“நரக நூற்றாண்டு” அகரமுதல்வன்

கடந்த ஒருகிழமையாக சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளை மீண்டும் உலகம் வேடிக்கையாக பார்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. “கிழக்கு கூட்டா”வில் உள்ள குழந்தைகளின் மாமிசங்கள் குண்டுகளின் புகைக்குள் சாம்பல் நிறத்தோடு துடித்துக்கொண்டிருக்கிறது.குண்டுகள் ஏற்படுத்தும் தழும்புகளும் காயங்களும் குழந்தைகளின் முகத்தில் பயங்கரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ரஷ்யாவின் போர்விமானங்கள் சிரியக்குழந்தைகளைக் குண்டுகளில் சிதறடித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த யுத்தம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரானது என கூறிவரும் சிரிய அரசு அப்பாவி மக்களை இலக்கு வைத்துக்கொல்கிறது.இதுவே இனப்படுகொலையாளிகளின் திட்டம். இதுவே ஈழ இனப்படுகொலையை நிகழ்த்திய அரசும் சொன்னது. சிரிய அரசுக்கு ஆதரவு வழங்கும் ரஷ்யாவின் போர்விமானங்கள் அப்பாவி பொதுமக்களின் வீடுகளை இலக்கு வைக்கின்றன. கிழக்கு கூட்டா என்கிற பகுதி முழுக்க மக்களின் அழுகுரல்கள் பூமியின் சகல சனங்களுக்கும் கேட்கும்படியாய் எழுகிறது.உலகமோ பூனையின் அசையும் வாலை வேடிக்கை பார்ப்பது மாதிரி கொலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டு நரமாமிசங்களால் கட்டி எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

தமிழீழம்,பாலஸ்தீனம்,மியன்மார், சிரியா என நூற்றாண்டு பிணங்களால் பெருத்துப்போகிறது.குழந்தைகளைக் கொன்ற பிறகு பூமியில் வெளிச்சமில்லை.ஐ.நா முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்ததது போன்று சிரியாவையும் பார்க்கத்தொடங்கிற்று. யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபடியே கொலைகளைச செய் என்று சொல்லுவதற்கு உலகில் இருக்கும் ஒரே அமைப்பு அதுவாகத்தானிருக்கும்.

இத்தனை நூறு குழந்தைகளும் பெண்களும் இரத்தத்தில் தோய்ந்தபடிக்கு அழுதுகொண்டிருப்பது ஐ.நாவை உலுக்குமென்று என்னால் நம்பமுடியாது. லட்சோப லட்ச தமிழீழர்கள் தமது குருதிகளால் அழுகையில் பேச மறுத்த ஐ.நா இங்கு என்ன செய்துவிடும். அமெரிக்கா இந்த விடயத்தில் ரஷ்யாவை குற்றம் சுமத்துகிறது ஆனால் ரஷ்யாவோ குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்கிறது. இங்கு கொல்பவர்கள் யாரென்று உலகின் வல்லரசுகள் மோதிக்கொள்கின்றனவே தவிர கொல்லப்படும் உயிர்களைக் காப்பாற்ற எவர் தான்முயல்கிறார்.

இந்த நூற்றாண்டைப் போல மிகவும் குரூரமான புதிய நூற்றாண்டு இனி பூமியில் பிறக்காதென்று நம்புகிறேன். பாலச்சந்திரனை பிஸ்கட் கொடுத்து நெஞ்சி சுட்டுக்கொன்றார்கள்.அயலான் குர்தியை கடலில் மிதக்கும் பிணமாய் ஆக்கினார்கள். இப்போது அகமது என்கிற குழந்தை. இவர்கள் எல்லோரும் ஒவ்வொரு கொடூரங்களும் காவு வாங்கிய நூற்றுக்கணக்கான உயிர்களின் ஒற்றை அடையாளமே. நாம் இந்தப்பூமியில் படர்ந்திருக்கும் இரத்தத்தைக் கழுவுவதற்கு பூமியிலேயே நீர் போதாமை இருக்கும். குழந்தைகளைக் கொல்லும் பூமியில் வெளிச்சம் இல்லாமல் போய்விடும்.

அகரமுதல்வன்
02.25.2018

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net