மட்டக்களப்பில் நடந்த பாரிய ஊழல்!

மட்டக்களப்பில் நடந்த பாரிய ஊழல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குளம் மற்றும் அணைக்கட்டுகள் புனரமைப்பில் பாரிய ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு வாகரை பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட அணைக்கட்டு மற்றும் குளங்களில் பாரிய ஊழல்கள் நடைபெற்றுள்ளன.

இரவோடு இரவாக திறக்கப்பட்டுள்ளதே தவிர இந்தமுறை கடுமையான மழை பெய்யுமானால் பல குளங்கள், அணைக்கட்டுக்கள் காணாமல்போகும் நிலையுள்ளது.

பல கோடி ரூபா பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளினதோ, பிரதேச மக்களினதோ ஆலோசனைகளை செவிமடுக்காமல் இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துமீறிய நிலையில் காணிகள் பிடிக்கப்படும்போது அதற்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் அதிகாரிகளினால் எடுக்கப்படுவதில்லை.

ஆனால் சாதாரண மக்கள் தாங்கள் வசிப்பதற்காக காணியை தெரிவு செய்யும்போது அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

வாகரை வாலமன்கேணியில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் கைமாற்றப்படுகின்றன.

வாகரை பிரதேசத்தில் தனியொருவருக்கு 2200 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பகுதியிலேயே அதிகளவான காணிகள் வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. பண்ணையாளர்கள் உண்மையான மாடுகளின் எண்ணிக்கையினை வெளியிட்டு மேய்ச்சல் தரைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

சிலர் சமுர்த்தி உதவிகளை பெறுவதற்காக மாடுகளின் எண்ணிக்கையினை குறைவாக தெரிவிப்பதன் காரணமாக மேய்ச்சல் தரை காணிகளை ஒதுக்கீடு செய்வதில் கஸ்டங்கள் எதிர்நோக்கப்படுகின்றது.

இன்று மகாவலி திட்டம், வன இலாகா என பல்வேறு திட்டங்கள் ஊடாக காணிகளை உள்வாங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் மேய்ச்சல் தரைக்குரிய காணிகளை பெற்றுகொள்வதற்கு உண்மையான தரவுகளை வழங்க வேண்டிய பொறுப்பு பண்ணையாளர்களுக்கு உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேசசபை தவிசாளர்களுக்கு இந்த அரசாங்கம் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் பதவியை வழங்கவில்லை.

ஆனால் உள்ளூராட்சி தேர்தலில் ஒரு வட்டாரத்தில் கூட வெல்ல முடியாத அமைப்பாளர்களுக்கு இணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தின் மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net