விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவுள்ள பிரபல வர்த்தகர் விஜய் மல்லையாவின் பெங்களூரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.
அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனிடையே இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்திலும் நடக்கிறது.
இவ்வாறிருக்க விஜய் மல்லையா மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.