மீசாலையில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்!
யாழ்ப்பாணம்- மீசாலை, புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்பாகவுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு பத்து பேருக்கும் அதிகமானோர் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இதனால் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட, அவர்களுக்கு வாள்களை காட்டி அச்சுறுத்தி, தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள் 4000 ரூபாய் பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரம் வரை வீட்டில் நின்ற கொள்ளையர்கள், கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இக்கொள்ளை தொடர்பாக, கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.