நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறைக்குள் இலங்கை!

நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறைக்குள் இலங்கை!

சீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதமும், நவம்பர் மாதமும் இரண்டு முறை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற பின்னர் இலங்கையின் அரசியல் தலைகீழாக மாறியது.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இரகசிய வேலைகளில் இறங்குவதற்கு அதுவே பிரதான காரணியாக இருந்தது என்ற பொதுவான நம்பிக்கை பரவலாகவே உள்ளது.

அதற்குப் பின்னர் சீனாவின் பல்வேறு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சென்றிருந்தாலும் நீர்மூழ்கிகள் எதுவும் வரவில்லை. ஏனைய நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களும் கூட வரவில்லை.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் சீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வர அனுமதி கோரியது. ஆனால் அதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டது. காரணம் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் பகைமையைச் சம்பாதித்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் தான்.

கொழும்புத் துறைமுகத்துக்கோ ஏனைய துறைமுகங்களுக்கோ சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வராவிடினும் இலங்கையை அண்டிய சர்வதேச கப்பல் பாபதையில் அவை கிரமமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றன.

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தனது நாட்டுக் கப்பல்களை பாதுகாக்க என்று சீனா முதலில் போர்க்கப்பல்களை அனுப்பியது. பின்னர் நீர்மூழ்கிகளையும் அனுப்பியது. அதற்கு பின்னர் அந்தக் கப்பல்களுக்கான விநியோகங்களை மேற்கொள்வதற்கென டிஜிபோட்டியில் கடற்படைத் தளம் ஒன்றையும் அமைத்து விட்டது.

இதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு இப்போது இந்தியப் பெருங்கடல் வழியாக சீனக் கடற்படைக் கப்பல்கள் நீர்மூழ்கிகள் மிகத் தாராளமாகவே அங்கு சென்று வருகின்றன.

சீனக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் மீது ஆதிக்கம் செலுத்த முனைவதை இந்தியாவும், அமெரிக்காவும் விரும்பவில்லை. அதிலும் சீனா தனது நீர்மூழ்கி கப்பல்களின் பலத்தை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதையும் அவை இந்தியப் பெருங்கடலில் நடமாடுவதையும் அச்சுறுத்தலாகவே பார்க்கின்றன.

இப்போது சீனாவின் நீர்மூழ்கிகள் அதிகளவில் இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகே நடமாடுகின்றன. இவற்றைக் குறி வைப்பதும் இந்த நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதும் இந்தியப் பெருங்கடலில் நடக்கின்ற முக்கியமான போட்டியாக மாறியிருக்கிறது.

அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் ஏதோ ஒரு விதத்தில் இந்த விடயங்களில் தொடர்புபட்டிருக்கிறது அல்லது சிக்கிப் போயுள்ளது.

கடந்த 4ம் திகதி இலங்கைக் கடற்படை ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் Hai Yangdac என்ற சீனக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருப்பதாகவும் அதற்கு இலங்கைக் கடற்படையினர் வரவேற்பு அளித்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

135 மீற்றர் நீளம் கொண்ட அந்தக் கப்பல் 676 தொன் எடையுள்ளது. அது ஒக்டோபர் 7ம் திகதி கொழும்பை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அந்தக் கப்பல் எந்த வகையைச் சேர்ந்தது என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சீனக் கடற்படையின் அந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருவதற்கு சற்று முன்னர் தான் அங்கிருந்து இரண்டு ஜப்பானிய போர்க்கப்பல்கள் புறப்பட்டுச் சென்றிருந்தன.

ஜப்பானிடம் உள்ள மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான ககாவும் அதற்குத் துணையாக வந்த நாசகாரி கப்பலான இனாசுமாவும் செப்டம்பர் 30ம் திகதி தொடக்கம் கொழும்பில் தரித்து நின்றன. கடந்த 4ம் திகதி காலையிலேயே அவை இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டுச் சென்றன.

இது ஒரு எதேச்சையான விடயம் அல்ல. ககாவின் இந்தியப் பெருங்கடல் பயண நிகழ்ச்சி நிரல் பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. அதன் வழித் தடத்தை சீன நீர்மூழ்கிகள் மோப்பம் பிடித்துக் கொண்டு திரிந்திருக்கின்றன என்பதே உண்மை.

கடந்த 4ம் திகதி கொழும்புக்கு வந்த சீனக் கடற்படைக் கப்பல் சாதாரணமான ஒன்று அல்ல. அது சீனக் கடற்படையிடம் உள்ள அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல். Type 926 ரகத்தைச் சேர்ந்த இந்தக் கப்பலின் பெயர் Ocean Island அதன் இலக்கம் 864.

ஆனாலும் இலங்கைக் கடற்படையினர் இதனை வெளிப்படுத்தவில்லை. இதன் பெயரை Hai Yangdac என்றே குறிப்பிட்டிருந்தனர். இது நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் என்றும் கூறவில்லை.

நீர்மூழ்கிகள் ஆழ்கடலில் பயணங்களை மேற்கொள்ளும் போது வெளியே தெரியாது. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தான் எங்கோ நடமாடுகின்றன என்பதைக் கண்டறிவதற்கு சோனார் போன்ற கருவிகளை மாத்திரம் நம்பியிருக்க வேண்டியதில்லை.

ஏனென்றால் நீர்மூழ்கிகளுடன் வழித்துணைக்கு நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல்களும் பயணங்களை மேற்கொள்வது வழக்கம். நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு தேவையான விநியோகங்களை மேற்கொள்வதற்கும் அவசர உதவிகளை வழங்குவதற்கும் தான் இந்த ஏற்பாடு.

2014ல் சீன நீர்மூழ்கி கப்பல் Type 925 என்ற நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலுடன் தான் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தது. கடந்த 4ம் திகதி கொழும்பு வந்த நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலும் அவ்வாறான ஒன்று தான்.

இந்தக் கப்பலில் விநியோக ஆதரவு மற்றும் நீர்மூழ்கிகளைப் பழுது பார்க்கும் செயலிழந்த நீர்மூழ்கிகளை கடலுக்கு அடியில் இருந்து மீட்கும். நவீன வசதிகள் மற்றும் அதற்கான நவீன நீர்மூழ்கி வாகனங்களும் இருக்கின்றன.

இந்த நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து தரித்து நிற்கும் போது அதன் கீழ் செயற்படும் சீன நீர்மூழ்கி அல்லது நீர்மூழ்கிகள் இலங்கையை அண்டிய பகுதிகளிலேயே நடமாடிக் கொண்டிருக்கும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜப்பானிய விமானந்தாங்கிக் கப்பலும் நாசகாரிக் கப்பலும் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டிருந்தன.

ஜப்பானிய கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ககாவில் மீட்பு நடவடிக்கைகள் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தே இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலில் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது தமது எந்தக் கப்பலிலும் ஏனைய நாட்டு அதிகாரிகளை ஜப்பானிய கடற்படை ஏறுவதற்கு அனுமதிப்பது அரிதான ஒரு நிகழ்வு என ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சின் கடல்சார் அதிகாரிகள் பணியகத்தின் பொதுசன தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இலங்கைக் கடற்படையினரை ககாவில் ஏற்றி பயிற்சிகளை அளித்தமையானது இலங்கைக் கடற்படைக்கு ஜப்பான் அளித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. அதைவிட இன்னொரு விடயம் ஜப்பானியக் கப்பலான ககாவில் அமெரிக்க கடற்படையின் அதிகாரிகளும் இணைந்தே பயிற்சிகளை அளித்திருந்தனர் என்பதாகும்.

இது குறித்து செய்தி வெளியிட்ட ஜப்பானிய ஊடகம் ஒன்று பிராந்தியத்தில் சீனாவின் கடல்சார் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் வெளிப்படையாக சீனாவுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கும் நோக்கம் ஜப்பானுக்கு இருக்கிறது என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பின்னர் ஜப்பானின் ககா மற்றும் இனாசுமா ஆகிய போர்க்கப்பல்கள் இந்தியாவின் விசாகப் பட்டினம் துறைமுகத்தை கடந்த 7ம் திகதி சென்றடைந்தன. JIMEX 18 என அழைக்கப்படும் ஜப்பான் இந்திய கடல்சார் பயிற்சி என்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கவே அந்தக் கப்பல்கள் அங்கு சென்றிருந்தன.

எட்டு நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டுப் பயிற்சி இன்று 15ம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி உள்ளிட்ட போர்க் கப்பல்களுடன் இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியை ஜப்பான் நடத்துகிறது.

முதல் நான்கு நாட்களும் துறைமுகப் பயிற்சி இறுதி நான்கு நாட்களும் கடலில் பயிற்சி இடம்பெறுகிறது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் முக்கியமாக கவனம் செலுத்தப்படுகின்ற விடயம், நீர்மூழ்கிகளை கண்டறிதல், கட்டுப்படுத்தல் தான்.

நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறையை உள்ளடக்கிய இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஆட்டிலறிச் சூட்டாதரவு, நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிரப்பு அச்சுறுத்தல்களின் போது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சி நடக்கின்ற காலத்தில் அதனை சீன நீர்மூழ்கிகளும் வேவு பார்த்துக் கொண்டிருந்தனவா என்ற கேள்வி உள்ளது.

ஏனென்றால் ஜப்பானிய போர்க் கப்பல்கள் கூட்டுப் பயிற்சிக்காக விசாகப்பட்டினத்தை சென்றடைந்த நாளில் தான் சீனாவின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலும் கொழும்பை விட்டுச் சென்றிருந்தது.

அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் நீர்மூழ்கி போர்முறை அல்லது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறையில் இலங்கையும் பங்காளியாகி வருகிறது என்பதை வெளிப்படுத்திய இன்னொரு சந்தர்ப்பம் இதுவாகும்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நீர்மூழ்கியை கொழும்புக்கு அனுமதித்த போதே அந்த வட்டத்துக்குள் இலங்கையும் வந்து விட்டது.

கடந்த ஜூலை மாத நடுப்பகுதியில் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர கற்கை நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்தார். அங்கு பிரதமர் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தோ – பசுபிக் பிராந்தியம் என அமெரிக்கா அறிமுகப்படுத்தியதை சீனா தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் தமது அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியாகவே சீனா இதனை கருதுகின்றது. ஆனால் அது அப்படி இல்லை என்பது முதலாவது விடயம்.

இரண்டாவது நீர்மூழ்கி கப்பல்களினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் குறித்து இலங்கை கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக இலங்கைக் கடற்படை சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் தேவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்பது.

நீர்மூழ்கி கப்பல்களால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் பற்றியும் அதனை எதிர்கொள்வதற்கு கடற்படையை தயார்படுத்துவது குறித்தும் பிரதமர் ரணில் குறிப்பிட்டிருந்தார். அவர் அதனைக் குறிப்பிட்ட போது பலருக்கும் ஆச்சரியம்.

ஆனால் இப்போதுள்ள நிலைவரங்களின் படி நீர்மூழ்கி போர்முறை ஆகிய இரண்டுக்கும் நடுவே சிக்கியுள்ள இலங்கை தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக களமிறங்க வேண்டிய நிலையிலும் உள்ளது.

அம்பாந்தோட்டையில் சீனா தளம் அமைப்பதை தடுப்பதற்காக காலியில் உள்ள இலங்கைக் கடற்படையின் தளத்தை அம்பாந்தோட்டைக்கு நகர்த்துவதை மாத்திரம் பாதுகாப்பு முன் நடவடிக்கையாக கருதிக்கொள்ள முடியாது.

காலியில் கடலோரக் காவல் படைத் தளத்தை அமைப்பது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைப் பலப்படுத்துவதுடன், இன்னொரு விடயத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

கடல் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானமான P-3C விமானத்தைக் கொள்வனவு செய்ய வேண்டும் என்பதே அது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த வகை விமானம் 1960ம் ஆண்டில் இருந்து அமெரிக்க கடற்படை ஜப்பானிய கடற்படை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படைகளில் பயன்பாட்டில் உள்ளது.

அமெரிக்கா இதுவரை 650 விமானங்களையும் ஜப்பான் 107 விமானங்களையும் தயாரித்திருக்கின்றன. நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறையில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.

அத்தகைய விமானத்தின் அவசியம் இலங்கைக்கு எதற்கு என்ற கேள்விகள் எழும்பலாம். அமெரிக்காவும் ஜப்பானும் தயாரிக்கும் இந்தவகை விமானங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

இலங்கையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்த்திறனை உயர்த்திக் கொள்வதன் மூலம் இந்த நாடுகளால் சீனாவின் நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இது அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் மாத்திரம் தேவையான ஒன்று அல்ல. இலங்கைக்கும் நீர்மூழ்கி ஆபத்து இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே கூறியிருக்கிறார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவத் தளமாக பயன்படுத்தப்படாது என்று தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருக்கும் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கும் இது தேவை.

-எழுத்தாளர் Subathra-

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net