குழந்தை இல்லாத விரக்தியில் அப்படி பண்ணிட்டோம்! பரபரப்பு வாக்குமூலம்!

குழந்தை இல்லாத விரக்தியில் அப்படி பண்ணிட்டோம்! – திருப்பூரில் கைதான வடமாநிலத் தம்பதி வாக்குமூலம்!

குழந்தை இல்லாத விரக்தியில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைக் கடத்திச் சென்றதாக, வடமாநிலத் தம்பதியை திருப்பூர் காவல் துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருவம்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார்கள், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புத்தாதேவ் – பேபிராணி தம்பதி. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் இவர்களுக்கு, ஒன்றரை வயதில் உதய்நாராயணன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில்,  அவர்களது வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை உதய்நாராயணன் திடீரென மாயமாகிப் போனார்.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியும் உதய்நாராயணன் கிடைக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரிடம் விசாரித்தபோது, இதே பகுதியில் வசித்துவந்த ஒரு நபர்தான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்றதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

பின்னர், அந்த நபரைப் பற்றி தீவிரமாக விசாரித்ததில், அவரும் ஒடிசாவைச் சேர்ந்தவர்தான் என்பதும், சண்கர்ஷன் சேத்தி என்பது அவர் பெயர் என்றும் தெரியவந்தது.

மேலும், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் திருப்பூரில் குடியிருந்த வீட்டை காலிசெய்துவிட்டு, தனது மனைவி சுசித்ராவுடன் கோவையில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்ற தகவலும் கிடைத்தது.

பின்னர், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புத்தாதேவ். இதையடுத்து, உடனடியாக விசாரணையில் இறங்கிய காவல் துறையினர், கோவையை அடுத்துள்ள செட்டிபாளையம் பகுதியில் தங்கியிருந்த சண்கர்ஷனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், அவர் இருக்கும் வீட்டை சோதனையிட்டதில், குழந்தை உதய்நாராயணனை அவர்கள் கடத்தியது அம்பலமானது.

இதைத் தொடர்ந்து, சண்கர்ஷனிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், “குழந்தைப்பேறு இல்லாததால், பல மாதங்களாகவே தம்பதியர் பெரும் வேதனையில் இருந்ததாகவும், அச்சமயம் திருப்பூரில் தங்கியிருந்தபோது அந்தப் பகுதியில் வசித்துவந்த புத்தாதேவ்வின் குழந்தையான உதய்நாரயணன் மீது ஆசை ஏற்பட்டதாகவும், அதனால்தான் திருப்பூருக்குச் சென்று குழந்தையை யாருக்கும் தெரியாமல் தூக்கிக்கொண்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

குழந்தையை மீட்டு, பெற்றோரிடத்தில் ஒப்படைத்த காவல் துறையினர், குழந்தையைக் கடத்தியதற்காக, சண்கர்ஷன் மற்றும் சுசித்ராவைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net