மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணிகள் மழையிலும் தொடர்கிறது!

மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணிகள் மழையிலும் தொடர்கிறது!

மன்னாரில் தொடர்சியாக மழை பெய்து வருகின்ற நிலையிலும் திட்டமிட்ட வகையில் மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் புதிய விற்பனை நிலையத்துக்கான கட்டுமான பணி இடம்பெற்ற போது குறித்த வளாக பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த வளாகப் பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் மன்னார் நீதவான் த.சரவண ராஜா முன்னிலையில் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராசபக்ஷ தலைமையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மன்னாரில் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் அகழ்வு செய்யப்படும் மனித புதை குழியானது மழை நீரால் நிரம்புகின்ற போதும், குறித்த பகுதியில் தேங்கி நிற்கின்ற மழை நீர் இயந்திரத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் தொடர்சியாக மழை பெய்யும் பட்சத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் அடையாளப்படுத்தப்பட்ட மேலதிக மனித எச்சங்கள் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த வார இறுதியில் 154 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

அவற்றில் 151 மனித எலும்புக்கூடுகள் அகற்றப்பட்ட நிலையில் இன்று (திங்கட்கிழமை) 82 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net