மீண்டும் இயற்கை அழிவை சந்திக்குமா கேரளா?
கேரளா மாநிலத்தின் 11 மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து முன்னெச்சரிக்கையாக 20 அணைகளில் இருந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஒகஸ்ட் மாதம் பெய்த கடும் மழையை தொடர்ந்து, அங்கு பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், நூற்றுகணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் எதிர்வரும் மணித்தியாலங்களில் புயல் காற்று வீசக்கூடும் எனவும், இதனால் கடும் மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலை அண்மித்த லட்சத்தீவு பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளமையே இதற்கு காரணம் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.
இந்த நிலைமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, லட்சத்தீவு, மாலைத்தீவு பகுதிகளின் வழியாக ஒமன் கடல் பகுதியை கடந்து செல்லும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் அது புயலாக மாறும்போது காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் அடுத்து வரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் என, சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநில அரசு பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம், எர்ணா குளம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு செம்மஞசல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஒகஸ்டு மாதம் பெய்த கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்காணோர் உயிரிழந்தனர்.
மீண்டும் அவ்வாறான பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக, இப்போதே தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தொண்டர்கள், நீச்சல் வீரர்களும் மாவட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக கேரளாவின் மலையோர பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், அதனை வெளியேற்றமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வயநாட்டில் உள்ள பாணசூர சாகர், கோழிக்கோட்டில் உள்ள காக்கயம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள காக்கி, பம்பா, மணிமாலா, இடுக்கி மாவட்டத்தில் உள்ள மட்டுபேட்டி, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பீச்சி உள்பட 20 அணைகளில் நீர்; திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கேரள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாநில அரசு கேட்டுள்ளது.
மேலும், மழை காரணமாக தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
புயல் எச்சரிக்கை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 30 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.