யாழில் மகனைத் தாக்க வந்தவர்கள் தாயை கொலை செய்த கொடூரம்!
மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்று 8 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றது.
வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்துள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மகன் காயமடைந்துள்ளார்.
“ஞாயிற்றுக்கிழமை வீதியில் சென்ற என்னுடன் சிலர் முரண்பட்டுக்கொண்டனர்.
அவர்கள் மேலும் சிலருடன் 8 பேராக எனது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் வந்தனர்.
கையில் பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வந்த அவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
அவர்கள் என்னைத் தாக்குவதை அம்மா தடுத்தார். அப்போது அம்மாவின் தலையில் பொல்லு மற்றும் கம்பியால் தாக்கினர். அம்மா என் முன்னிலையில் துடிதுடித்து உயிரிழந்தார்” என்று மகன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.