வித்தியா – ” ட்ரயல்-அட்பார் ” முதல் தீர்ப்பு வரை ? தொகுப்பு 02 – மயூரப்பிரியன்

29.05.2017.
வடமாகணத்தில் முதலாவது ” ரயலட் பார் ” தீர்ப்பாய முறைமையிலான நீதிமன்ற அமர்வு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதன அறையில் கூடியது. அன்றைய தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி மாணவி கொலை வழக்கின் ஒன்பது எதிரிகளையும் யாழ்.மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு இட்டனர்.
12.06.2017.
மாணவி கொலை வழக்கின் ஒன்பது எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மன்றில் ஆரம்பமானது, அதன் போது குற்றப்பத்திரிக்கை தனித்தனியாக எதிரிகள் ஒன்பது பேருக்கும் கையளிக்கப்பட்டது. அதையடுத்து எதிரிகளுக்கு எதிராக கடத்தல் , பாலியல் வன்புணர்வு , கொலை , இக் குற்றங்களுக்கு திட்டம் தீட்டியமை , உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 41 குற்றங்கள் சுமத்தப்பட்டு எதிரிகளுக்கு திறந்த நீதிமன்றில் தமிழ் மொழியில் வாசித்து காண்பிக்கப்பட்டது. அதன் போது எதிரிகள் தம் மீதான 41 குற்றசாட்டையும் மறுத்து தாம் சுற்றவாளி என மன்றுரைத்தனர்.
கடத்தல் , பாலியல் வன்புணர்வு , கொலை உள்ளிட்ட குற்ற சாட்டுக்கள் 1ஆம் , 2ஆம் , 3ஆம் , 5ஆம் , மற்றும் 6ஆம் எதிரிகள் மீது சுமத்தப்பட்டன. ஏனைய 4ஆம் , 7ஆம் 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் மீது இக் குற்றத்திற்கு திட்டம் தீட்டியமை , குற்றத்திற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
28.06.2017.
யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் முதல் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
அதன் போது 1ம், 2ம், 3ம், 5ம் மற்றும் 6ம் எதிரிகளுக்கு எதிராக மாணவியை பலவந்தமாக கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஏனைய 4ம் , 7ம் , 8ம் மற்றும் 9ம் எதிரிகள் மீது குறித்த குற்ற சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியமை , அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 41 குற்ற சாட்டுக்கள் எதிரிகள் மீது முன் வைக்கப்பட்டன. 53 சாட்சியங்கள் அணைக்கப்பட்டன.
அத்தனை குற்ற சாட்டுக்களும் எதிரிகளுக்கு தனித்தனியே மன்றில் உரத்த குரலில் வாசித்துக்காட்டப்பட்டது. அத்தனை குற்ற சாட்டுக்களையும் எதிரிகள் தனித்தனியே மறுத்தனர்.
பதில் சட்டமா அதிபர் தொடக்கவுரை.
அன்றைய தினம் பதில் சட்டமா அதிபர் W.D. லிவேரா மன்றில் முன்னிலையாகி முன் உரை நிகழ்த்தினார். அதன் போது , இந்த வழக்கின் 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகளே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர். இவர்கள் நால்வரும் மாறி மாறி மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
கொடூர சம்பவமானது சாதாரண கடத்தல் , வன்புணர்வு , கொலை போன்றது அல்ல. இது முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட குற்றம். இதற்கு சர்வதேச ரீதியில் திட்டம் வகுக்கபப்ட்டு உள்ளது. அதனால் இது சர்வதேச குற்றம் என்று கூட சொல்லலாம். இதன் பின்னணியில் இந்த நாட்டின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும். என திட்டமிட்டு சர்வதேச ரீதியில் செயற்பட்டு உள்ளனர்.
இந்த குற்றசெயலின் பிரதான சூத்திர தாரி ஒன்பதாம் எதிரி ஆவார். குறித்த எதிரி கூட்டு பாலியல் வன்புணர்வினை நேரடியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முயன்று உள்ளார்.
ஒன்பதாம் எதிரி இலங்கையில் பிறந்திருந்தாலும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர். அவர் சுவிஸ் நாட்டில் இருந்து அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்பவர். அந்த நிலையில் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து 6 எதிரியுடன் தொடர்பு கொண்டு அது பற்றி பேசியுள்ளார்.
சர்வதேச சந்தையில் தெற்காசிய நாட்டை சேர்ந்த இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதனை நேரடி காட்சியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னுடன் சிறையில் இருந்த சக பாடிக்கு சொல்லி இருக்கின்றார்.
அதேவேளை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னை இந்த குற்ற செயலில் இருந்து தப்பிக்க உதவுமாறு கோரி போலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20மில்லியன் ரூபாய் பணம் கைமாற்றம் செய்யவும் முயன்று உள்ளார்.
ஏனைய 4ஆம் 7ஆம் மற்றும் 8ஆம் எதிரிகள் இந்த குற்ற செயலுக்கு உடந்தை அளித்தத்துடன் , திட்டம் தீட்டியுள்ளனர். இந்த ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக முன் வைக்கபப்ட்டு உள்ள 41 குற்ற சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படும். என தெரிவித்தார்.
மாணவியின் தாயின் சாட்சியம்.
அன்றயை தினம் தாய் சாட்சியம் அளிக்கையில் , எமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் தான் செல்வார். சம்பவ தினத்தன்று (13.05.2015) காலை 7.30 மணிக்கு வித்தியா பாடசாலை செல்ல புறப்பட்டாள் நானே வீடு கேற் வரையில் சென்று வழியனுப்பி வைத்தேன் அன்றைய தினம் வித்தியா கூட படிக்கும் மாணவியுடன் செல்வதாக கூறி சென்றால். ஆனால் அன்றைய தினம் அந்த மாணவி பாடசாலை செல்லாத காரணத்தால் வித்தியா தனியாகவே பாடசாலை நோக்கி சென்றாள்.
பாடசாலை சென்ற வித்தியா பாடசாலை நேரம் முடிவடைந்து வீட்டுக்கு வரும் நேரத்தை கடந்தும் வராததினால் வித்தியாவை பார்த்து வருமாறு எனது மகனை பாடசாலைக்கு அனுப்பினேன். அவன் அங்கு சென்று பார்த்து விட்டு பாடசாலை பூட்டி உள்ளதாக தொலை பேசியில் சொன்னான். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களிடம் விசாரித்த போது வித்தியா இன்றைய தினம் பாடசாலைக்கு வரவில்லை என கூறினார்கள்.
அதன் பின்னர் நானும் எனது மகனும் வித்தியாவை தேடி அலைந்தோம். அந்நேரம் ஊரவர்கள் இது தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்யுங்கள் என சொன்னார்கள். அதனால் மாலை 6.30 மணியளவில் குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்ய சென்றோம். அங்கு அவர்கள் இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. நீங்கள் ஊர்காவற்துறை போலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யுங்கள் என தெரிவித்தனர்.
பின்னர் இரவு 8 மணியளவில் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு சென்ற முறைப்பாடு கொடுக்க முற்பட்ட போது இந்த வயது பிள்ளைகளை எங்கேனும் போயிருக்குங்கள் திரும்பி வாருங்கள் என போலீசார் சொன்னார்கள். அதற்கு நாம் எங்கள் பிள்ளை அப்படி பட்டவள் இல்லை என கூறியதும் பின்னர் எமது முறைப்பாட்டை ஏற்றுகொண்டார்கள்.
அன்றைய தினம் இரவு மழை பெய்து கொண்டு இருந்ததால் , அன்றைய தினம் இரவு பிள்ளையை தேடவில்லை மீண்டும் மறுநாள் (14ஆம் திகதி) காலை 6.30 மணியளவில் நானும் மகனும் அயலவர்கள் இவர்களுடன் வித்தியவை தேடி சென்றோம்.
அதன் போது வீதியின் இரு மருங்கிலும் இருவர் வீதம் பிரிந்து தேடி சென்றோம். எம்முடன் வித்தியா வளர்த்த நாயும் வந்து இருந்தது. திடீரென எனது மகனும் அயலவரும் கத்தும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் கூட வந்தவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி சென்றோம்.
அப்போது என் மகன் ஓடிவந்து “அம்மா வித்தியா ” என கத்திக்கொண்டு மயக்கமுற்று வீழ்ந்தான். அதன் பின்னர் நானும் சுயநினைவின்றி போனேன். எம்முடன் வந்தவர்கள் தான் ஓடி சென்று வேறு ஆட்களை அழைத்து வந்தனர்.
நான் நினைவுக்கு வந்து வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு சுமார் 20அடி தூரத்தில் இருந்தே சடலத்தை பார்த்தேன். கிட்ட செல்ல வில்லை. மகன் மயக்கமுற்று வீழ்ந்தமையால் மகனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.
பின்னர் காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
29.06.2017.
ஐந்தாவது சாட்சியும், சட்டமா அதிபரினால் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்ட அரச தரப்பு (கண்கண்ட) சாட்சியுமான உதயசூரியன் சுரேஷ் கரன் சாட்சியம் அளிக்கும் போது ,
சுரேஷ்கரனின் சாட்சியம்.
கொலை செய்யப்பட்ட வித்தியாவை எனக்கு தெரியும். அவரது குடும்பத்தினரையும் எனக்கு நன்கு தெரியும். வித்தியா எவரையும் காதலித்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெரியம்பி என அழைக்கப்படும் துஷந்த் (6ஆவது எதிரியான சிவதேவன் துஷந்த்) என்பவர் வித்தியாவை காதலிப்பதாக கூறினார்.
அதனால் நானும் பெரியம்பியும் வித்தியா பாடசாலை செல்லும் நேரம் பாடசாலையால் வீடு திரும்பும் நேரங்களில் தினமும் வித்தியாவின் பின்னால் பெரியம்பியின் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோம். அவ்வேளைகளில் வித்தியாவுடன் பெரியம்பி கதைக்க முற்படுவர் ஆனால் வித்தியா கதைக்க மாட்டார். வித்தியா சில வேளைகளில் அவரின் அண்ணாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலை சென்று வருவார். அண்ணா இல்லை என்றால் சைக்கிளில் சென்று வருவார்.
பெரியம்பியும் நானும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வித்தியாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தோம். அவ்வேளைகளில் அவருடன் கதைக்க முற்பட்டால் அவர் கதைப்பதில்லை. ஒரு நாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எனவும் கூறி இருந்தார்.
கொலை செய்யப்படுவதற்கு ஒன்று ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒருநாள் வித்தியா பெரியம்பிக்கு செருப்பால் எறிந்து பேசி இருந்தார்.
நாங்கள் புங்குடுதீவில் மாப்பிள்ளை என்பவர் வீட்டில் கள்ளு குடிப்போம் , அங்கே ரவியிடம் வித்தியாவை தூக்கி தர சொல்லி பெரியம்பி கேட்டான். அப்போது அந்த இடத்தில் நானும், (5ஆம் எதிரி) பெரியம்பி, (2ஆம் எதிரி) ரவி, (6ஆம் எதிரி) சந்திரஹாசன் மற்றும் (3ஆம் எதிரி) தவக்குமார் ஆகியோர் இருந்தோம்.
வித்தியாவை தூக்கி தாறது என்றால் எனக்கு 20 – 23 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என ரவி பெரியம்பிக்கு கூறினான். அதற்கு பெரியம்பி தான் சம்பளம் எடுத்த உடனே பணத்தை தருகிறேன் என கூறினான். அதன் படி ரவிக்கு பெரியம்பி பணம் கொடுத்தான். என சுரேஷ்கரன் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து மேலும் சாட்சியம் அளிப்பதனால் தனது அல்லது தனது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் , அதனால் தான் ரகசியமான முறையில் சாட்சியம் அளிக்க போவதாகவும் மன்றில் கூறினார்.
அதனை அடுத்து மன்றில் இருந்த பொதுமக்கள் , ஊடகவியலாளர்கள் வெளியே செல்ல மன்று அறிவித்தது. அதனை அடுத்து அவர் தனது மேலதிக சாட்சியங்களை மன்றில் பதிவு செய்தார்.
மாப்பிள்ளையின் சாட்சியம்.
வழக்கின் மூன்றாவது சாட்சியமான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் அன்றைய தினம் (29ஆம் திகதி) மாலை 4 மணியளவில் தனது சாட்சியத்தை அளித்தார்.
அதில் ,
நான் சீவல் தொழில் செய்கிறவன். பெரியாம்பியும் சுரேஷ்கரன் ஆகிய இருவரும் வழமையாக என் வீட்டுக்கு வந்து கள்ளு வாங்கி குடிக்கிறவர்கள். ஒருநாள் தான் வித்தியாவை காதலிப்பதாகவும் , அவரையே திருமணம் செய்ய போவதாகவும் பெரியாம்பி என்னிடம் கூறினார்.
சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி என்னை வித்தியா பாடசாலை செல்லும் வழிக்கு பெரியாம்பியும், சந்திரஹாசனும் அழைத்து சென்றனர். அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் ஒன்றும் கதைக்கவில்லை.
மறுநாள் 13ஆம் திகதி (சம்பவ தினத்தன்று) மீண்டும் வித்தியா பாடசாலை செல்லும் வழியில் ஆலடி சந்திக்கு அருகில் வித்தியாவுக்காக காத்திருந்தோம். வித்தியா வரும் வேளை என்னையும் சுரேஷ்கரனையும் அருகில் இருந்த பற்றைக்குள் ஒளிந்து இருக்குமாறு பெரியாம்பியும் சந்திரஹாசனும் கூறினார்கள். நாமும் பற்றைக்குள் மறைந்து இருந்தோம்.
அவ்வேளை அந்த இடத்திற்கு ரவியும் , தவக்குமார் வந்திருந்தார்கள். அந்நேரம் வித்தியா பாடசாலை சீருடையுடன் காலில் சப்பாத்துடன் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவருடைய சைக்கிள் முன் கூடைக்குள் குடை ஒன்றும் இருந்தது.
சைக்கிளில் வந்த வித்தியா அவர்கள் அருகில் வந்ததும் சந்திரஹாசனும் , பெரியாம்பியும் மறித்தனர். பின்னர் சந்திரஹாசன் பெரியாம்பி ரவி , மற்றும் தவக்குமார் ஆகிய நால்வரும் வித்தியாவை பிடித்து இழுத்து சென்றனர். அப்போது வித்தியா கத்தினர். உடனே பெரியாம்பி வாயை பொத்தினார். வித்தியாவின் மூக்கு கண்ணாடியையும் பெரியாம்பியே கழட்டி எடுத்தான். பின்னர் நால்வருமாக வித்தியாவை பற்றைகள் ஊடாக பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்றனர்.
பின்னர் xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx அதனை பெரியாம்பியும் சந்திரஹாசனும் மாறி மாறி வீடியோ எடுத்தனர். அவர்கள் பெரிய டச் மொடல் போனில தான் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை சுவிஸ்குமாருக்கு கொடுக்க வேண்டும். அவர் இதனை வெளிநாட்டுக்கு கொண்டு போக போகிறார் என பேசிக்கொண்டார்கள்.
பின்னர் வித்தியா மயங்கிய நிலையில் அவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய (பாழடைந்த வீடு) இடத்தில் இருந்து கைத்தாங்கலாக நால்வரும் தூக்கி வந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள அலரி மரம் ஒன்றில் வித்தியாவை கட்டினார்கள். அவரின் ஆடைகளை அவரின் உடலின் மீது போட்டார்கள். பின்னர் பாடசாலை சீருடையின் இடுப்பு பட்டியினால் கைகள் இரண்டையும் ஒன்றாக கழுத்துக்கு பின்னால் வைத்து கட்டினார்கள். பாடசாலை பையின் நாடாவால் ஒரு காலை இழுத்து மரத்துடன் கட்டினார்கள். சப்பாத்து நூல்களினாலும் கட்டினார்கள்.
இவ்வளவு சம்பவமும் ஒன்று , ஒன்றேகால் மணித்தியாலங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் நான் 8.30 மணியளவில் சீவல் தொழிலுக்காக சென்று விட்டேன். என சாட்சியம் அளித்தார்.
முஹமட் இப்ரான் சாட்சியம்.
30.06.2017.
ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் சாட்சியம் அளிக்கையில் , வவுனியா சிறைச்சாலையில் சுவிஸ் குமார் என்னை சந்தித்து கேட்டார் தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா ? என நான் ஆம் என்றேன். அப்போது திரும்ப கேட்டார் மென்பொருளினை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தரவுகளையும் எடுக்க முடியுமா ? என அதற்கு நாம் ஆம் என்னால் முடியும் என்றேன்.
சாதரணமாக தொலைபேசி பாவிக்கின்றவர்கள். அதில் உள்ள தரவுகளை அழிப்பது என்றால் சாதரணமாக தான் அழிப்பார்கள். மென்பொருள் ஊடாக அழிப்பது என்றால் அதில் எதோ பிரச்சனை இருப்பதாக புரிந்து கொண்டேன்.
மறுநாள் சுவிஸ் குமாரை நான் தனியாக சந்தித்த போது , அவர் என்னிடம் கேட்டார் IP நிஷாந்த சில்வாவின் பலவீனம் என்ன என அதற்கு நான் அது தெரியாது உங்களுக்கு அவரிடம் என்ன வேண்டும் என கேட்டேன். வித்தியா வழக்கில் நாங்கள் மூன்று பேர் சகோதர்கள் நாம் அரச சாட்சியாக மாற வேண்டும் அதற்கு IP நிஷாந்த சில்வாவுடன் கதைத்து ஏற்பாடு செய்து தருமாறு சுவிஸ் குமார் கேட்டார்.
அவ்வாறு செய்தால் IP நிஷாந்த சில்வாவுக்கு என்ன கொடுப்பீர்கள் என கேட்டேன். 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடியும் என தெரிவித்தார்.
பின்னர் ஒரு நாள் நான் சுவிஸ் நாட்டில் இருந்தேன். அங்குள்ள மாபியா குழு ஒன்று தெற்காசிய நாட்டு இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்வதனை வீடியோ எடுத்து தருமாறு என்னுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து நான் இலங்கையில் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு அது பற்றி கூறினேன். 20 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளை ஒருவர் தேவை என சொன்னேன். அவர் ஒரு பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அந்த பெண் ஓகே என்றேன். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார் நான் யாருடன் இலங்கையில் உள்ள நபருடன் தொடர்பு கொண்டீர் என கேட்டதற்கு இங்கு எதிரி கூண்டில் ஆறாவது நபராக உள்ளவரை (சிவதேவன் துஷாந்தன் ) சுவிஸ் குமார் எனக்கு காட்டி இருந்தார்.
இதில் ஆறாவதாக உள்ள நபருடன் சேர்ந்து இலங்கையில் உள்ள ஏனையவர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்காக அந்த பெண்ணின் தாயாருடன் பெரிதொரு வழக்கில் தொடர்புடைய ஏனைய மூன்று பேரையும் தம்முடன் கூட்டு சேர்ந்தனர். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார்.
சுவிஸ் குமாருக்கு வித்தியாவை வன்புணர்வு செய்வதை எடுத்த வீடியோவை தொலை பேசி ஊடாக அனுப்பியுள்ளார்கள். அவர் அதனை கூகிள் டிரைவ் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார்.
அத்துடன் வித்தியாவை வன்புணர்வு செய்த நேரத்தில் நான் அங்கு இருந்து இருந்தால் நான் தான் முதலில் வன்புணர்ந்து இருப்பேன். அவரின் உடலை பார்க்கும் போது ஆசையாக இருக்கின்றது எனவும் என்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்து இருந்தார். என சாட்சியம் அளித்தார்.
தனுராம் சாட்சியம்.

03.07.2017.
09ஆவது சாட்சியமான , மணிவண்ணன் தனுராம் சாட்சியம் அளிக்கையில், புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கிறேன். நான் தினமும் வீட்டில் இருந்து சின்ன ஆலடி பகுதி (மாணவி படுகொலை செய்யபப்ட்ட இடத்திற்கு அருகில் உள்ள பகுதி ) ஊடாக தான் பாடசாலை செல்வேன்.
சம்பவ தினம் நானும் என்னுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனான தனுஜனும் துவிச்சக்கர வண்டியில் சென்றோம். அது தனுஜனின் சைக்கிள். அவன் தான் ஓடினான். நான் பின்னால் இருந்து சென்றேன்.
செல்லும் போது சின்ன ஆலடிக்கு அருகில் தனுஜனின் செருப்பு கழன்று வீதியில் வீழ்ந்து விட்டது. அவன் சிறிது தூரம் சென்று சைக்கிளை நிறுத்தினான். நான் பின்னால் இருந்து இறங்கி சென்று செருப்பை எடுத்து வர சென்றேன்.
அந்த நேரம் வீதி ஓரமாக அலரி மரங்கள் உள்ள பகுதியில் ரவிமாமா (இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்) மஞ்சள் கலர் ரீ.சேர்ட்டுடன் நின்றார். அப்போது “ம் .. ம் .. ” என சத்தம் கேட்டது நான் முதலில் பேய் என்று பயந்தேன். ஏனெனில் அந்த வீதியில் சனநடமாட்டம் இருப்பதில்லை. வழமையாக பாடசாலை செல்லும் போது , சின்ன ஆலடி பகுதிக்கு கிட்ட வந்ததும் வேகமாகவே செல்வோம்.
அன்றும் அந்த சத்தத்தை பேய் என்று பயந்தாலும் , அது மாடு கத்தும் சத்தம் போன்று இருந்தது. மன பயம் இருந்ததினால் செருப்பை எடுத்து தனுஜனிடம் கொடுத்ததும் அவன் போட்டுக்கொண்டு நாங்கள் இருவரும் அந்த இடத்தில் இருந்து பாடசாலைக்கு சென்று விட்டோம்.என சாட்சியம் அளித்தான்.
தனுஜன் சாட்சியம்.
அதனை தொடர்ந்து பத்தாவது சாட்சியான இலங்கேஸ்வரன் தனுஜன் சாட்சியம் அளிக்கையில் ,
நானும் தனுராமும் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தோம். எனது சைக்கிளில் நான் தான் அவனை பின்னுக்கு ஏற்றிக்கொண்டு சென்றேன்.
சின்ன ஆலடி எனும் பகுதியில் , சைக்கிள் பெடல் கட்டை இல்லாததால் அது சறுக்கி எனது செருப்பு கழன்று விழுந்து விட்டது. நான் சைக்கிளை நிறுத்தி , சைக்கிளை பிடித்துக்கொண்டு இருந்த போது , தனுராம் தான் சென்று செருப்பை எடுத்து வந்தான். பின்னர் நாங்கள் செருப்பை போட்டுக்கொண்டு பாடசாலைக்கு சென்று விட்டோம். என சாட்சியம் அளித்தான்
பாலசந்திரன் சாட்சியம்.
அதனை தொடர்ந்து 04 ஆவது சாட்சியான , பாலசிங்கம் பாலசந்திரன் சாட்சியம் அளிக்கையில் ,
நான் 13ஆம் திகதி காலை 8.47 மணியளவில் கடைக்கு சென்ற போது வித்தியா கொலை நடந்த இடத்திற்கு அருகில் , பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய இருவரும் நின்று கொண்டு இருந்தனர்.
அதில் ரவி என்று அழைக்கபப்டும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் எனது தங்கையின் கணவன். மற்றையவரான பூபாலசிங்கம் தவக்குமார் , ஜெயக்குமாரின் சகோதரன்.
மறுநாள் 14 ஆம் திகதி தான் வித்தியா இறந்த செய்தி தெரியும். வித்தியா எனக்கு கிட்டத்து சொந்தமும் கூட , வித்தியாவின் உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு சுமார் 15 அடி தூரத்தில் தான் முதல் நாள் ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோரை கண்டேன். என சாட்சியம் அளித்தார்.
இலங்கேஸ்வரன் சாட்சியம்.
அதனை தொடர்ந்து வழக்கின் 07ஆவது சாட்சியமான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளிக்கையில் ,
நான் வித்தியா வீட்டுக்கு அருகில் தான் வசிக்கிறேன். 14ஆம் திகதி காலை வித்தியாவின் அம்மாவும் சகோதரனும் , வித்தியாவை நேற்றில் இருந்து காணவில்லை. என தெரிவித்து தேடி பார்க்க சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.
வித்தியா பாடசாலை செல்லும் வழியில் உள்ள கிணறுகள் , கேணிகளில் தாய் தேடிக்கொண்டு வந்தார். நான் வீதியோரமாக பற்றைகளுக்குள் தேடி சென்றேன். வித்தியாவின் அண்ணா ஆட்கள் அற்ற வீட்டு பகுதிகளை தேடி சென்றோம். அப்போது திடீரென்று வித்தியாவின் அண்ணா ஐயோ வித்தியா வித்தியா என கத்தினான்.
அந்த இடத்திற்கு நான் சென்றேன். அப்போது வித்தியாவின் அம்மாவும் அங்கு வந்து விட்டார். அவர் உடனே என்னிடம் , வித்தியாவின் சடலம் கிடக்கிறது தொடர்பில் ஊருக்குள் சென்று செல்லுமாறு கூறினார். நான் சென்று ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்தேன்.
வித்தியாவை சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி (மாணவி கொலை செய்யபப்ட்டது 13ஆம் திகதி சடலம் மீட்கப்பட்டது 14 ஆம் திகதி) ஆலடி சந்தியில் கண்டேன்.
அன்றைய தினம் வீட்டு தேவைக்கு பொருட்கள் வாங்க என ஆலடி சந்தியில் உள்ள கடைக்கு சென்று இருந்தேன். அப்போது வித்தியா பஞ்சாபியுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி வந்து கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றார்.
அந்த நேரம் கடைக்கு எதிரே வீதியின் மறுபுறத்தில் , டொல்பீன் ரக வாகனத்தில் , முன் ஆசனத்தில் (சாரதி ஆசனத்திற்கு அருகில்) 09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் கறுத்த கண்ணாடி அணிந்தவாறு இருந்தார். மற்றைய ஆசனங்களில் 04ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , 05ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் மற்றும் 08ஆம் எதிரியான கண்ணன் என அழைக்கபப்டும் ஜெயதரன் கோகுலன் ஆகியோருடன் மேலும் இருவரும் இருந்தனர். அவர்களை யார் என்று தெரியாது. மொத்தமாக வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் பஸ்சினால் வந்து இறங்கி சைக்கிள் எடுத்துகொண்டு சென்று வித்தியாவையே பார்த்துக்கொண்டு இருந்தனர். என சாட்சியம் அளித்தார்.
சதானந்தரூபிணி சாட்சியம்.
15 ஆவது சாட்சியான செல்வராசா சதானந்தரூபிணி சாட்சியம் அளிக்கையில் ,
நான் சம்பவ தினமான 13ஆம் திகதி காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது சைக்கிளில் வேலணை பிரதேச செயலகத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது நான் சென்று கொண்டிருந்த வீதியில் ஒரு இடத்தில் உள்ள ஒற்றையடி பாதை ஊடக , சந்திரஹாசன் சரம் ஒன்றினை மடித்துக்கட்டியவாறு வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் போய் கொண்டிருந்த தூரம் எனக்கும் அவருக்கும் இடையில் ” தம்பி ” என கூப்பிட்டால் கேட்கும் தூரம் தான் அப்போது இருந்தது.
அவர் சென்ற ஒற்றையடி பாதை ஊடாக சுமார் 200 மீற்றர் தூரம் சென்றால் , வித்தியாவின் சடலம் கிடந்த இடத்திற்கு செல்ல முடியும். அதற்காக அவர் அங்கு தான் சென்றார் என நான் உறுதியாக சொல்ல மாட்டேன்.
பின்னர் மறுநாள் வித்தியாவின் சடலம் கிடக்கின்றது என்ற செய்தி அறிந்து நானும் அயலவர்கள் சுமார் 10 பேரும் சடலம் கிடந்த இடத்திற்கு சென்றோம்.
அப்போது அந்த இடத்திற்கு சந்திரஹாசனும் வந்திருந்தார். அவர் அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று விட்டு சென்று விட்டார் என சாட்சியம் அளித்தார்.
குயிண்டஸ் குணால் பெரேரா சாட்சியம்.
04.07.2017.
வழக்கின் 19 ஆவது சாட்சியமாக சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் ஊர்காவற்துறை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த குயிண்டஸ் குணால் பெரேரா சாட்சியம் அளிக்கையில் ,
மாணவியின் தாயின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் 14 ஆம் திகதி மாலை புங்குடுதீவை சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தேன்.
தான் போது அவர்களது வீட்டில் மேற்கொண்ட தேடுதல்களின் போது ஜெயக்குமார் என்பவரின் வீட்டில் இருந்து மஞ்சள் கறுப்பு நிற ரீ. சேர்ட் ஒன்றினை கண்டெடுத்தோம். அதில் தோள் பட்டை பகுதியில் இரத்த கறையை ஒத்த கறையும் , சேறும் காணப்பட்டது. அதனால் அதனை சந்தேகத்தில் சான்று பொருளாக மீட்டோம்.
அதேபோன்று தவக்குமார் என்பவரை கைது செய்யும் போது அவரது வீட்டில் இருந்து சேர்ட் ஒன்றினையும் மீட்டோம் அதிலும் கறைகள் காணப்பட்டன. கைது செய்யபப்ட்ட மூன்று சந்தேக நபர்களையும் மறுநாள் 15 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினோம்.
இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் ஐந்து சந்தேக நபர்கள் உள்ளனர் எனும் தகவல் எனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் 17ஆம் திகதி மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரையும் கைது செய்தேன்.
கைது செய்யப்பட்டவர்களை குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் வைத்து அவர்களின் வாக்கு மூலங்கங்களை பதிவு செய்து கொண்டிருந்த வேளை ஊரவர்கள் ஒன்று கூடி தடிகள் பொல்லுகளுடன் காவலரணை சுற்றி வளைத்து சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்களை தாங்கள் கொல்ல வேண்டும் எனவும் கோரினார்கள். அதனால் நாம் காரைநகர் கடற்படை கட்டளையிடும் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அதிவிரைவு படகு (வேட்டர் ஜெட் ) ஒன்றில் சந்தேக நபர்களை ஏற்றி கொண்டு ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்ற வேளை எனக்கு தகவல் கிடைத்தது, ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்தை முற்றுகையிட மக்கள் சென்று கொண்டிருப்பதாக அதனால் நாம் உடனடியாக சந்தேக நபர்களை காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று , அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிசாரின் உதவியுடன் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து சந்தேக நபர்களின் வாக்கு மூலத்தை பதிவு செய்தேன். என சாட்சியம் அளித்தார்.
V.T. தமிழ்மாறன் சாட்சியம்.
25ஆவது சாட்சியமான சட்டத்தரணியும் , சிரேஸ்ட சட்டவிரிவுரையாளருமான V.T. தமிழ்மாறன் சாட்சியம் அளிக்கையில் ,
17ஆம் திகதி இரவு நான் யாழ்ப்பாணம் வந்து இருந்தேன். 18ஆம் திகதி நான் அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து , புங்குடுதீவில் அப்போது நிலவிய நிலைமைகள் தொடர்பிலும் , புங்குடுதீவில் இனிவரும் காலத்தில் இவ்வாறான குற்ற செயல்களை தடுக்க அப்பகுதியில் பொலிஸ் காவலரண் அல்லது உப பொலிஸ் நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்க்க வேண்டும் எனவும் கூறினேன்.

அத்துடன் , இந்த வழக்கு தொடர்பில் ஒரு நபர் இருப்பதாகவும் , அவரே இந்த குற்ற செயலுக்கு பிரதான சூத்திர தாரி என சிலர் எனக்கு தெரிவித்ததாக கூறி அவரை ஏன் கைது செய்யவில்லை என வினாவினேன். அதற்கு அவர் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் விபரங்களை எனக்கு கூறினார். அதில் எனக்கு வழங்கப்பட்ட தகவலில் பிரதான சூத்திர தாரி என குறிப்பிடப்பட்ட நபரின் பெயர் இல்லை. அதனை அவரிடம் கூறினேன்.

பின்னர் புங்குடுதீவில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றினை நடாத்துவது தொடர்பில் புங்குடுதீவு மக்களுடன் பேசுவதற்காக புங்குடுதீவு சென்றேன். அப்போது என் கூட யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் என்பவரையும் இன்னுமொரு பொலிஸ் உத்தியோகச்தரையும் சிவில் உடையில் அழைத்து செல்லுமாறு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் கூறியதை அடுத்து அவர்களையும் என்னுடன் அழைத்து சென்றேன்.

என்னுடன் வந்த ஸ்ரீகஜன் என்பவர் வெளியில் நின்று யாருடனோ தொலை பேசியில் கதைத்துக்கொண்டு இருந்தார்.

நான் அருகில் சென்றதும் இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி சரணடைய தயாராக இருக்கின்றார். அவரின் மனைவி , கைக்குழந்தை , மற்றும் அவரின் தயார் ஆகியோருக்கு பாதுக்காப்பு வழங்கினால் அவர்கள் சரணடைய தயாராக இருக்கின்றார். என என்னிடம் கூறினார்.

நான் உடனே பொலிஸ் வாகனத்தை அழைத்து போலீசாரிடம் ஒப்படைப்போம். என கூறினேன். அதற்கு அவர் பொலிஸ் வரும் வரையில் அவர்களை நாங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது புத்திசாலித்தனம் இல்லை. அதனால் அவர்களை எமது வாகனத்தில் ஏற்றி செல்வோம் என கூறினார்.

நானும் அதற்கு சம்மதித்து பொலீசாருக்கு உதவும் நோக்குடன் சரணடைந்தவர்களை எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் ஏற்றி சென்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இறக்கி விட்டேன்.

எனது வாகனத்தால் இறங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் சரணடைந்த சந்தேக நபரையும் அவரின் மனைவி , குழந்தை மற்றும் அவரின் தாயாரையும் பொலிஸ் நிலையம் உள்ளே அழைத்து சென்று உள்ளே இருந்த வாங்கு ஒன்றில் அமர வைத்தனர். அது வரையில் நான் அந்த இடத்திலே நின்றேன். பின்னர் நான் சென்று விட்டேன்.

மறுநாள் 19ஆம் திகதி காலை புங்குடுதீவில் மக்களுக்கும் பொலீசாருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. மதியம் 12 மணி வரையில் சுமூகமான முறையில் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

அந்த நேரம் அங்கு வந்த சிலர் , பொலீசாரிடம் சரணடைந்த சுவிஸ் குமார் என்பவர் பொலீசில் இருந்து தப்பி சென்று , கொழும்பில் தங்கி உள்ளதகாவும் , கூறினார்கள் அதனை அடுத்து அங்குள்ள மக்களை சிலர் எனக்கு எதிராக தூண்டி விட்டார்கள்.

அந்த மக்கள் சொல்லும் வரையில் எனக்கு சுவிஸ் குமார் கொழும்பு போன விடயம் தெரியாது. அதேவேளை சுவிஸ் குமார் என்பவர் சரணடையும் வரையில் எனக்கு சுவிஸ் குமார் என்பவர் யார் என்றே தெரியாது. அன்றைய தினமே நான் அவரை கண்டேன்.

எனக்கு எதிராக மக்களை தூண்டி விட்டதனால் எம்மை மக்களை சுற்றி வளைத்து சுவிஸ் குமாரை கைது செய்தால் தான் விடுவோம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனால் பொலிசார் கடற்படையின் உதவியை நாடி எம்மை கடற்படையினர் பொது மக்கள் மத்தியில் இருந்து மீட்டு கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று எம்மை பின்னர் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தனர். என சாட்சியம் அளித்தார்.
தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் சாட்சியம்.

05.07.2017.
22 ஆவது சாட்சியமான யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ரொஷான் சந்தனகுமார சாட்சியம் அளிக்கையில் ,
கடந்த 2015. 05.14 ஆம் திகதி ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கிடப்பதாகவும் , அது தொடர்பில் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள வருமாறு எமது பிரிவுக்கு அந்த தொலைபேசி அழைப்பின் மூலம் தெரியப்படுத்தப்பட்டு நாம் அந்த இடத்திற்கு சென்று இருந்தோம்.
சடலம் இருந்த பகுதியானது சன நடமாட்டம் இல்லாத பகுதியாகும். ஒரு பாழடைந்த வீட்டின் பின் பகுதியில் தான் சடலம் கிடந்தது. சடலம் கிடந்த இடத்திற்கு நாம் நிமிர்ந்த நிலையில் செல்ல முடியாத அளவுக்கு அலரி மரங்களும் பூவரசு மரங்களும் காணப்பட்டன.
என்னுடன் வந்த எனது சக உத்தியோகஸ்தர்களுடன் சூழலை அவதானித்தேன். என்னுடன் வந்த சக உத்தியோகஸ்தர் புகைப்படங்களை எடுத்தார்.
பின்னர் சட்ட வைத்திய அதிகாரி அந்த இடத்திற்கு வந்த பின்னர் சடலத்தை பார்வையிட்டோம். சடலத்தின் மூக்கினால் இரத்த வடிந்து உறைந்து காணப்பட்டது. இடது பக்க காது பக்கமாகவும் இரத்தம் வடிந்து உறைந்து காணப்பட்டது.இடது பக்க கண் பகுதியிலும் ஏதோ ஒரு திரவம் காணப்பட்டது.
சடலத்தில் , கண் , மூக்கு வாய் , காது, போன்ற இடங்களில் எறும்புகள் மொய்த்து கொண்டு இருந்தன. அருகில் பாடசாலை சீருடை கிழிந்த நிலையில் காணப்பட்டது.
அதன் பின்னர் சடலம் கிடந்த இடத்தில் நிலத்தினை அவதானித்து அந்த இடத்தை பரிசோதித்தோம். சந்தேகத்திற்கு இடமான எந்த தடய பொருட்களையும் மீட்கவில்லை.
பின்னர் சட்ட வைத்திய அதிகாரி கொண்டு வந்த வெள்ளை நிற பையில் சடலத்தை பொதி செய்து பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தோம். என சாட்சியம் அளித்தார்.
அன்றைய தினம் (05.07) ஜின்டேக் நிறுவனத்தால் மன்றுக்கு பாரப்படுத்தப்பட்ட மரபணு பரிசோதனை அறிக்கை உட்பட்ட அறிக்கைகள் உள்ளடங்கிய பொதியினை திறந்த மன்றில் திறக்கப்பட்டது.
சட்டவைத்திய அதிகாரி உருத்திர பசுபதி மயூரதன் சாட்சியம்.
வழக்கின் 23 ஆவது சாட்சியமான சட்டவைத்திய அதிகாரி உருத்திர பசுபதி மயூரதன் சாட்சியமளிக்கையில் ,
சடலத்தை அவதானித்த போது , இரண்டு கைகளின் பெருவிரல்களும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டு தலையில் பின் பகுதியில் கட்டப்பட்டு இருந்தது. கால்கள் இரண்டும் 180 பாகைக்கும் அதிகமாக விரித்து கட்டப்பட்டு இருந்தது. கண்கள் வீங்கி இருந்தன. காதின் ஒரு பகுதி மூக்கு போன்ற இடத்தில் இருந்து இரத்த கசிவுகள் காணப்பட்டன. xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
உடலில் இரண்டு முடிகள் காணப்பட்டன அவற்றை தடயவியல் பிரிவினர் சேகரித்துக்கொண்டார்கள். பெண் உறுப்பில் இருந்து வடிந்த ஓட்டும் தன்மை உள்ள திரவத்தை சேகரித்து கொண்டேன்.
பின்னர் சடலத்தின் கட்டுக்களை தடயவியல் பிரிவினரின் உதவியுடன் அவிழ்த்தேன் அப்போது சடலத்தின் கழுத்து பகுதியில் பாடசாலை கழுத்துப்பட்டியால் கழுத்து இறுக்கி கட்டபட்டு நிலத்தில் இருந்து சுமார் இரண்டு அடி உயரத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்டு இருந்தது. அக்கட்டுகளை அவிழ்த்து சடலத்தை திருப்பி பார்த்த போது பிட்ட பகுதியில் காயங்கள் இருந்ததை அவதானித்தேன்.
அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலை க்கு சடலத்தை எடுத்து வந்தோம். அன்றைய தினம் (14 ஆம் திகதி ) மாலை 5 மணியளவில் பிரேத பரிசோதனையை மேற்கொண்டேன்.
சடலத்தில் 8 காயங்களை அவதானித்தேன். தலையின் வலது பகுதியில் தோள் பக்கத்திற்கு மேல் பகுதியில் 16 தர 8 CM அளவில் உள் காயம் காணப்பட்டது. மண்டையோட்டில் உள்ள எழும்புகள் முறியவில்லை. இரத்த கசிவுகள் ஏற்பட்டு இருந்தது. அந்த காயம் மொட்டையான விசை பாவிக்க்கப்படும் போதே தட்டையான கடினமான இடத்தில் தலை தாக்க படும் போதோ அவ்வாறன காயம் ஏற்படலாம். இது விழுந்த காயமாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவு. விழுந்து இருந்தால் மண்டையோடு உடைந்து இருக்கும். இது தாக்கப்பட்ட காயமாகவே இருக்கும். என தெரிவித்தார். அதன் போது , தட்டையான கடினமான இடம் என சொன்ன இடத்திற்கு உதாரணம் சொல்ல முடியுமா என மன்று வினாவியது, அதற்கு ஆம். தார் வீதிகள் சீமெந்து பூசபப்ட்ட சமாந்தரமான நிலம் ஆகிய இடங்கள் என பதிலளித்தார்.
இரண்டாவது காயம் தலையின் உச்சி பகுதியில் 12 தர 10 CM அளவில் 7 இடங்களில் இந்த காயங்கள் காணப்பட்டன. இவை பெரும்பாலும் தலைமுடியினை அதிக விசையினை கொண்டு இழுக்கும் போது ஏற்பட்டு இருக்க கூடிய காயங்களாகும்.
மூனறாவது காயம் வலது பக்க கன்னத்தில் ஏற்பட்ட கண்டல் காயம். இது தக்கப்பட்டதாலோ அல்லது அதிக விசை கொண்டு அழுத்தியதாலோ ஏற்பட்டு இருக்கலாம்.
நான்காவது மேல் உதட்டின் உட்புறம் ஏற்பட்ட கண்டல் காயம். இது தாக்கப்பட்டதாலோ அதிக அழுத்தம் கொடுத்தமையாலோ ஏற்பட்ட காயமாக இருக்கலாம்.
ஐந்தாவது காயம் கழுத்து பட்டியினால் கழுத்தினை இறுக்கியமையால் கழுத்து பகுதியில் 35 தர 1 CM அளவுக்கு கழுத்தை சுற்றி கண்டல் காயம் ஏற்பட்டு உள்ளது.
ஆறாவது காயம் கண்டல் காயம். இது இடுப்பு பகுதியின் பின்புறமாக வலது பக்க இடுப்பு பகுதியில் 18 தர 2 அளவில் காணப்படுகின்றது. இது மென்மையாக தாக்கும் போது ஏற்படும் காயமாகும்.
ஏழாவது உராய்வு காயம் இது வலது பிட்டத்தில் 17 தர 7 , இடது பிட்டத்தில் 7 தர 5 எனும் அளவில் காணப்பட்டது.
எட்டாவது காயம் வலது காலில் கணுக்காலுக்கு சற்று மேல் முள் குத்திய காயம். அந்த காயத்தினுள் முள் ஒன்று முறிந்த நிலையில் கிடந்தது.
கண் மூடி இருந்தது. மூடிய கண்ணை திறந்து பார்த்த வேளை கண்ணினுள் இரத்த கசிவு காணப்பட்டது. அவை பெரும்பாலும் மூச்சு திணறலால் ஏற்பட்ட மரணத்தின் போது அவ்வாறு கண்ணில் இரத்த கசிவு ஏற்பட சந்தர்ப்பம் உண்டு.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இரைப்பையில் மஞ்சள் நிற திரவம் இருந்தது. அது 100மில்லி லீட்டர் அளவில் காணப்பட்டது. அதை வைத்து பார்க்கும் போது மரணமானது தேநீர் குடித்து 2 மணி நேரத்திற்குள் சம்பவித்துள்ளது எனும் முடிவுக்கு வரலாம்.
சடலம் கிடந்த இடத்தில் பாலியல் வன்புணர்வு ஏற்பட்டவில்லை என அனுமானிக்க முடியும். ஏனெனில் நான் சடலத்தினை பார்வையிட்ட வேளை xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx அதன் போது நிலத்தில் இருந்த சறுகுகள் ,அந்த இடம் என்பன சாதரணமாகவே இருந்தது. xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx , அந்த பகுதி சாதாரணமாக இருக்காது. அதனால் சடலம் கிடந்த இடத்தில் வன்புணர்வு நடைபெற்று இருக்க சாத்தியம் குறைவு. அதேபோன்று சடலம் கிடந்த இடத்திலும் மரணம் ஏற்படுத்த பட்டு இருக்கவில்லை என சாட்சியம் அளித்தார்.

நன்றி..வாகீசம் இணையம்

Copyright © 2390 Mukadu · All rights reserved · designed by Speed IT net