தமிழீழப் பற்றாளர் திரு. பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

தமிழீழப் பற்றாளர் திரு. பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
தமிழீழ ஆதரவு செயற்பாட்டாளரான திரு. பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்கள் 3/9/2017 அன்று இந்தியா சென்னையில் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆறாத துயரும் அடைந்தோம்.


திரு. ப. கனகலிங்கம் அவர்கள் தனது இளமை காலம் முதலே பொதுநல நோக்குடன் புங்குடுதீவு பிரதேசத்தில் நற்பணிகளில் ஈடுபட்டார். உள்ளுர் தமிழ் தினசரிகளுடன் தமிழகத்திலிருந்து தமிழ் வார மாத இதழ்களையும் வாங்கி சனசமூக நிலையங்களுக்கு வழங்கி எமது மக்களிடையே வாசிப்பு பழக்கத்தையும் அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் ஆர்வமுடன் செயற்பட்டார். கல்விச் சமூகத்துடன் இணைந்து தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். கூட்டுறவு துறையில் இணைந்து செயல்பட்ட திரு ப. கனகலிங்கம் கூட்டுறவு சங்க மேலாளராக உயர்வு பெற்று சீரிய பணியாற்றினார்.

எமது தேசியத் தலைவர் மீதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்ட திரு. ப. கனகலிங்கம் அவர்கள் தமிழீழ ஆதரவு களச் செயற்பாட்டாளராக தீவிரமாக பணியாற்றினார். அரசியல் விழிப்புக் குழுவில் அங்கம் வகித்து மக்களிடையே ஆர்வமுடன் செயற்பட்டார். ஜெயபுரம் பிரதேச போர் எழுச்சிக் குழு தலைவராக பொறுப்பேற்று தமிழீழ விடுதலைக்கான மக்கள் திரளை ஒருங்கிணைப்பதில் வெற்றிகரமாக செயற்பட்டார். எமது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தீவிர ஆதரவாளராக விளங்கிய திரு. ப. கனகலிங்கம் அவர்கள் தனது கூட்டுறவு சங்க பணியாளர்களோடும் பொதுமக்களோடும் களமுனைக்கு வந்து போராளிகளைச் சந்தித்து உலர் உணவு பொருட்களை வழங்கி கலந்துரையாடி ஊக்கப்படுத்தினார். எமது மாவீரர்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடத்துவதிலும் தமிழீழ எழுச்சி நிகழ்வுகளை நடத்துவதிலும் பொதுமக்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பை மேற்கொண்டு செயற்பட்டார். எமது தமிழீழ தாயகத்தின் நீர்வளத்தை பெருக்கும் தொலைநோக்கில் “தீவக நன்னீர் திட்டம்” என்ற மழை நீர் சேகரிப்பு திட்டத்தை வரைந்து எமது தேசியத் தலைவரிடமும் கொடுத்நு அவருடைய பாராட்டைப் பெற்றார். இந்த திட்டம் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயற்படுத்த இருந்தது.

தமிழீழத்தில் 2009 ம் ஆண்டு நடந்த பேரழிவுக்குப் பி்ன்னர், இந்தியா சென்னையில் வசித்து வந்த திரு. ப. கனகலிங்ஙம் அவர்கள், தமிழீழ விடுதலை ஆதரவாளர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணி எமது தாயக விடுதலைக்கான அறப் போராட்டங்களில் தொடர்ந்து பங்காற்றினார். தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பும் மாந்தநேயமும் கொண்ட மக்கள் சேவகரான திரு. பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களின் நாட்டுபற்றும் நற்பணிகளும் தமிழீழ தாயக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net