முல்லைத்தீவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்றும் ஆர்ப்பாட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இந்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்திய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 14ஆம் திகதி முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.