ஆளுநர் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும்வரை தொடர்ந்து போராடுவோம் என, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் – பாராட்டும் என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்டாலின் மேற்படி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. அவர் எத்தனையோ எதிர்ப்புக்களை கடந்து வந்தவர்.
கோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு பயந்துகொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் மீதும் வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். உடனே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விசாரணை ஆணைக்குழு அமைத்தார்.
நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 4 மாத காலம் ஆகிறது. அவருக்கு 8 முறை பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் கோபால் எழுதினார். ஆனால் ஆளுநர் விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
பா.ஐ.க.வை சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, பொலிஸ் துறையை கொச்சைப்படுத்தி பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை?
பெரியார் சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா பொலிஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார். பெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜ.க.வை சேர்ந்த எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை.
காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்துகொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
ஆளுநரை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டுமென இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்தார்.