காதலினால் வந்த வினை!
வேலூரில் இருவரை திருமணம் செய்து ஏமாற்றியதாக 18 வயது இளம் பெண் மீது அவரின் முதல் கணவர் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியை சேர்ந்த 18 வயது இளம் பெண் சமிதா.
இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தின் போது ஒளிப்படம் எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு ஏற்பட்டு பின்னர் சமரசம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இதனை காரணம் காட்டி திருமணம் ஆன சில தினங்களிலேயே சமிதா கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.
சில நாட்கள் கழித்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துவருவதற்காக கணவர் சக்திவேல், மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
கோபமாக இருப்பதாக காட்டிக்கொண்ட சமிதா, கணவர் சக்திவேலுவுடன் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மனைவியுடன் சேர்ந்துவாழ்வதற்காக கணவன் சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்.
அப்போது மனைவி சமிதா வேறொரு இளைஞனுடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட தாலியுடன் ஜோடியாக கிரிவலம் செல்வதை கண்டு திகைப்படைந்தார்.
அவர்களை பின்தொடர்ந்து சென்றபோது அவர்கள் புதுமண தம்பதிகள் போல நடந்துகொள்வதைக் கண்டு சந்தேகமடைந்து சமிதாவை மறித்துள்ளார் கணவர் சக்திவேல்..!
சமிதாவுடன் கிரிவலம் வந்தவர் அவருடைய பாடசாலை பருவ காதலன் கார்த்திக் என்பதும் சமிதாவும் கார்த்திக்கும் தற்போது புதிதாக திருமணம் செய்துகொண்டமையும் தெரியவந்தது.
இதையடுத்து சக்திவேல் தனது மனைவி தன்னை விவாகரத்து செய்துகொள்ளாமல் வேறொரு இளைஞனை 2வது திருமணம் செய்து கொண்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
பொலிஸாரின் விசாரணையில் சமிதாவின் பழைய காதல் வெளிச்சத்திற்கு வந்தது. சமிதா 11ஆம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக்கை காதலித்த நிலையில், இருவரும் எல்லைமீறியதால் சமீதா கர்ப்பமடைந்துள்ளார்.
கார்த்திக் தங்களை விட குறைந்த சாதி என்பதால் சமிதாவின் கர்ப்பத்தை கலைத்த குடும்பத்தினர் சமிதாவை ஊரை விட்டு சாலைநகரில் உள்ள உறவினரான சக்திவேல் வீட்டில் பாதுகாப்புக்கு தங்கவைத்துள்ளனர்.
அங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தபோது சக்திவேலுவுக்கும், சமிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
கணவன் வீட்டாரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற சமிதா, பழைய காதலன் கார்த்திக்கை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு திருவண்ணாமலையில் ஜோடியாக கிரிவலம் வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சமிதா 18 வயது நிரம்பியவர் என்றாலும், முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்துகொண்டமை குற்றம் என்ற அடிப்படையில் சமிதாமீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.