அரசியல் கைதிகள் வழக்குகள் அனைத்தையும் வடமாகாண எல்லைக்குள் மாற்றுமாறு கோாிக்கை

தமிழ் அரசியல் கைதிகள்
அனுராதபுரம் சிறைச்சாலை
அனுராதபுரம்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு
பிரதமர் ஊடாக

புனர்வாழ்வு பெற்றுக்கொள்ளுதல் அல்லது எமக்கு எதிரான அனுராதபுர விசேட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை வடக்குமாகாண நீதிமன்ற நியாயறிக்கை எல்லைக்குள் மாற்றிக்கொள்வதற்கான விண்ணப்பம்.

பயங்கரவாத தடைச்சட்த்தின் ஊடாக கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் தொடக்கம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் ஆகிய நாம் காலத்துக்கு காலம் எமது விடுதலையை வலுவேற்றி உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்த போதிலெல்லாம் பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி முடிவுக்கு கொண்டு வந்திருந்ததுடன் இன்று வரை எமக்கான நீதியும் கிடைக்கவில்லை.

மேலும் எமது வழக்கு விசாரணைகளை விசேட நீதிமன்றங்களின் ஊடாக விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்ட போதிலும் குறைந்தபட்ஷம் அவற்றின் ஊடக கூட எமக்கான நிவாரணங்கள் கிடைக்கவில்லை. அனுராதபுர விசேட நீதிமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் ஊடகங்களின் ஊடாக நீதி அமைச்சால் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான தகவல்களை மறுத்து அனுராதபுர விசேட நீதிமன்றத்தின் உண்மையான செயற்பாடுகள் தொடர்பாக 2015 செப்டெம்பரில் கெளரவ நீதிஅமைச்சர் அவர்களுக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வற்கான மக்கள் அமைப்பு தெளிவுபடுத்தியிருந்ததுடன் குறித்த கடிதமானது 2015.09.26 அன்று தினகரன் பத்திரிகையில் 2 ஆம் பக்கத்திலும் வெளிவந்திருந்தது.

மேலும் குறித்த கடிதத்தின் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு அனுராதபுர விசேட நீதிமன்ற கெளரவ நீதிபதி அவர்களை மேற்கோள் காட்டி நீதிமன்றப்பதிவாளர் மதிப்புக்குரிய ஈ.என்.எம்.தர்மகீர்த்தி அவர்களின் பதில் கடிதமானது 2015.09.28 அன்று மெளவிம பத்திரிகையின் 18 ஆம் பக்கத்திலும் வெளிவந்திருந்தது குறித்த கடிதத்தில் 2013.09.05 அன்று ஆரம்பிக்கப்பட்ட அனுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 482 வழக்குகளில் 346 வழக்கு விசாரணைகள் முடிவுற்றுள்ளதாகவும் இன்னும் 136 வழக்குகளே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்குறிப்பிட்ட 482 வழக்குகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் 15 வழக்குகள் மட்டுமே இருந்ததுடன் அவற்றில் 3 வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட 3 சந்தேக நபர்கள் தமது வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளக்கூடிய பொருளாதாரப்பின்னணி இல்லாத காரணத்தினால் தம்மீதான குற்றச்சாட்டுக்களை பொறுப்பேற்று தண்டனையும் பெற்றுக்கொண்டனர். பிறிதொரு குற்றம் தொடர்பாக வழக்கு சுமத்தப்பட்ட சந்தேக நபரொருவர் மீது யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மேல் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படிருந்ததனால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தனக்கான வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு குற்றமற்றவர் என விடுதலையாகிய காரணத்தினால் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அனுராதபுரம், வவுனியா, மன்னார் ஆகிய நீதிமன்றங்களின் ஊடாகவும் குறித்த சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

மேற்குறிப்பிடப்படுள்ள 4 வழக்குகள் தவிர்ந்த ஏனைய 11 வழக்குகளில் 6 வழக்குகளிற்கான விசாரணைகளை மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த விடயங்கள் 2015.09.26 அன்று தினகரன் பத்திரிகையில் வெளிவந்து ஓர் ஆண்டை கடக்கின்ற தற்போதைய சூழலிலும் அனுராதபுரம் விசேட நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் எவ்விதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி நிறைவு செய்வதற்கென 2013.09.05 அன்று ஆரம்பிக்கப்பட்ட அனுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் தற்போதும் மேற்குறிப்பிட்ட 6 வழக்குகள் மட்டுமே 3 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை என்கின்ற பெயரில் தொடர்ந்தும் காலம் கடத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான 375ற்கும் மேற்பட்ட வழக்குகள் குறித்த 3 ஆண்டு காலப்பகுதிக்குள் முடிவுக்கு க்கொண்டுவரப்படுள்ளன. உமரகுரம் மக்கள் படுகொலை தொடர்பான 8 ராணுவத்திற்கு எதிராக 150ற்கும் மேற்பட்ட சாட்ச்சியாளர்களுடன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கானது அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு 1 மாதத்திற்குள் அவர்களின் விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்படிருந்தது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2 தமிழர்களுக்கு எதிராக தொடரப்படிருந்த HCG18 oblic 10 என்னும் வழக்கானது 2016.05.26 உடன் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படாது தொடர்ந்தும் திகதியிடப்பட்டே வருகின்றது.

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களின் ஊடாக தமிழர்களாகிய எமக்கு எதிராக அனுராதபுர விசேட நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை நீதியான முறையில் மேற்கொள்ளாது தொடர்ந்தும் காலம் கடத்தப்படுவது தெளிவாவதுடன் விசாரணைகளின் போது மொழிரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்திப்பதுடன் எமக்கு நீதி கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்படுள்ள விடயங்களை கருத்தில் கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எம்மீது தொடரப்படிருக்கும் வழக்குகள் அனைத்தையும் யாழ்ப்பாணம் அல்லது வவுனியா மேல் நீதிமன்றங்களுக்கு மாற்றி எமது தாய்மொழியில் விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்தி தருமாறும் 1 மாதத்திற்கு முன்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாக நீதி அமைச்சின் கவனத்திற்கு நாம் கொண்டு வந்திருந்த போதிலும் இன்று வரை எமக்கான சாதகமான பதில்கள் எவையும் எமக்கு வழங்கப்படவில்லை.

எனவே கெளரவ ஜனாதிபதி அவர்களும் கெளரவ பிரதமர் அவர்களும் எமது பரிதாப நிலையையும் நியாயமான கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்து எமக்கான நீதியை பெற்றுத்தருமாறு வேண்டுகின்றோம்.

பிரதிகள் -எதிர்கட்சி தலைவர்
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்
அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net