யாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரின் உயிரை காப்பாற்றிய பூனை!

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூனை தன்னை உரசியிராவிட்டால் தான் எழுந்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், குறித்த இரண்டு பிராணிகளையும் தாம் தவறாமல் உணவு கொடுத்து வளர்த்த நன்றிக்காகவே அவை அவ்வாறு செயற்பட்டுள்ளன என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“நேற்று இரவு வழமையாகவே வெளி விராந்தையில் உறங்கிக்கொண்டிருந்தேன். காற்றோட்டத்திற்காக இவ்வாறு உறங்குவது வழமை. நடுச்சாமம் போல எனது காலை ஏதோவொன்று உரசுவது போல இருந்தது.

அத்துடன் எமது நாயும் பக்கத்திலிருந்து குரைத்தபடி இருந்தது.

இதனால் உடனடியாக திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது காலடியில் இரண்டடி நீளமான விசப் பாம்பு ஒன்று படமெடுத்தபடி நின்றுகொண்டிருக்க எமது வளர்ப்புப் பூனை எனது காலுடன் உரசியபடி அந்தப் பாம்பை நோக்கி உறுமிக்கொண்டிருந்தது. நாயும் பாம்பைப் பார்த்து குரைத்த வண்ணமிருந்தது.

இதனையடுத்து வீட்டிலிருந்த ஏனையவர்களும் எழுந்துவிட்டனர். விசப் பாம்பாக இருந்ததனால் வேறு வழியின்றி அந்த பாம்பை அடித்துக் கொன்று புதைத்துவிட்டோம்.”என்றார்.

இது மழைக் காலமாதலால் பாம்பு உள்ளிட்ட விச ஜந்துக்கள் வெளியில் சஞ்சரிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் வீட்டின் வெளி கதவுகளை மூடிவிட்டு உறங்குவது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net