அரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகமிழைக்கின்றது!

அரசியல் கைதிகளின் விடயத்தில் ‘நல்லாட்சி’ துரோகமிழைக்கின்றது!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் ‘நல்லாட்சி’ தமிழர்களுக்குத் துரோகமிழைக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைப்பயணம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘நம்பகமாக வாக்குறுதிகளை வழங்கி, தமது அதிகாரங்களைத் தமிழர்களின் துணைக்கோடலுடன் அமைத்துக்கொண்ட ‘நல்லாட்சி’ எனும் நடைமுறையரசின் பாராமுகம், அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் நம்பகத்தன்மையை இழந்துள்ளது.

மேலும் ஆட்சி அதிகாரங்களைத் தமக்குச் சார்பாகப் பெருபான்மையினரால் அமைக்கப்பட்டு அதனையே தமது பேரினவாத போக்கிற்குச் சாதகமாக்கிக்கொள்ளவும் முனைந்துவந்துள்ளனர்.

அவ்வாறான முறைசாரா அதிகாரத்தினூடாக பாராபட்சமான சட்ட நடைமுறைகள் திணிக்கப்பட்டு சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகள் இன்றுவரை ஒடுக்கப்படுகின்றன.

அரச இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை மறைப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று குரல்கொடுக்கத் துணிந்த அரச அதிபரினால், தங்களது தேசத்திலுள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எவ்வாறு பாரமுகமாகச் செயற்படமுடிகின்றது?

குறிப்பாக, தமிழர்களுக்கு அநீதி இழைத்து, கொடிய போரை வழிநடத்திய இராணுவத் தளபதிக்குகூட ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரப் பிரயோகமூடாக பொது மன்னிப்பை வழங்க முடிந்த ஜனாதிபதி அவர்கள் ஏன் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பாரமுகமாக இருக்கின்றார்?’ என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net