40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த யாழ். இளைஞன்!

40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த யாழ். இளைஞன்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

40 வருடங்களின் பின்னர் முதல் முறையாக யாழ்ப்பாண மாவட்ட இளைஞன் ஒருவர் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

வலது கை பந்துவீச்சாளரான அவர் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

சர்வதேச ஒரு நாள் அணியில் பதில் வீரராக இணைக்கப்பட்டுள்ள அவர் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை கிரிக்கெட் அணி குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து வெளியிட்ட விஜயகாந்த்,

15 வயதுக்குட்பட்ட அணியில் இருந்து நான் பந்து வீசுகின்றேன். நல்ல பயிற்றுவிப்பாளர்கள் கிடைத்த பின்னர் நான் பாடசாலை அணியில் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தினேன்.

அதன் பின்னர் 19 வயதுக்குட்பட்ட அணியில் மிகவும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தினேன்.

அந்த திறமையின் ஊடாக எனக்கு கொழும்பிற்கு வர சந்தர்ப்பம் கிடைத்தது. இங்குள்ள பயிற்றுவிப்பாளர்கள் நல்ல முறையில் பயிற்சி வழங்குகின்றனர். யாழ்ப்பாணத்தை விடவும் கொழும்பில் வித்தியாசமாக உள்ளது.

தற்போது எனது திறமை வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதென நினைக்கின்றேன்.

எனக்கு சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட பிடிக்கும். படிக்கச் செல்கின்றேன் என வீட்டில் கூறிவிட்டே கிரிக்கெட் விளையாட செல்வேன்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மேலும் பல வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும். கொழும்பு வந்தவுடன் மொழி பிரச்சினையில் சிக்கிக் கொண்டேன். எனினும் எனது சகோதரர்கள் சிங்களம் கற்பித்தார்கள்.

யாழில் இருந்து வந்த ஒரே வீரர் தான் என்பதனால் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். என்னிடம் தமிழ் கற்றுக் கொண்டார்கள்.

தமிழ், சிங்கள பேதமின்றி பழகுகின்றார்கள் என எனது யாழ்ப்பாண நண்பர்களிடம் நான் கூறிய பின்னர் அனைவரும் மகிழச்சியடைந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 9419 Mukadu · All rights reserved · designed by Speed IT net