பா.ஜ.க. தலைவரின் மகன் கத்தியால் குத்திப் படுகொலை!
பீகார் மாநிலத்தின், மாவட்டமொன்றின் பாஜக தலைவரின் மகனை இனந்தெரியாத கும்பல் ஒன்று கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ளூர் பாஜக தலைவரான கங்கோத்ரி பிரசாத்தின் மகனான பியூஷ்குமார் என்பவரே நேற்றிரவு (திங்கட்கிழமை) இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று இரவு சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து, தங்களிடம் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினர்.
இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த பியூஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்டுள்ளமையானது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.