சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு!
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அரியாலையில் சட்டவிரோத மண் கடத்தல் வரையறையின்றி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலைமையில் நேற்று சட்டவிரோத மண் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
சிவில் உடையில் வந்த இருவர், உழவு இயந்திரங்களை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதும், உழவியந்திரங்கள் வேகமாக தப்பிச் செல்ல முனைந்தது.
இதன்போது முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் உழவு இயந்திரத்தை நோக்கியும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அப் பிரதேசத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
எனினும், மணல் கடத்தல்காரர்களிற்கு எந்த ஆபத்துமின்றி தப்பித்து சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.