‘ஆவா’ குழுவால் வடக்கில் அச்சுறுத்தல் இல்லை!
சிறு சிறு சம்பவங்களை பெரிதுபடுத்துவதாலேயே தேவையற்ற அச்சம்!
ஆவா குழு என்பது நினைப்பதைப் போன்று பெரியதொரு குழு அல்ல. சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்தக் குழுவால் வடமாகாணத்தின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லையென வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஆவா குழுவில் இருந்தவர்கள் பிரிந்து சென்று தனித்தனிக் குழுக்களை அமைத்திருப்பதுடன், அந்தக் குழுக்களுக்கிடையில் மோதல்களே தற்பொழுது அதிகம் இடம்பெற்று வருகின்றன.
பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு வடமாகாணத்தில் பொலிஸார் அமைதியை நிலைநாட்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பிலுள்ள பொதுநிர்வாக மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தில் உள்ள 53 பொலிஸ் பிரிவுகளில் யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே இந்த ஆவா குழுவினரின் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன.
ஆவாக்குழு உறுப்பினர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்றபோதும், சிலர் நீதிமன்றத்தின் ஊடாக பிணையைப் பெற்று வெளியேறுகின்றனர்.
இவ்வாறு வெளியேறுபவர்கள் தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தில் இணுவில் மற்றும் கொக்குவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே ஆவாக்குழுவில் அதிகம் இருக்கின்றனர்.
தமிழகத்தின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் இவ்வாறு குழுக்களை அமைத்து செயற்படுகின்றனர்.
இவர்களின் உறவினர்கள் பலர் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தில் இளைஞர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் காணப்படும் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளிட்டவையும் இந்த நிலைமைக்குக் காரணமாகும் என்றார்.
பொலிஸாருக்குக் காணப்படும் வரையறுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தக் குழுக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றோம்.
எனினும், எம்மை அதிகாரத்தை மீறிச் செயற்பட வைப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
பொலிஸாரின் நடவடிக்கைகளால் ‘ஆவா’க் குழுவின் செயற்பாடுகள் குறைந்து செல்வதை தடுக்கும் நோக்கில் ஆவாக்குழுவினர் வீடுகளின் மீது தாக்குதல்களை நடத்தி பயத்தை உருவாக்கி வருகின்றனர்.
‘ஆவா’க் குழுவென்பது நினைப்பதைப் போன்று பாரியதொரு குழு அல்ல. இந்தக் குழுவினால் இதுவரை எந்தவொரு உயிர் கொலையும் மேற்கொள்ளப்படவில்லையென்றார்.
இதேவேளை, ‘ஆவா’ குழு ஒரு பயங்கரவாதக் குழு அல்ல.
நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாதாள உலகக் குழுக்களால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல்களைவிட குறைந்தளவான குற்றச்செயல்களிலேயே அவர்கள் ஈடுபடுகின்றனர் என பிரதியமைச்சர் நளின்பண்டார தெரிவித்தார்.
ஊடகங்களும் ஏனையவர்களும் ‘ஆவா’ குழுவை வேறு கோணத்தில் பார்த்து, சிறு சிறு சம்பவங்களையும் பெரிது படுத்துவதாலேயே தேவையற்ற அச்சம் உருவாக்கப்படுவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கிலுள்ள குழுவுக்கு ஆவா குழு எனப் பெயர் வைத்துள்ளனர். எனினும், தெற்கில் உள்ள பாதாள உலகக் குழுக்களுக்குப் பெயர் இல்லை.
அப்படிப் பெயர் இருந்தால் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க முடியும் எனவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.