில் உள்ளவர் மரணமடைந்தது இது தான் முதல் தடவை அல்ல. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளார்கள்.

ஆகவே மரணம் அடைந்தமையை காரணம் காட்டி இவருக்கு பிணை வழங்க கூடாது. அத்துடன் பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்ற நியாயதிக்கத்திற்குள் இல்லை அது மேல் முறையீட்டு நீதிமன்றுக்கே உள்ளது. எனவே சந்தேக நபருக்கு பிணை வழங்க ஆட்சேபனை தெரிவித்தார்.

அத்துடன் மரணமடைந்த குறித்த சந்தேக நபருக்கு தேவையான , அவர் விரும்பும் வைத்திய சாலையில் , அவர் விரும்பும் வைத்தியரிடம் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்து என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.

அதனை தொடர்ந்து பொலிஸ் தரப்பினர் மன்றில் தெரிவிக்கையில் ,

படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயான சிவலோகநாதன் சரஸ்வதி தன்னை சிலர் மிரட்டியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு மாணவி கொலை வழக்கில் கைது செய்யபட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள மகாலிங்கம் சசிக்குமார் மற்றும் சசீந்திரன் ஆகியோரின் தாய் மற்றும் அவர்களின் உறவினரான மற்றுமொரு பெண் ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலை படுத்தினோம்.

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் நீதிமன்றம் விளக்கமறியலில் தடுத்து வைத்துள்ளது. மாணவியின் தாயாரை மிரட்டியது தொடர்பிலான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாவில்லை. எனவே இவரை பிணையில் விடுவிக்க பொலிசார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பதில் நீதவான் சந்தேக நபர் சார்பிலான பிணை விண்ணப்பத்தினை நிராகரித்து அவரை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

இறுதி கிரியையில் பங்கேற்க அனுமதி.

அதனை தொடர்ந்து விளக்கமறியலில் உள்ள சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி , சிறைச்சாலையில் மரணமடைந்த மகாலிங்கம் சசிக்குமாரின் இறுதி கிரியையில் பங்கேற்க விளக்கமறியலில் உள்ள குறித்த சந்தேக நபருக்கு அனுமதி வழங்க கோரினார்.

மனிதாபிமான அடிப்படையில் இறுதி கிரியையில் கலந்து கொள்ள அனுமதிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என மாணவி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள இறுதி கிரியையில் சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் பாதுகாப்பில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சுவிஸ் குமாருக்கும் அனுமதி.

அதனை தொடர்ந்து சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மாணவி கொலை வழக்கினை இன்றைய தினம் மன்றில் எடுத்துக் கொள்வதற்காக நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் , சிறைசாலையில் மரணமடைந்த மகாலிங்கம் தவநிதியின் இரு மகன்களான மகாலிங்கம் சசிகுமார் மற்றும் மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் அவர்கள் தமது தாயாரின் இறுதி கிரியையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என மன்றில் கோரினார்.

மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் தமது தாயின் இறுதி கிரியையில் பங்கேற்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் சுவிஸ் குமார் என்பவர் பணபலம் படைத்தவர். இவரை பொது மக்கள் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் கையளித்து இருந்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்று வெளிநாட்டுக்கு தப்பி செல்ல கொழும்பில் தங்கி இருந்த வேளை கைது செய்யபப்ட்டார்.

யாழ்ப்பாண பொலிசாரிடம் கையளிக்கப்பட்டவர் எவ்வாறு கொழும்பு சென்றார் என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் தாயாரின் இறுதி கிரியையில் பங்கு பற்ற அவருக்கு அனுமதி வழங்கும் போது கடுமையான பாதுகாப்பின் மத்தியிலையே பங்கேற்ற அனுமதிக்க வேண்டும் என மாணவி சார்பில் முன்னிலையான சட்டத்தரணியான சுகாஸ் மன்றில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள இறுதி கிரியையில் , கலந்து கொள்வதற்கு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டு உள்ள மகாலிங்கம் சசிக்குமார் மற்றும் மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net