யாழில், மதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி! இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்!
யாழ். ஏழாலை மகாவித்தியாலயத்துக்கு முன்னால் நேற்று மாலை ஐந்து மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னனி தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினரே குறித்த இளைஞர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏழாலை பகுதியில் மதுபோதையில் நின்ற பிரதேச சபை உறுப்பினர் தலைமையிலான குழுவினர் குறித்த இளைஞர்களை தொலைபேசி மூலம் ஏழாலை மகாவித்தியாலயத்துக்கு அண்மையில் வருமாறு அழைத்துள்ளனர்.
இதையடுத்து இரண்டு இளைஞர்களும் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இதன்போது பிரதேச சபை உறுப்பினர் தலைமையிலான குழுவினர் இரும்பு குழாய்களால் இரண்டு இளைஞர்களையும் தாக்கியுள்ளனர் என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்தவர்களை கிராமத்தவர்கள் மீட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், இத்தாக்குதலின்போது, ஏழாலை வடக்கைச் சேர்ந்த 25 வயதுடைய செல்வராசா அரவிந்தன் மற்றும் 19 வயதுடைய செல்வராசா சஜீவன் என்ற சகோதரர்களே காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பாக வைத்தியசாலைப் பொலிஸார் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன். இன்று சுன்னாகம் பொலிஸாரால் ஏழாலைப் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு ரோந்து நடந்து கொண்டிருந்த சமயமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.