அரசியல் கைதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும்!
தமிழ்த் தேசிய அரசியலில் அவ்வப்போது சில பிரச்சினைகள் திடீரென் மேற்பரப்புக்கு வருவதும், பின்னர் தணிந்து போவதும் இயல்பான ஒன்றாகி விட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து காணிகளை விடுவித்தல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை சார்ந்த பிரச்சினை போன்றவற்றை இவ்வாறு குறிப்பிடலாம்.
இந்தப் பிரச்சினைகள் காலத்துக்குக் காலம் மேல்நோக்கி எழுந்து வரும் போராட்டங்கள் நடக்கும் அரசியல்வாதிகள் கொதிப்புடன் பேசுவார்கள். மாறிமாறி ஒருவர் மீது மற்றவர் சேறடித்துக் கொள்வார்கள். கடைசியில் எல்லாமே தணிந்து போகும்.
இந்தவகையில் மீண்டும் தலைதூக்கியிருப்பது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம். அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 8 பேர் ஒன்பது ஆண்டுகளாக சிறையில் கழித்து விட்ட தம்மை குறுகியகால புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுவிக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடக்கும் இந்தப் போபராட்டமும் அதனை வைத்து நடத்தப்படும் அரசியலும் தான் இப்போது தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய விடயமாக மாறியிருக்கிறது.
அநுராதபுர சிறைச்சாலையில் 8 பேர் தொடங்கிய போராட்டத்தில் இப்போது 10 பேர் பங்கெடுக்கின்றனர். மகசின் சிறைச்சாலைக்கும் இந்தப் போராட்டம் பரவி அங்கும் 45 கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக 55 அரசியல் கைதிகளின் போராட்டம் ஒரு பக்கம் நடக்க அதனை வைத்துக்கொண்டு வெளியேயும் ஒரு அரசியல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் அரசியல்வாதிகள் ஒரு பக்கமும் அரசாங்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் இன்னொரு பக்கமுமாக இந்த விவகாரத்தைப் பந்தாடிக் கொண்டிருக்கின்றனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள் இன்னமும் வழக்குத் தாக்கல் செய்யப்படாதவர்கள் என்று மூன்று வகையானவர்கள் இந்த அரசியல் கைதிகளின் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.
இவர்களின் பெரும்பாலானவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக இருப்பதே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தான்.
ஆனால் நீதிமன்றத்தில் சுயமாகப் பெறப்படாத குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்படும். வேறு ஆதாரங்கள் ஏதுமின்றி குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு பெரும்பாலான அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகளையும் வழக்குத் தாக்கல் செய்வதையும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
தற்போது 107 அரசியல் கைதிகள் இருப்பதாக சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால் அரசாங்கமோ அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறுகிறது.
நீதியமைச்சர் தலதா அத்துகோரள இதனைத் தாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனிடம் கூறி விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களில் பங்கேற்றதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் கைதிகள் தான் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளும் வாதிடுகின்றன.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான போராட்டங்கள் போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் முழு அளவில் வெற்றியளிக்கவில்லை எனக் கூற முடியாது.
முன்னர் பல நூற்றுக்கணக்கில் இருந்த அரசியல் கைதிகளின் எண்ணிக்கை இப்போது 107 ஆகக் குறைந்திருக்கிறது. அதற்கு இந்தப் போராட்டங்கள் தான் காரணம்.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, மற்றும் சட்டமா அதிபர் என்று மாறிமாறி பேச்சுக்கள் நடத்தப்படுகின்ற போதிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாக்குறுதிகள் அல்லது நழுவலான பதில்களுடன் முடிந்து போகிறது.
சில சமயங்களில் உண்ணாவிரதப் போராட்டங்கள் உச்சமடைகின்ற போது அரசாங்கமும், அரசாங்கத்தின் சார்பாக தமிழ் அரசியல் தலைமைகளும் வாக்குறுதிகளை அளிப்பதும் அதனால் போராட்டங்கள் கைவிடப்படுவதும் வழக்கம்.
எனினும் இந்தப் பிரச்சினை மாத்திரம் முடிவுக்கு வருவதாக இல்லை. அலரி மாளிகையில் பிரதமர், சட்டமா அதிபர், நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுடன் இரா.சம்பந்தனும் சுமந்திரனும் ஒரு முறை பேசினார்கள். அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வந்ததும் பேச்சு நடத்தலாம் என்று அதன் போது உறுதி அளிக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் நீதியமைச்சில் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இரா.சம்பந்தன் பேசுவதற்கு எடுத்த முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. சம்பந்தனுடன் பேசுவதற்கு இடமளிக்காமல் ஜனாதிபதி நழுவிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பிய போது நீதியமைச்சர் வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பியதும் பேசி முடிவெடுக்கலாம் என்று பதிலளித்திருக்கிறார் பிரதமர்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஜனாதிபதியோ அரசாங்கமோ தயாராக இல்லை.
அதனால் தான் ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்டமா அதிபர் என்று வெளிநாடு செல்வதை சாட்டாக வைத்து இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது அரசாங்கம்.
அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளை எப்படி விடுதலை செய்ய வேண்டும் என்ற விடயத்திலும் தமிழர் தரப்புக்குள் கருத்து ஒருமைப்பாடு இல்லை.
அநுராதபுர சிறையில் உண்ணாவிரதமிருக்கும் எஅரசியல் கைதிகள் தம்மை குறுகிய கால புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறது.
ஆனால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் அமைப்பாளரான அருட்தந்தை சக்திவேல் நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் பொதுமன்னிப்பு என்ற விடயம் பொருத்தமற்றது என்கிறார்.
அரசியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்டத்தை வைத்து வெளியே அரசியல் செய்வதற்கும் அவர்களின் விடுதலைக்கு தாமே உதவியதாக தம்பட்டம் அடிப்பதற்கும் தாராளமாகவே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை வைத்து அரசியல் லாபம் தேடிக் கொள்வதில் அரசியல்வாதிகள் மாத்திரம் அக்கறைப்படுகிறார்கள் எனக் கூற முடியாது. அதற்கு அப்பாலுள்ளவர்களுக்கும் அந்த ஆர்வம் உள்ளது.
அநுராதபுர சிறையில் அரசியல் கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்த ஒரு சில நாட்களின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அங்கு சென்று அரசியல் கைதிகளை பார்வையிட்டார். அரசுடன் பேசுவதாக உறுதியளித்தார்.
அதற்கு சில நாட்களின் பின்னர் மகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த இன்னொரு தமிழ் அரசியல்வாதி வெளியே வந்து கூட்டமைப்பினர் தம்மை வந்து பார்வையிட்டு ஒன்றரை வருடங்களாகின்றன என்று அரசியல் கைதிகள் குறை கூறினர் என்றார்.
தம்மை விடுதலை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை கடந்த முறை வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கு இதனை ஒரு நிபந்தனையாக முன்னிறுத்த தவறி விட்டது. என்றெல்லாம் அரசியல் கைதிகள் குறைபட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
இம்முறை அரசியல் கைதிகளின் போராட்டம் மூன்று வாரங்ளாக தொடரும் வரை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வாய்திறக்காமல் கடந்த வாரம் அரசியல் ஆய்வாளர் ஒருவர் தனது பத்தியில் இதனைச் சுடடிக்காட்டிய மறுநாளே யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஒரு மாணவன் தமிழ்த் தலைமை தூங்குகிறதா? என்று கேள்வி எழுப்பும் பதாதையுடன் காணப்பட்டார்.
மூன்று வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் திடீரென விழித்துக் கொண்டு போராட்டத்துக்கு வந்து என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
அவர்கள் அந்தப் போராட்டத்தையும் அதற்கடுத்த நாள் அநுராதபுரம் நோக்கிய நடைபவனியையும் ஆரம்பிப்பதற்கு இடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று முறை அரசாங்கத்துடன் பேசியிருந்தது.
மன்னாரில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. இந்தப் பிரச்சினையை எழுப்பினார். ஆனாலும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. தீர்வும் கிடைக்கவில்லை.
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் உருப்படியான தீர்மானம் எடுக்கும் நிலையில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு தமிழ் அரசியல் பரப்பில் அரசியல் லாபம் தேடுவதும் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும் பேச்சுக்களை நடத்தியும் களைத்துப் போய் விட்டேன் என்று அலுத்துக் கொண்டு கூறநியிருந்தார்.
5 ஆண்டுகளாக அரசியல் செய்யும் அவருக்கே களைத்துப் போய் விட்டது என்றால் 15,20 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தும் அரசியல் கைதிகளின் நிலை எத்தகையதாக இருக்கும்?
அவர்கள் சலிப்படைவது தம்மீது சமூகமும் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அப்பட்டமாக அரசியல் செய்வது அபத்தமானது.
-எழுத்தாளர் Habil-