யானை தூக்கி எறிந்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
திருகோணமலை, திம்பிரிவெவ பகுதியில் வீட்டிற்கு முன்னால் இருந்த நபரை காட்டு யானை தூக்கி வீசிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த நபர் முதுகெலும்பு உடைந்த நிலையில் இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹதிவுல்வெவ, திம்பிரிவெவ பகுதியை சேர்ந்த டி.சிறிவர்தன (வயது 49) என்ற நபரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹதிவுல்வெவ, திம்பிரிவெவ பகுதியில் வீட்டுக்கு முன்னால் யானை வந்தபோது யானையை விரட்டி விட்டு பின்புறமாக சென்று யானை வெடி போட்டுள்ளார்.
இந்த நிலையில் கோபம் கொண்ட யானை அவரை தூக்கி வீசியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நபருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதேசத்தில் தொடர்ந்தும் யானையின் தாக்குதலுக்கு பொதுமக்கள் உள்ளாகி வரும் நிலையில் அதிகாரிகள் கண்மூடிதனமாக இருப்பதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.