குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகம்

போரையும் போர் தின்றவாழ்வையும் பேசிய குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகம்

ஈழத்தமிழ் எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களது ‘கர்ப்பநிலம்’ நாவலின் அறிமுக நிகழ்வு தலைநகர் பரிசில் (04.03.2018) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.


பரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடத்திய இந்நிகழ்வுக்கு படைப்பாளியும், ஊடகவியலாளருமாகிய சுதன்ராஜ் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.

நெதர்லாந்தில் வாழும், கர்ப்பநிலம் நாவலின் ஆசிரியர் குணா.கவியழகன் இந்நிகழ்வுக்கு தன் குடும்ப சகிதம் நேரடியாக வந்திருந்தார். இது அவரின் நான்காவது நாவலாகும். முன்னதாக அவர் வெளியிட்டிருந்த விடமேறிய கனவு, நஞ்சுண்ட காடு, அப்பால் நிலம் ஆகிய நாவல்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்நாவல் 1995ம் ஆண்டு யாழ்பாண இடப்பெயர்வை கதைக்களமாக கொண்டு படைக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் வாசுதேவன் அவர்கள் அறிமுக உரையினை நிகழ்த்த, இலக்கிய ஆளுமைகளான மோகனதாசன், பாலகணேசன், லட்சுமி ஆகியோர் விமர்சன உரைகளை முன்வைத்தனர்.

முன்னதாக தொடக்கநிகழ்வினை கொலின்ஸ் அவர்கள் தொகுத்து வழங்க, முகடு கலை இலக்கிய சஞ்சிகை சார்பாக கார்வண்ணன், ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் தலைவர் விஜிதன் சொக்கா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விஜிதன் தனது உரையில் ‘உலக சினிமாக்கள் பல நல்ல நாவல்களை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்படுகின்றன. அதே போல ஈழசினிமாவும் நல்ல நாவல்களை திரைப்படமாக்க முன்வர வேண்டும். அதற்கு கர்ப்பநிலம் சிறந்த தேர்வாகும்’ என்று குறிப்பிட்டார்.

போரையும், போர் தின்ற வாழ்வையும் பேசும் பொருளாக கொண்ட இவரது எழுத்துக்கள், அதன் அகத்தையும் புறத்தையும் பாத்திரங்கள் ஊடாக பேசுகின்றன என்பது தலைமை உரையில் சுதன்ராஜ் அவர்கள் எடுத்துரைத்திருந்தார்.

வாசுதேவன் தனது அறிமுக உரையில், ஒரு நாவல் என்பது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட ஒரு வீடு போன்றது என்றும், இதுவும் அப்படியான ஒரு நாவல் என்றும் குறிப்பிட்டார். சில பிரெஞ்சு நாவல்களையும் எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டி அவர் பேசினார்.

விமர்சன உரைகளை நிகழ்த்திய மோகனதாசன், லட்சுமி, பால கணேசன் ஆகியோர் நாவலில் கையாளப்பட்டிருந்த காட்சிப்படிமங்கள், பாத்திரங்களின் உரையாடல்கள் என நாவல்பயணத்தை அரங்கில் தமது கருத்துக்கள் ஊடாக வெளிக்கொணர்ந்தனர்.

பெண்ணியவாதியும் இலக்கிய ஆளுமையுமாகிய லட்சுமி அவர்கள் பெண்ணிய நோக்கில் நிலையில் இருந்து இந்த நாவலை ஆராய்ந்து தனது விமர்சனத்தினை முன்வைத்திருந்தார்.

தொடர்ந்து நாவல் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதல் பிரதியை திருமதி.சுகிர்தா குணா கவியழகன் அவர்ள் வெளியிட, திருமதி சுமதி அரவிந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை எழுத்தாளர் மாணி நாகேஸ் அவர்கள் வெளியிட கலை இலக்கிய ஆர்வலர் வர்த்தகர் திரு.பாஸ்கரன், பரிஸ் ஈழநாடு ஆசிரியர் சமூக அரசியற் செயற்பாட்டாளருமாகிய திரு.பாலசந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து படைப்பாளி குணா.கவியழகனிடம் இருந்து வாசகர்கள் நாவலை பெற்றுக் கொண்டனர்.

அரசறிவியல் கற்றுத் தேர்ந்த படைப்பாளி குணா கவியழகன் அவர்கள் தனது ஏற்புரையில், எது அறம்? எது தர்மம்? உலக வல்லரசுகளில் இன்றைய போக்கு என்ன? என பல்வேறு விடயங்களை விலாவாரியாக, சுவாரசியமாக விபரித்தார். கர்ப்பநிலம் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குத் தெளிவான பதில்களையும் கொடுத்திருந்தார்.

‘நாவல் ஒன்றை எழுதுவதுக்கு ஈடான புலமை அதனை வாசிப்பவருக்கும் வேண்டும். கதைப் புத்தகம் வாசிப்பது வேறு நாவல் வாசிப்பது வேறு’ “எழுதும் போது நாவலில் நான் வாழ நேர்கிறது. அகத்தில் நாவலிலும் புறத்தில் பௌதீக சூழலிலும் வாழழும் இருமை நிலை தோன்றிவிடுகின்றது என்று குணா குறிப்பிட்டார்.

நீண்ட நாட்களின் பின்னர் மனவெழுச்சியைத் தந்த ஒரு இலக்கிய அரங்காக இந்நிகழ்வு அமைந்திருந்தது என பார்வையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்

செய்தி : ராஜீவன் இராமலிங்கம்

Copyright © 7091 Mukadu · All rights reserved · designed by Speed IT net