மகளிர் அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடில்லை: பாதுகாப்புக்கு இத்தனை மில்லியனா?
வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் 3 ஆயிரம் மில்லியன் ரூபாயை பாதுகாப்பிற்கு ஏன் ஒதுக்கியுள்ளது? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய தொழில் அமைப்புக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
மன்னார் பிரதேச சமூக சேவை உத்தியோகஸ்தர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அனந்தி சசிதரன் குறித்த நிகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இறுதி யுத்ததில் ஒரு இனத்தையே அழிப்புக்கு உள்ளாக்கி விட்டு அதில் பாதிக்கப்பட்ட பெண்களை மீள் எழுச்சி அடையவிடாமல் தடுத்து அவர்களுக்குரிய எந்த உதவியையும் செய்யாமல் இப்போது பாதுகாப்புக்கென 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள்.
ஒன்பது வருடம் யுத்தம் முடிந்த பின்பு இந்த அரசாங்கம் எந்த நாட்டுடன் யுத்தம் நடத்துவதற்காக இந்த 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியிருக்கின்றது என்பது எங்களுடைய மக்கள் எழுப்புகின்ற கேள்வியாகதான் இருக்கின்றது.
மீள் எழுச்சியை மக்களுக்கு ஏற்படுத்தாது இராணுவத்திற்கும் படை பலத்தை அதிகரிப்பதற்கும் ஒதுக்கும் பொழுது நாடாளுமன்றத்தில் எங்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கின்றவர்கள் இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கப் போகின்றார்களா?
அல்லது, இதய சுத்தியுடன் எங்களுடைய மக்களை போரில் இருந்து மீண்டெழுகின்ற நிலைக்கு கொண்டு வர போகின்றார்களா? என்று மக்கள் தான் வினவ வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.