இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை, கச்சதீவு கடற்பகுதியில் இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினர் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீனவர்கள் நேற்று (திங்கட்கிழமை) மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, இந்திய கடல் எல்லையையொட்டி காணப்படுகின்ற கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வேளை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், “தமிழக மீனவர்கள் இங்கு மீன் பிடிக்கக்கூடாது” என எச்சரிக்கை விடுத்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில்,

“எமது படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் தமது வலை, மீன்பிடி சாதனங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு, பிடித்திருந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர்.

ஆகையால் மீன்களை பிடிக்காமல் இடையிலேயே கரையை வந்தடைந்தோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Copyright © 4621 Mukadu · All rights reserved · designed by Speed IT net