“போதநாயகி விடயத்தில் தலையிடக்கூடாது” பெண்களுக்கு அச்சுறுத்தல்!

“போதநாயகி விடயத்தில் தலையிடக்கூடாது” பெண்களுக்கு அச்சுறுத்தல்!

போதநாயகி விடயத்தில் பெண்கள் தலையிடக்கூடாது என்று வவுனியாவை மையமாக வைத்துச் செயற்படும் முன்னாள் போராளி அமைப்பொன்றிலிருந்து பிரிந்து செயற்படும் அரசியல் கட்சியின் இளைஞர் அமைப்பாளர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் விடுதலைச் சிந்தனைகள் அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண் பிரதிநிதிகளே இவ்வாறு முறைப்பாட்டினைப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

கடந்த 07-10-2018 ஞாயிற்றுக்கிழமையன்று போதநாயகியின் வீட்டில் ஒன்றுசேர்ந்த ஒரு சில சமூகச் செயற்பாட்டாளர்கள் போதநாயகியின் மரணம் தொடர்பிலும், குடும்ப வன்முறைகள் குறித்தும், விரிவாகக் கலந்துரையாடினார்கள்.

போதாநாயகியின் மரணம் தொடர்பில் முறையான சட்ட விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிசெய்வதும், அவருடைய குடும்பத்தாருக்கு சட்ட ரீதியான ஆலோசனைகள், உதவிகள் செய்யப்படுதல் வேண்டும் என்றும் பிரதேச மக்களின் கோரிக்கை, சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என சமூக ஆர்வலர்களால் கருத்து வெளியிடப்பட்டது.

அத்தோடு போதநாயகியின் இழப்பின் பின்னணியில் குடும்பவன்முறைகளே காரணமாக இருந்திருக்கின்றன என்பது அவரது குடும்பத்தார் வெளியிட்ட பல்வேறு தகவல்களின் அடிப்படையில் ஊர்ஜிதமாகியிருந்தது.

இதன் மூலம் அவரது மரணம் மிகப்பெரிய சமூகப் பொறுப்பொன்றினை எம் அனைவர் மீதும் விட்டுச் சென்றுள்ளது என குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாணசபை உறுப்பினரும், சமூகச் செயற்பாட்டாளருமாகிய அய்யூப் அஸ்மின் கருத்துவெளியிட்டார்.

இக்கருத்தினை அங்கிருந்த அனைவரும் வரவேற்றதோடு, குடும்ப வன்முறைக்கு எதிராக குறிப்பாக பெண்கள் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

போதநாயகியின் குடும்பத்தாருக்கும், பிரதேசவாசிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்குமான சந்திப்பு மிகவும் உணர்வுபூர்வமாக நிறைவுபெற்றது.

இதன் பின்னரே குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பெண்கள் ஒரு சிலருக்கு தன்னை ஒரு தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் என்றும், ஒரு கட்சியின் இளைஞர் அமைப்பாளர் என்றும் அறிமுகம் செய்கின்ற ஒருவரால் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது, அப்பெண்கள் தொழில்புரியும் காரியாலங்களுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் விடுக்கப்பட்டு அச்சுறுத்தல் மற்றும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விரைந்து செயற்பட்ட பெண்கள் விடுதலைச் சிந்தனை அமைப்பினர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் முதற்கட்டமாக குறித்த நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒரு தமிழ்ப்பெண் விரிவுரையாளரின் மரணத்தில் நிலவும், சந்தேகங்கள், அந்த மரணம் நிகழ்ந்தமைக்கான புறக்காரணிகள், அந்த மரணத்தின் பின்னால் ஒழிந்துகொண்டிருக்கும் அநீதிகள் குறித்து பெண்களே மிகவும் தைரியமாக முன்வந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அவர்களை ஒடுக்குவதற்கான இத்தகைய அச்சுறுத்தல்களைப் புரியும் ஈனத்தனமான பிறவிகளும் இந்த ஈழத்து மண்ணில் இருக்கின்றார்கள் என்பதை எண்ணும்போதும், இனவாதத்தை மாத்திரம் மூலதனமாகக் கொண்டு செயற்படும் போலித்தேசியவாதிகள் இருக்கின்றார்கள் என்பதை உணரும்போதும்; எமது மக்களும் எமது போராட்டமும் மிகவுமே அசிங்கப்பட்டு நிற்கின்றது என ஒரு முக்கிய சமூகப் போராளியொருவர் கருத்துவெளியிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net