ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை படுகொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

img_3229-1
யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்‌ஷன் (வயது 24) உயிரிழந்தமை பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திலையே என உடற்கூற்று பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து நேற்றைய தினம் இரவு வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான ஐந்து பொலிசார் அடங்கிய குழு கைது செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது ,
கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நேற்றைய தினம் இரவு நடைபெற்ற சம்பவத்தில் இரு பல்கலைகழக மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர்.

மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் தரப்பு ஆரம்பத்தில் தெரிவிக்கையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதுண்டதிலையே மாணவர்கள் மரணமடைந்துள்ளார்கள் என தெரிவித்தனர்.

வெடிசத்தம் கேட்டது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவிக்கையில் , நேற்று நள்ளிரவு துப்பாக்கி வேட்டு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது. நாம் உடனே வெளியே ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மதிலுடன் மோதுண்டு இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்கள். என தெரிவித்தார்.
விபத்து நடந்து சில நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசித்த இன்னுமொருவர் தெரிவிக்கையில் , நள்ளிரவு பெரிய சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்தேன். மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதுண்ட நிலையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
நான் அந்த இடத்திற்கு செல்ல பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்த பொலிசார் நடந்தே வந்து இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்தே இருவரையும், வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தேன்.

சம்பவ இடத்தில் அதிகாலை பொலிசார் குவிப்பு.
அதிகாலை வேளை அவ்விடத்தால் சென்றவர் தெரிவிக்கையில் , நான் அதிகாலை 4 மணியளவில் இந்த வீதியால் சென்ற போது வீதி முழுவதும் பெருமளவான பொலிசார் நின்று இருந்தார்கள்.
அதனை பார்த்த போது யுத்த காலத்தில் சுற்றி வளைப்புக்காக பொலிஸ் இராணுவம் அதிகாலையில் குவிக்கப்படுவது போன்று குவிக்கப்பட்டு இருந்தார்கள்.
நான் அந்த இடத்தில் நிற்கவில்லை. அதன் பின்னர் நான் திரும்பி வீட்ட போகும் போது தான் விபத்து நடந்தது தெரியும். என தெரிவித்தார்.
அதிகாலை வேளை குவிக்கப்பட்ட பொலிசார் தடயங்களை அழித்தார்களா ?
காலை வேளை கொக்குவில் சந்திக்கு வந்த ஒருவர் தெரிவிக்கையில் , நான் காலை 7 மணியளவில் சந்தைக்கு வந்த வேளை பெருமளவான பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் நடத்தியமையை நான் அவதானித்தேன். அவர்கள் எதனை தேடினார்கள் என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை.

CCTV கமராவில் பதிவான காட்சி.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
மதியம் 12 மணிக்கு பின்னரே மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.
சம்பவம் நேற்றிரவு நடைபெற்ற போதிலும் , இன்றைய தினம் மதியம் 12 மணி வரையில் சம்பவ இடத்தில் பொலிசார் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு பின்னரே பொலிசார் மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினார்கள்.
பிரேத பரிசோதனை அறிக்கை.

உயிரிழந்த மாணவர்களின் உடல் கூற்று பரிசோதனையின் போது சுலக்ஷன் எனும் மாணவனின் உடலில் துப்பாக்கி சூட்டு காயங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அதனை அடுத்து மேற்கொள்ளபப்ட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட பொலிஸ் குழு கைது செய்யபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net